Published:Updated:

`ரஜினி மன்றத்துடன் நெருக்கம்; நிர்வாகிகளுக்கு வலை?'- முதல்வரைக் கொதிக்கவைத்த ராஜேந்திர பாலாஜி

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

ரஜினியின் பேச்சுக்குத் தொடர்ந்து ஆதரவு தெரிவித்துப் பேசிக்கொண்டிருந்ததோடு அவருடன் மறைமுக நட்பில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இந்த லிங்க் மூலம் இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``சர்ச்சையான கருத்துகளைப் பேசாதீர்கள் என்றாலும் கேட்க மறுக்கிறீர்கள். உங்களை யார் இயக்குவது எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. இனியும் இதேநிலை தொடர்ந்தால் கண்டிப்பாக உங்களது பதவி பறிக்கப்படும்" என்று சில நாள்களுக்கு முன்பு ராஜேந்திர பாலாஜியிடம் கோபத்தை வெளிப்படுத்தியிருந்தார் முதல்வர்.

 எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அண்மைக்காலமாக சர்ச்சை கருத்துகளுக்குச் சொந்தக்காரராக வலம் வந்தவர் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. அவரது பேச்சுகள் அனைத்தும் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தின. முதல்வருக்கும் பல நேரங்களில் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியதோடு, அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் பலமுறை கோரிக்கைகள் வைத்த சம்பவங்களும் நடந்தன. ஆனாலும், அவர் மீது ஆட்சிரீதியாகவோ அல்லது கட்சிரீதியாகவோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட்டதில்லை.

இந்நிலையில், நேற்று அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட அறிவிப்பில், `விருதுநகர் மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்' எனக் குறிப்பிட்டிருந்தனர்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

இதன் பின்னணி குறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர், `` பெரியார் குறித்த ரஜினியின் பேச்சுக்குப் பதில் கொடுத்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, `அவர் தவறாக ஒன்றும் சொல்லவில்லையே. நடந்த உண்மையைத்தானே சொல்லியிருக்கிறார். இதில் தவறு என்ன இருக்கிறது.?' எனப் பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்தது.

அதைத்தொடர்ந்து திருச்சி பா.ஜ.க பிரமுகர் விஜயரகு கொலை வழக்கில், ``இஸ்லாமியப் பயங்கரவாதத்தைக் கையில் பிடித்துக்கொண்டு போய்க் கொண்டிருக்கிறார்கள். இப்படியே இந்துக்களைக் கொல்லும் வேலையைத் தொடர்ந்தார்கள் என்றால், பிரச்னை வேறுவிதமாகச் செல்லும். மேலும், இந்துக்களைக் கொல்லும் இயக்கத்துக்கு தி.மு.க துணை போனால், இந்து பயங்கரவாதம் உருவாவதைத் தடுக்க முடியாது" என்றார்.

இதைத் தொடர்ந்து, ``இஸ்லாமியர்கள் வாழக்கூடிய தெருக்களில் முன்பெல்லாம் அ.தி.மு.க-வுக்குப் பாதிக்குப்பாதி ஓட்டு விழுந்தது. இப்போது பத்து ஓட்டுகூட கிடைப்பதில்லை' என பா.ஜ.க-வினருக்கு ஆதரவாகவும் தி.மு.க-வைக் கடுமையாக விமர்சனம் செய்தும் பேசினார்.

`சர்ச்சை ட்வீட்; 2 மணி நேரத்தில் நடவடிக்கை!’ - ராஜேந்திர பாலாஜி கட்சிப் பதவி பறிப்பின் பின்னணி

இதனால் கோபத்தின் உச்சிக்குப்போன தி.மு.க, அவரைக் கைது செய்ய வேண்டும் என்று ஆளுநரிடம் மனு அளித்தனர். அதைத் தொடர்ந்து பா.ஜ.க முக்கிய நிர்வாகிகள் எந்த கருத்துகளைத் தெரிவித்தாலும் வரிந்துகட்டிக்கொண்டு முதல் ஆளாக அதை ஆதரித்துப் பேசுவதோடு பிரச்னைகளிலும் சிக்குவதையும் தொடர் கதையாக வைத்திருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முதல்வர் நேரடியாக அழைத்து எச்சரித்ததும், `துறை சார்ந்த கேள்விகளை மட்டும் என்னிடம் கேளுங்கள். அரசியல் பற்றிய கேள்விகளை எல்லாம் என்னிடம் கேட்காதீர்கள். தலைமை அதைப்பற்றிப் பேசக்கூடாது என்று கடுமையான உத்தரவைப் போட்டிருக்கிறது' என்றார். அதைத் தொடர்ந்து சில காலம் அமைதியாக இருந்தவர், மீண்டும் பத்திரிகையாளரைத் தாக்கிய விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கினார்.

இந்த வழக்கை விசாரிப்பதில் போலீஸ் அலட்சியம் காட்டுவதால், சி.பி.ஐ விசாரிக்கவேண்டும் என்று எம்.பி மாணிக்கம் தாகூர் நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறார். இது அ.தி.மு.க தலைமைக்குப் பெரும் குடைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போதும், `இந்துக்களின் மத வழிபாட்டு நம்பிக்கைகளையும் இயற்கையான வழிபாடுகளையும் கிண்டல் செய்த போலி போராளிகளுக்கு இன்று நாட்டில் நடக்கக் கூடிய சம்பவம் ஒரு பாடம். ஒரு படிப்பினை' ட்விட்டரில் பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார்" என விவரித்தவர்கள்,

”ராஜேந்திர பாலாஜி பதவியைப் பறித்தது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல தாமதமான செயல்தான். அவரை முதல்வர் பலமுறை எச்சரித்துக்கொண்டே இருந்தார். அவர் கேட்டபாடில்லை. ரஜினியின் பேச்சுக்குத் தொடர்ந்து ஆதரவு தெரிவித்துப் பேசிக்கொண்டிருந்ததோடு அவருடன் மறைமுக நட்பில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ரஜினி கட்சி ஆரம்பித்தால் அ.தி.மு.க-வில் உள்ள முக்கிய நிர்வாகிகளைச் சேர்க்கவும் சில முயற்சிகள் நடந்து வந்ததாகவும் கூறுகின்றனர்.

முதல்வர் பழனிசாமி
முதல்வர் பழனிசாமி

இது குறித்து முக்கிய அமைச்சர் ஒருவர் முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்றார். இதன் பின்னணியில்தான் கட்சிப் பணியிலிருந்து ராஜேந்திர பாலாஜி நீக்கப்பட்டார்" என்கின்றனர் விரிவாக.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு