Published:Updated:

`மத்திய அரசுக்கு நிதியைத் திருப்பி அனுப்பவில்லை!' - முதல்வர் எடப்பாடி பழனிசாமி

வீ கே.ரமேஷ்
VIJAYAKUMAR M

மத்திய அரசுக்கு நிதியைத் திருப்பி அனுப்பவில்லை; அது சேமிப்பில்தான் இருக்கும் என்பதை தெளிவுபடுத்தும் கடமை இந்த அரசுக்கு உள்ளது

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

ஏழை எளிய மாணவர்கள் சட்டம் படிப்பதற்குக் கடந்த ஆண்டு 3 சட்டக் கல்லூரிகளும், இந்த ஆண்டு 3 சட்டக் கல்லூரிகளும் தொடங்கப்பட்டன. சேலத்தில் வரும் 14ம் தேதிக்குள் அரசு புதிய சட்டக்கல்லூரி தொடங்கப்படும்.

பொருட்காட்சி
பொருட்காட்சி

சேலம் ஆடிப் பண்டிகையை முன்னிட்டு புதிய பேருந்து நிலையம் அருகே அரசு பொருட்காட்சியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் சங்கர், சேலம் கலெக்டர் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டார்கள்.

இந்நிகழ்ச்சியில் பேசிய செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, ``அண்ணன் சாமானிய மக்களுக்கும், ஏழை எளிய மக்களின் நிரந்தர முதல்வர். அம்மாவின் கனவையும், மக்களின் கனவையும் நிறைவேற்றிய முதல்வர். முதல்வர் பதவிக்கு இலக்கணமாக இருக்கக் கூடியவர். 2021ம் அ.தி.மு.க வெற்றி பெற்று அண்ணன் எடப்பாடி பழனிசாமியே முதல்வர் ஆவார்.

பொருட்காட்சி
பொருட்காட்சி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ``தமிழகத்தில் முதன் முதலாக 1978ம் ஆண்டு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அரசு பொருட்காட்சியை சேலத்தில் தொடங்கி வைத்தார். அவரின் தொண்டனாக வளர்ந்து இன்று முதல்வராகி அவர் திறந்து வைத்த பொருட்காட்சியை நான் திறந்து வைத்துள்ளேன். இது என் வாழ்நாளில் கிடைத்த மகிழ்ச்சி.

மக்கள் அதிகம் கூடும் போது அரசின் திட்டங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகப் பொருட்காட்சி தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் 15 துறைகளும் தற்போது 27 துறைகளும் பங்கேற்கின்றன. 204 பொருட்காட்சிகள் மூலம் 39 கோடி அரசுக்கு வருமானம் கிடைத்துள்ளது. இந்த இடத்தில் கூட 17.96 கோடியில் 11,571 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறோம். இந்த ஆட்சியில் எதுவும் செய்யவில்லை. என்று எதிர்க்கட்சியினர் சொல்லுகிறார்கள்.

பொருட்காட்சி
பொருட்காட்சி

இனி நாங்கள் செய்யப் போவதையும் சொல்லுகிறேன். சேலம் திருமணிமுத்தாறு தூய்மைப்படுத்துவதற்காக 4 இடங்களில் 263 கோடியில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும். மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் உபரி நீரை நீரேற்று முறையில் 100 ஏரிகளில் நிரப்ப ரூ.565 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. காவிரி கோதாவரி இணைப்பு திட்டம் கடும் முயற்சியில் நடந்து வருகிறது.

கங்கையை மத்திய அரசு தூய்மை செய்ததைப் போல காவிரி ஆற்றையும் தூய்மையாக்கி புனிதப்படுத்துவதாகப் பாரத பிரதமர் வாக்குறுதி கொடுத்திருக்கிறார். அதன்படி பவானி, தாமிரபரணி, வைகை ஆறுகளும் தூய்மைப்படுத்தப்படும். குடிமராமத்துப் பணிகள் மூலம் தமிழகத்தில் உள்ள ஏரிகள் தூர்வாரப்பட்டு வருகின்றன. ஏழை, எளிய மாணவர்கள் சட்டம் படிப்பதற்குக் கடந்த ஆண்டு 3 சட்டக் கல்லூரிகளும், இந்த ஆண்டு 3 சட்டக் கல்லூரிகளும் தொடங்கப்பட்டன. சேலத்தில் வரும் 14ம் தேதிக்குள் அரசு புதிய சட்டக்கல்லூரி தொடங்கப்படும்.

பொருட்காட்சி
பொருட்காட்சி
எம். விஜயகுமார்

தமிழகத்திலேயே முதன் முதலாகச் சேலத்தில் பஸ் போர்ட் அமைக்கப்படும். சேலத்தில் பாலங்கள் கட்டியதும், கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர்ப் பிரச்னை தீர்த்ததும் அம்மாவின் அரசு. மாநில அரசு நிதி ஒதுக்காததால் மத்திய அரசின் நிதியைப் பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பியதாகப் பொய்யான தகவல்களை சில பத்திரிகைகள் எழுதுகின்றன. மத்திய அரசுக்கு நிதியைத் திருப்பி அனுப்பவில்லை; அது சேமிப்பில்தான் இருக்கும் என்பதை தெளிவுபடுத்தும் கடமை இந்த அரசுக்கு உள்ளது'' என்றார்.