நாகப்பட்டினம்: மும்மதத் தலைவர்களிடம் ஆசிபெற்ற எடப்பாடி பழனிசாமி!
நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆய்வுப் பணிக்காகச் சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி மும்மதத் தலைவர்களிடம் ஆசிபெற்றார்.
நிவர், புரெவி புயல்களால் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை பார்வையிட நேற்று ( டிசம்பர் 9 ) நாகப்பட்டினத்துக்கு வந்திருந்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி, இந்த விசிட்டை எல்லா மதங்களையும் சமமாகக் கருதும் ஆன்மிக அரசியல்வாதியாக தன்னைக் காட்டிக்கொள்ளவும் பயன்படுத்திக்கொண்டார். அதன்படி நாகூர் தர்கா, வேளாங்கண்ணி தேவாலயம், தருமபுரம் ஆதின மடம் ஆகிய மூன்று இடங்களுக்கும் சென்று தரிசனம் செய்து ஆசி பெற்றார்.
நேற்று காலையில் நாகூர் தர்கா வந்தடைந்த தமிழக முதல்வருக்கு, தர்கா நிர்வாகத்தின் சார்பாகவும், நாகூர் தர்காவின் பரம்பரை கலிபா மஸ்தான் சாஹிப் உள்ளிட்ட சாஹிபுமார்கள் சார்பாகவும் மங்கள வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து நாகூர் ஆண்டவர் சந்நிதிக்கு வந்த முதல்வருக்கு இஸ்லாமியர்கள் தொப்பி அணிவித்து, தர்கா பரம்பரை கலீபா மஸ்தான் சாஹிப் தலைமையில் துஆ ஓதப்பட்டது. தர்கா சார்பில் அவருக்கு நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது.
அதன் பிறகு மதியம் வேளாங்கண்ணி அன்னை ஆரோக்கிய மேரி மாதா தேவாலயத்துக்கு வருகை தந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, பேராலய அதிபர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து தேவாலயத்தில் நடந்த சிறப்புத் திருப்பலி பிரார்த்தனையில் கலந்துகொண்ட முதல்வருக்கு, மாதா சொரூபம் நினைவுப்பரிசாக பேராலய நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது.

மாலையில் தருமபுர ஆதீனம் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து அருளாசி பெற்றார். அப்போது குருமகாசந்நிதானம், பாதம் தொட்டு வணங்கிய முதல்வருக்கு ஐம்பொன்னாலான காமதேனு சிலை, பன்னிரு திருமுறைகள், திருக்குறள் புத்தகங்கள், முருகனின் திருவுருவப் படம் ஆகியவற்றை வழங்கி, ருத்ராட்ச மாலை அணிவித்து அருளாசி வழங்கினார்.
தொடர்ந்து புதிய மயிலாடுதுறை மாவட்டம் அமைய நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வருக்கு குருமகாசந்நிதானம் வாழ்த்துகளைத் தெரிவித்தார். அப்போது புதிய மயிலாடுதுறை மாவட்டத்துக்கு ஆட்சியரகம் உள்ளிட்ட நிர்வாகக் கட்டடங்கள் கட்டுவதற்கு நிலம் வழங்கிய குருமகாசந்நிதானத்துக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்தார்.

இப்படி ஒரே நாளில் மும்மதச் சமயப் பெரியோர்களைத் தரிசித்து, 'தான் எல்லா மதங்களையும் சமமாக பாவிக்கும் ஆன்மிக அரசியல்வாதி' என்று நாட்டு மக்களுக்கு மறைமுகமாக தெரிவித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.