Published:Updated:

`கொரோனா இல்லாத இடத்தில் ஃபீவர் கேம்ப்பா?' - கலெக்டர்கள் கூட்டத்தில் கொதித்த முதல்வர்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

மருத்துவர்கள், செவிலியர்கள் சரியான முறையில் சிகிச்சை அளித்ததால்தான் நோய்ப் பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு இறப்பு விகிதம் குறைந்திருக்கிறது. இதற்கு மாவட்ட ஆட்சியர்களின் செயல்பாடும் ஒரு காரணம்.

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்களுடன் நான்கு மணி நேரம் விவாதித்திருக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. `கொரோனா இல்லாத இடங்களில் ஃபீவர் கேம்ப் நடத்தி என்ன பயன்?' எனக் கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் முதல்வர்.

காணொலிக் கூட்டத்தில் அமைச்சர்கள்
காணொலிக் கூட்டத்தில் அமைச்சர்கள்

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதியிலிருந்து ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகக் கூடாது என்பதற்காகப் படிப்படியாக தளர்வுகளை அறிவித்துவருகிறது தமிழக அரசு. நாளை மறுநாளுடன் ஊரடங்குத் தேதி முடிவுக்கு வருவதால், மீண்டும் நீட்டிக்கப்படுவது குறித்து, மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிக் காட்சியில் விவாதித்தார் முதல்வர். இந்தக் கூட்டத்தில் மாவட்டவாரியாகத் தனித்தனியாக ஆய்வு நடத்தினார் முதல்வர். இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள் பலரும், தங்கள் மாவட்டத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்துள்ளனர்.

குறிப்பாக, `இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்வது சரியானதாக இருக்காது. அப்படிச் செய்தால், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியாது. அதேபோல், பொதுப் போக்குவரத்தை இன்னும் 15 நாள்களுக்கு அனுமதிக்காமல் இருப்பது நல்லது' என சில ஆட்சியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

3 நாள்களுக்கு முன்பு அழைப்பு; கொரோனா டெஸ்ட்! - தஞ்சையில் முதல்வரைச் சந்தித்த தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்

இதைத் தொடர்ந்து, சில ஆட்சியர்கள் தங்கள் மாவட்டங்களில் எவ்வளவு இடங்களில் `ஃபீவர் கேம்ப்' நடத்தப்படுகிறது, எத்தனை மக்களுக்குச் சோதனைகள் நடத்தப்படுகின்றன என்பதை விவரித்துள்ளனர். இந்தத் தகவலில் திருப்தியடையாத முதல்வர், ``நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்தபடியே இருக்கிறது. எந்த இடத்தில் கொரோனா அதிகமாக இருக்கிறதோ, அந்த இடத்தில் ஃபீவர் கேம்ப் நடத்துங்கள். அப்படிச் செய்தால்தான் காய்ச்சலை குணப்படுத்த முடியும்.

கொரோனா இல்லாத இடத்திலெல்லாம் கேம்ப் நடத்துவதால் எந்த பிரயோஜனமும் இல்லை. சேலம் மாவட்டத்தில் கொரோனா அதிகமாகிக்கொண்டே போகிறது. அந்த மாவட்டத்தில் இன்றைக்கு 437 என வந்துள்ளது. நம்முடைய அலுவலர்களை வைத்து எங்கெல்லாம் தொற்று அதிகமாக இருக்கிறதோ, அங்கெல்லாம் காய்ச்சல் முகாம் நடத்தினால்தான் தொற்று பரவுவதைக் குறைக்க முடியும்.

காணொலி கூட்டத்தில் அமைச்சர்கள்
காணொலி கூட்டத்தில் அமைச்சர்கள்

அப்படிச் செய்யாமல் முகாம் நடத்துவதால் எந்தப் பயனும் இல்லை. இன்றைக்கு கிராமங்களுக்குள் கொரோனா பரவிவிட்டது. காய்ச்சலும் அதிகமாகிக்கொண்டே போகிறது. நோய்ப் பரவலைத் தடுப்பதற்கு இன்னும் வேகமாக பரிசோதனைகளையும் முகாம்களையும் அதிகப்படுத்துங்கள்’’ எனக் கோபத்தை வெளிப்படுத்தியவர்,

`கொரோனா மரணங்களை மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை!' - முதல்வர் எடப்பாடி பழனிசாமி

``மருத்துவர்கள், செவிலியர்கள் சரியான முறையில் சிகிச்சை அளித்ததால்தான் நோய்ப் பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு இறப்பு விகிதம் குறைந்திருக்கிறது. இதற்கு மாவட்ட ஆட்சியர்களின் செயல்பாடும் ஒரு காரணம். பொதுமக்கள் ஒத்துழைத்தால்தான் நோய்ப் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும். அதுதான் ஒரே மருந்து. கொரோனாநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சத்தான, ருசியான உணவை வழங்க வேண்டும். இதை மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு நடத்தி உறுதி செய்ய வேண்டும’’ எனவும் அறிவுறுத்தினார்.

அடுத்த கட்டுரைக்கு