Published:Updated:

`அது தன்னாட்சி அமைப்பு; நாங்கள் தலையிடுவதில்லை!' -டிஎன்பிஎஸ்சி முறைகேடு குறித்து முதல்வர் பழனிசாமி

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சென்னை மத்திய குற்றப்பிரிவு விசாரித்து, சேகரித்த உண்மைகள் அனைத்தும் சென்னை உயர் நீதிமன்றத்தின் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார், ஸ்டாலின்.

தமிழகத்தில், டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் தொடர்பாக சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர். தேர்வில் முறைகேடு செய்து, தேர்ச்சிபெற்றவர்கள், மோசடிக்கு உடந்தையாக இருந்தவர்கள், இடைத்தரகர்கள் எனப் பலர் இந்த விவகாரத்தில் அடுத்தடுத்து கைதுசெய்யப்படுகின்றனர். இதனால் முறைகேட்டில் தினம்தினம் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின்றன.

டிஎன்பிஎஸ்சி அலுவலகம்
டிஎன்பிஎஸ்சி அலுவலகம்

இந்நிலையில், 2016ல் குரூப் 1 தேர்வில் முறைகேடு நடந்ததாக அளிக்கப்பட்ட புகார் குறித்து முறையாக விசாரணை நடைபெறவில்லை என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார். சென்னை மத்திய குற்றப்பிரிவு விசாரித்து, சேகரித்த உண்மைகள் அனைத்தும் சென்னை உயர் நீதிமன்றத்தின் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளது தி.மு.க. இதற்கிடையே, தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்துவரும் நிலையில், இன்று டிஎன்பிஎஸ்சி தேர்வுகுறித்து பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது.

தி.மு.க எம்.எல்.ஏ சுதர்சனம், இதுதொடர்பாக அவையில் கேள்வி எழுப்பினார். இதற்கு, முதலில் அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார். அதில், ``2006 முதல் 2011 வரை நடந்த தி.மு.க ஆட்சிக்காலத்திலும் டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு நடந்துள்ளது. இதில் ஈடுபட்ட தி.மு.க-வினர் சிறை செல்வார்கள். முறைகேட்டுக்குத் துணையாக இருந்த டிஎன்பிஎஸ்சி ஊழியர்கள்மீது சிபிசிஐடி போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. நேர்மையாகத் தேர்வு எழுதியவர்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காகவே தேர்வு ரத்துசெய்யப்படவில்லை" என்றார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இதன்பின்னர், இதுதொடர்பாக முதல்வர் பழனிசாமி விளக்கம் கொடுத்தார். அதில், ``டிஎன்பிஎஸ்சி தேர்வு நடைபெற்ற இரண்டு மையங்களில் மட்டுமே முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தன்னாட்சிபெற்ற அமைப்பான டிஎன்பிஎஸ்சியின் அதிகாரத்தில் அரசு தலையிடுவதில்லை. தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். 2006 முதல் 2011 வரை தி.மு.க ஆட்சிக் காலத்திலும் டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு நடந்துள்ளது என அமைச்சர் கூறியுள்ளார்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு