Published:Updated:

`CAA விஷயத்தில் அவசரப்பட்டுவிட்டோம்!' எடப்பாடி பழனிசாமி யோசனையும் மத்திய அரசின் முட்டுக்கட்டையும்

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

மார்ச் 9-ம் தேதி தமிழக சட்டமன்றம் கூடுகிறது. அப்போது என்.ஆர்.சி மற்றும் என்.பி.ஆர் ஆகிய இரண்டுக்கும் எதிராக தீர்மானம் நிறைவேற்றலாமா என்று எடப்பாடி ஆலோசனை செய்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்துவருகின்றன. தமிழகத்திலும் அந்தப் போராட்டம் தொடர்ந்துவருகிறது. இந்நிலையில் சிஏஏ-வுக்கு ஆதரவாக அ.தி.மு.க செயல்பட்டதால் அந்தக் கட்சிக்குத் தமிழகத்தில் ஏற்பட்ட எதிர்ப்பை பார்த்து அடுத்தகட்ட அதிரடிக்கு எடப்பாடி தயாராகிவிட்டார் என்கிற தகவல்கள் இப்போது வெளிவர ஆரம்பித்துள்ளன.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

சிஏபி என்று அழைக்கப்படும் குடியுரிமைத் திருத்தச் சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தபோது அதை காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. ஆனால், மக்களவையில் பிஜேபி அரசுக்கு இருந்த அதீதப் பெரும்பான்மையால் அங்கு சட்டத்திருத்தத்தை நிறைவேற்றியது. ஆனால், மாநிலங்களவையில் போதிய பெரும்பான்மை இல்லாதபோதும் அ.தி.மு.க மற்றும் பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் ஆதரவாக வாக்களித்ததால் அந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக அ.தி.மு.க வாக்களித்ததும் தமிழகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் அ.தி.மு.க வுக்கு எதிராகக் கொந்தளித்தனர். தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டங்களையும் நடத்தின. இந்தச் சட்டத்தை ஆதரித்தது தவறு, இதை எதிர்த்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று எடப்பாடியைச் சந்தித்து நேரடியாகக் கோரிக்கை வைத்தன இஸ்லாமிய அமைப்புகள். குடியுரிமை சட்டத் திருத்தத்தின் தொடர்ச்சியாக தேசிய மக்கள் தொகைப் பதிவேடு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றையும் அடுத்தடுத்து மத்திய அரசு செயல்படுத்த இருக்கிறது. இந்தச் சட்டங்களுக்கு எதிராக மேற்குவங்காளம், கேரளா, தெலங்கானா உள்ளிட்ட பல மாநிலங்கள் தங்கள் சட்டமன்றங்களில் தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டன.

வண்ணாரப்பேட்டை போராட்டத்தில்...
வண்ணாரப்பேட்டை போராட்டத்தில்...

ஒரு படி மேலாக மேற்கு வங்காளம் மற்றும் கேரளாவில் ஆளும் கட்சி என்.பி.ஆர் என்று சொல்லப்படும் தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டை தங்கள் மாநிலங்களில் செயல்படுத்தப் போவதில்லை என்று அறிவித்துள்ளது. தமிழகத்தில் சி.ஏ.ஏ-வுக்கு எதிராகத் தொடர்போராட்டம் ஒருபுறம் நடந்துவந்த நிலையில் சி.ஏ.ஏ-வினால் தமிழகத்தில் உள்ள எந்தச் சிறுபான்மையினருக்கும் ஆபத்து இல்லை என்று தொடர்ந்து சொல்லிவந்தார்கள் அ.தி.மு.க அமைச்சர்கள். அதே நேரம் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது சி.ஏ.ஏ-வுக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவரவேண்டும் என்று தி.மு.க கோரிக்கை வைத்தபோது அதை விவாதத்திற்குக் கூட எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டார் சபாநாயகர்.

இந்நிலையில் சி.ஏ.ஏ போராட்டம் வேறு வடிவத்தில் தமிழகத்தில் வளர ஆரம்பித்தது. குறிப்பாக வண்ணாரப்பேட்டையில் `சென்னை ஷாஹின் பாக்’ என்கிற பெயரில் பெண்கள் தொடங்கிய போராட்டத்தில் காவல்துறை நடத்திய தடியடி, ஆளும் கட்சிக்குக் கறையாக மாறியது. அதுகுறித்து சட்டமன்றத்தில் விளக்கமளித்த தமிழக முதல்வர் ஆர்ப்பாட்டக்கார்கள் கல் எறிந்ததாலே போலீஸார் தடியடி நடத்தினார்கள் என்று பதில் அளித்தார். இது ஆர்ப்பாட்டக்காரர்களை மேலும் உஷ்ணமாக்கியது. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் கடந்த பத்து நாள்களாக தொடர் போராட்டங்கள் நடந்துவருகின்றன.

தமிழக சட்டமன்றம்
தமிழக சட்டமன்றம்

இதுகுறித்து தமிழகத்தில் உள்ள மத்திய உளவுத்துறை அதிகாரிகள் டெல்லிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். தமிழகத்தில் மத்திய அரசுக்கு எதிராக நடக்கும் போராட்டத்தை அ.தி.மு.க அரசு ஒடுக்கத் தவறிவிட்டது என்று அதில் குறிப்பிட்டிருந்தனர். இந்தத் தகவல் அ.தி.மு.க தலைமைக்கும் தெரிந்தது. ஆனால், ஏற்கெனவே போராட்டத்தைத் ஒடுக்க காவல்துறையை அனுப்பி அதனால் ஏற்பட்ட சட்டச்சிக்கலை இனியும் சந்திக்க வேண்டாம். போராட்டக்காரர்களை அமைதியான பேச்சுவார்த்தை மூலமே கலைக்கலாம் என்று எடப்பாடி தெரிவித்துள்ளார். வண்ணாரப்பேட்டை போராட்டக்கார்கள் மூன்று முக்கியக் கோரிக்கைகளை வைக்கின்றனர். என்.பி.ஆர் என்று சொல்லப்படும் தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டில் சர்ச்சைக்குரிய ஆறு கேள்விகளை நீக்க வேண்டும், தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்த கூடாது, சி.ஏ.ஏ விற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என்பனவே அவை.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இரவு, முதல்வரை போராட்டக் குழு சந்தித்துப் பேசியது. அப்போது எங்கள் கோரிக்கையை முழுவதும் நீங்கள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என்று முதல்வரிடம் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளார்கள். அதேநேரம் சி.ஏ.ஏ விவகாரத்தில் அ.தி.மு.க அரசு கொடுத்த ஆதரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளும் கடும் விமர்சனம் செய்துவருகின்றன. அ.தி.மு.க அரசு இதற்கு பதில் அளித்தாலும் ஆளும்கட்சிக்கு இது மைனஸாகவே பார்க்கப்படுகிறது.

வண்ணாரப்பேட்டை போராட்டம்
வண்ணாரப்பேட்டை போராட்டம்

வட இந்தியப் பத்திரிகைகளில், வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் என்.ஆர்.சி, என்.பி.ஆர்-க்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் போடப்போவதாகச் செய்திகள் வந்துள்ளன. இதுகுறித்து அ.தி.மு.க வட்டாரத்தில் விசாரித்தால், ``முதல்வரின் மனநிலை அப்படித்தான் இருக்கிறது” என்கிறார்கள். தமிழக அரசு இப்போது பல்வேறு திட்டங்களை மக்களுக்கு அறிவித்துள்ளது. ஆனால், இந்த அரசின் மீது `பி.ஜே.பி-யின் அடிமை அரசு' என்கிற முத்திரை பலமாக இருக்கிறது. குறிப்பாக சி.ஏ.ஏ விவகாரத்தில் அ.தி.மு.க உறுப்பினர்கள் போட்ட ஓட்டுதான் சட்டம் நிறைவேறக் காரணம் என்கிற எதிர்க்கட்சிகளின் பிரசாரம் தமிழகம் முழுவதும் நன்கு எடுபட்டுள்ளது. இந்த விஷயத்தில் மத்திய அரசை நாம் ஆதரித்திருக்க வேண்டாம் என்று அமைச்சரவைக் கூட்டத்திலேயே சில அமைச்சர்கள் கருத்து தெரிவித்ததும் முதல்வரை யோசிக்கவைத்தது. அதன் தொடர்ச்சியாகவே சட்டமன்றத்தில் அமைச்சர் உதயகுமார், ``தேசிய குடிமக்கள் பதிவேட்டை தமிழகத்தில் கொண்டுவரும் திட்டமில்லை” என்று அறிவித்தார். இந்த விவகாரம் தொடர்ந்து வெடித்துக்கொண்டே இருக்கிறது.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மூத்த அமைச்சர்களிடம் முதல்வர் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது ``நாம் இந்த ஆட்சியில் எத்தனையோ நல்ல திட்டங்களை அறிமுகம் செய்திருந்தும் எனக்கு இப்போது கெட்டபெயரே உள்ளது. குறிப்பாக சி.ஏ.ஏ விஷயத்தில் நாம் அவசரப்பட்டுவிட்டோம். அந்தச் சட்டத்தை நாம் எதிர்த்து வாக்களித்திருந்தால் இன்று தமிழக மக்கள் என்னை ஹீரோவாகக் கொண்டாடியிருப்பார்கள். ஸ்டாலினும் அரசியல் செய்யமுடியாமல் போயிருக்கும். ஆனால் இப்போது பிரச்னை எல்லை மீறிப்போய்விட்டது. மத்திய அரசு பேச்சைக் கேட்டு போலீஸார் மூலம் போராட்டக்காரர்களை ஒடுக்கக்கூடாது” என்று சொல்லியிருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி `சீட்' கணக்கு, வண்ணாரப்பேட்டை `அலர்ட்', அஜித் தோவல் & அமித் ஷா கேம்... கழுகாரின் அரசியல் அப்டேட்ஸ்!

மேலும் மார்ச் 9-ம் தேதி தமிழக சட்டமன்றம் கூடுகிறது. அப்போது என்.ஆர்.சி மற்றும் என்.பி.ஆர் ஆகிய இரண்டுக்கும் எதிராக தீர்மானம் நிறைவேற்றலாமா என்று எடப்பாடி ஆலோசனை செய்துள்ளார். தீர்மானம் நிறைவேற்றினால் அதற்குப் பிறகு ஏற்படும் நெருக்கடிகள் பற்றியும் ஆலோசனை செய்திருக்கிறார். அதே நேரம் மத்திய அரசு தரப்பிலிருந்து இந்த விவகாரத்தில் எந்தத் தீர்மானத்தையும் நிறைவேற்றிவிட வேண்டாம் என்று அழுத்தம் கொடுத்துள்ளனர். தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான படிவங்கள் வரும் மார்ச் 15-ம் தேதி அச்சுக்கு அனுப்ப இருக்கிறார்கள். அதில் சர்ச்சைக்குரிய ஆறு கேள்விகளை நீக்க மத்திய அரசு தயாராக இல்லை. ஆனால், அந்தக் கேள்விகளை நீக்கவேண்டும் என்று தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றும் பட்சத்தில் அதற்கு எப்படி பதில் அளிப்பது என்கிற யோசனையும் மத்திய அரசிடம் உள்ளது.

முதல்வர் எடப்பாடி, சி.ஏ.ஏ-வுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் போனது போல என்.ஆர்.சி, என்.பி.ஆர் விஷயத்தில் அமைதியாக இருந்துவிட வேண்டாம் என்று மனநிலையில் இருக்கிறார். எனவே, தமிழகத்தில் என்.பி.ஆரை அனுமதிப்பது பற்றிப் பிறகு பார்த்துக்கொள்ளலாம், முதலில் சர்ச்சைக்குரிய கேள்விகள் எதுவும் அதில் இல்லாமல் 2010-ம் ஆண்டு கணக்கெடுப்பு நடத்தியது போன்றே இந்த ஆண்டும் நடத்த வேண்டும் என்கிற தீர்மானத்தைப் போட முடிவெடுத்துள்ளார்கள். இதன் மூலம் சிறுபான்மை மக்களிடம் தனது இமேஜைக் காப்பாற்றிக்கொள்ளலாம் என்ற முடிவில் இருக்கிறார் எடப்பாடி என்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு