Published:Updated:

`ஒழுங்காக இருக்கச் சொல்லுங்க.. இல்லைன்னா?!'- ராஜேந்திர பாலாஜி விவகாரத்தில் கடுகடுத்த முதல்வர்

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

முதல்வருக்குப் பிடிக்காமலிருந்த நிலையில் பத்திரிகையாளர் மீதான தாக்குதல் மேலும் அவருக்குக் கோபத்தை அதிகப்படுத்தியுள்ளது.

பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு இது போதாத காலமோ என்னவோ தெரியவில்லை. தொடர்ந்து பல சர்ச்சையான விஷயங்களில் சிக்கிக்கொள்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். இந்த நிலையில் இவரின் கருத்துகள் முதல்வருக்குப் பல நேரங்களில் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியிருப்பதோடு இதே நிலை தொடர்ந்தால் உங்களது பதவியைப் பறித்துவிடுவேன் என்று ஆவேசமாகவும் நடந்துகொண்டிருக்கிறார் முதல்வர்.

இந்த நிலையில் கொஞ்சம் காலம் அமைதியாக இருந்தவர், மீண்டும் விருதுநகரில் பத்திரிகையாளரைத் தாக்கிய விவகாரத்தில் சிக்க, எதிர்க்கட்சிகள் எல்லோரும் ஓர் அணியில் திரண்டு ஆளுங்கட்சிக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. கடுப்பான முதல்வர், ராஜேந்திர பாலாஜியை ஒழுங்காக நடக்கச் சொல்லுங்கள் என்று அமைச்சர்களிடம் கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறாராம்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி - ராஜவர்மன்
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி - ராஜவர்மன்

பெரியார் குறித்து ரஜினியின் பேச்சுக்குப் பதில் கொடுத்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சு பெரும் சர்ச்சையாக வெடித்தன. திருச்சியில் பா.ஜ.க பிரமுகர் விஜயரகு கொலை வழக்கு குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த ராஜேந்திர பாலாஜி, ``இஸ்லாமியப் பயங்கரவாதத்தைக் கையில் பிடித்துக்கொண்டு போய்க் கொண்டிருக்கிறார்கள். இப்படியே இந்துக்களைக் கொல்லும் வேலையைத் தொடர்ந்தார்கள் என்றால், பிரச்னை வேறுவிதமாகச் செல்லும்.

மேலும், இந்துக்களைக் கொல்லும் இயக்கத்துக்கு தி.மு.க துணை போனால், இந்து பயங்கரவாதம் உருவாவதைத் தடுக்க முடியாது" என்றார். அதைத் தொடர்ந்து, ``இஸ்லாமியர்கள் வாழக்கூடிய தெருக்களில் முன்பெல்லாம் அ.தி.மு.க-வுக்கு பாதிக்குப்பாதி ஓட்டு விழுந்தது. இப்போது பத்து ஓட்டுகூட கிடைப்பதில்லை. இளைஞர்களை மூளைச் சலவை செய்கிறார்கள். ஆயுதம் ஏந்தவைக்கிறார்கள்" என்று கூறி பரபரக்கவைத்தார்.

அவரது இந்தப் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் கண்டனம் எழுந்ததோடு, அவரைப் பதவிநீக்கம் செய்ய வேண்டுமெனக் கோரி தமிழக ஆளுநரிடம் தி.மு.க மனு அளித்துள்ளது. இவரின் பேச்சுக்கள் முதல்வருக்குப் பெரும் தலைவலியாக அமைந்தது. இந்த நிலையில் அவரை வரவைத்து `தொடர்ந்து நீங்கள் இப்படியே பேசிக்கொண்டிருந்தால், கண்டிப்பாக உங்களது பதவி பறிக்கப்படும்' என்று ராஜேந்திர பாலாஜியிடம் கண்டிப்புடன் சொல்லியிருந்தார் முதல்வர். அந்தக் கூட்டம் முடிந்தபின்பு நிருபர்கள் அவரைச் சுற்றிநின்று கேள்விகள் கேட்கத் தொடங்கினர். அதற்கு ராஜேந்திர பாலாஜி, ``என்னிடம் அரசியல் பற்றிக் கேட்காதீர்கள்.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

அரசியல் கருத்துகளைக் கூறவேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். எனவே, என்னை விட்டுவிடுங்கள். துறைரீதியாக வேண்டுமானால் கேள்வி கேளுங்கள்” என்று அமைதியாக இருந்தார். இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜியைப்பற்றி குமுதம் `ரிப்போர்ட்டர்' வார இதழ் ஒன்று வெளியிட்ட செய்தி காரணமாக அந்த இதழின் விருதுநகர் செய்தியாளரைக் கொலைவெறித் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இதனால் வெகுண்டெழுந்த பத்திரிகையாளர்கள் சென்னையில் போராட்டம் நடத்தியதுடன், அமைச்சருக்கு எதிராகக் கண்டனத்தையும் பதிவு செய்தார்கள்.

மேலும், மூத்த பத்திரிகையாளர்கள் சிலர் ராஜேந்திர பாலாஜியைப் பற்றி முதல்வர் தரப்பில் புகாரும் கூறியுள்ளனர். ஏற்கெனவே ராஜேந்திர பாலாஜியின் பேச்சும் செயல்பாடும் முதல்வருக்குப் பிடிக்காமலிருந்த நிலையில் பத்திரிகையாளர் மீதான தாக்குதல் மேலும் அவருக்குக் கோபத்தை அதிகப்படுத்தியுள்ளது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இந்த நிலையில் முதல்வர் ஜெயக்குமார், உதயகுமார், போன்றோரிடம், "ராஜேந்திர பாலாஜி ஏங்க இப்படி நடந்துகொள்கிறார். இவரால் எவ்வளவு பிரச்னையைத்தான் எதிர்கொள்வது என்று தெரியவில்லை. கடந்த முறை கூட சர்சையான விஷயங்களில் ஈடுபடமாட்டேன் என்று சொல்லியவர் பத்திரிகையாளர் விவகாரத்தில் சிக்கலாமா? அவரை ஒழுங்காக இருக்கச் சொல்லுங்கள். இல்லையேல் அவர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்று காட்டமாக அமைச்சர்களிடம் பேசியிருக்கிறார். அமைச்சர்களும் என்ன சொல்வது என்று தெரியாமல் விசாரிக்கிறோம் என்றிருக்கிறார்கள்" எனக் கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

அடுத்த கட்டுரைக்கு