Published:Updated:

`மத்திய அரசு கேட்ட நிதியைத் தரவில்லை!’- சேலத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி

முதல்வர் பழனிசாமி
முதல்வர் பழனிசாமி ( எம். விஜயகுமார் )

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா ஆய்வு கூட்டத்துக்குப் பிறகு முதல்வர் பேட்டி

``மத்திய அரசு தமிழக அரசு கேட்ட அளவுக்கு நிதி கொடுக்கவில்லை. என்றாலும், படிப்படியாக நிதி வழங்கி வருகிறது. கடந்த ஏப்ரல், மே மற்றும் மார்ச் மாதத்தில் தமிழகத்துக்கான ஜி.எஸ்.டி வருவாய் குறைந்துள்ளதால் 35,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். அதற்காகவே அரசு பல்வேறு கட்ட சிக்கன நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வளர்ச்சிப் பணிகள் எதுவும் குறைந்துவிடாமல் பார்த்துக்கொண்டு வருகிறோம். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என்பது எம்.ஜி.ஆரின் கனவுத் திட்டம்'' என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

முதல்ல்வர்
முதல்ல்வர்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலம் கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார்.

அவர் கூறுகையில், ``தமிழகத்தில் இதுவரை 3,67,939 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 14,853 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 7,524 பேர் பூரண குணமடைந்துள்ளனர். 98 பேர் மட்டும் உயிரிழந்தனர். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் அதிகமான கொரோனா பரிசோதனைகள் தமிழகத்தில் செய்துள்ளனர்.

தமிழகத்தில் அரசு சார்பில் 41 பரிசோதனை நிலையங்களும், தனியார் சார்பில் 26 பரிசோதனை நிலையங்களும் அமைக்கப்பட்டு நாளொன்றுக்கு 13,000 பேர் வரை கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. மருத்துவ நிபுணர் குழு பரிந்துரையின்படி படிப்படியாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்கள், செவிலியர்கள் சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் காவல்துறையினர், வருவாய்த்துறையினர் உள்ளிட்ட அனைத்து துறை ஊழியர்களும் இரவு பகல் பார்க்காமல் அர்ப்பணிப்பு உணர்வுடன் தொடர்ந்து செயல்பட்டு வருவதால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது.

சென்னையில் மக்கள் அடர்த்தி காரணமாகவே கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிறது. குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே பரவிவருவதைத் தடுக்கும் வகையில் அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு உள்ளது. கோடைக்காலம் என்பதால் தமிழகம் முழுவதும் குடிநீர் பிரச்னை ஏற்படாத வகையில் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

ஜூன் 12 அன்று மேட்டூர் அணை திறக்கப்படும். அதையொட்டி டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகள் துரிதப்படுத்த தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்குத் திறக்கப்படும் நீர் கடைமடை வரை தங்கு தடையின்றி சென்று சேரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் சுமார் 2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 1,000 ரூபாய் உதவித் தொகை மற்றும் விலையில்லா அரிசி வழங்கப்பட்டுள்ளது. 36 லட்சம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தலா 2,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.

பட்டியலின மக்களை விமர்சனம் செய்ததாக காவல் துறையில் புகார் பதிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் தி.மு.க-வைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டுள்ளார். இதில் அரசுக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை. அரசின் மீது அவதூறு பிரசாரம் செய்து அனுதாபத்தை தேடிக் கொள்ளும் வகையில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து இதுபோல தனது கட்சியைப் பிரபலப்படுத்த மக்கள் மத்தியில் அரசியல் நாடகமாடி வருகிறார். கொரோனா தடுப்புப் பணியில் அரசின் அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து இந்திய அளவில் தமிழகம் முதன்மை மாநிலமாக அனைத்து தரப்பினரும் பாராட்டி வரும் நிலையில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து குறை கூறி வருவது சரியில்லை.

முதல்வர்
முதல்வர்

மத்திய அரசு தமிழக அரசு கேட்ட அளவுக்கு நிதி கொடுக்கவில்லை. என்றாலும் படிப்படியாக நிதி வழங்கி வருகிறது. கடந்த ஏப்ரல், மே மற்றும் மார்ச் மாதத்தில் தமிழகத்துக்கான ஜி.எஸ்.டி வருவாய் குறைந்துள்ளதால் 35,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். அதற்காகவே அரசு பல்வேறு கட்ட சிக்கன நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வளர்ச்சிப் பணிகள் எதுவும் குறைந்துவிடாமல் பார்த்துக்கொண்டு வருகிறோம். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என்பது எம்.ஜி.ஆரின் கனவுத் திட்டம். அதை ஜெயலலிதா தொடர்ந்து செயல்படுத்தி வந்தார். தமிழகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவது தொடர்ந்து வழங்கப்படும். எக்காரணத்தைக் கொண்டும் இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட மாட்டாது'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு