Published:Updated:

`பொய் பேசுவதற்காகவே நோபல் பரிசு கொடுக்கலாம்!’ - ஸ்டாலினை விமர்சித்த முதல்வர்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

`நீதிமன்றம் ஏழு பேருக்கு என்ன தண்டனை கொடுத்திருக்கிறதோ... அந்த தண்டனையை நடைமுறைப்படுத்தலாம் என்று தீர்மானம் நிறைவேற்றியது, கருணாநிதி தலைமையிலான அமைச்சரவை. அதை மறைத்து, முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கிறார் ஸ்டாலின்’’ என்று விமர்சித்திருக்கிறார், முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

திருப்பத்தூர் மாவட்டத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளிலும் பேசிய முதல்வர், ``பெண்களின் முன்னேற்றத்துக்காகத் தொடர்ந்து பாடுபடுகிறது, அ.தி.மு.க அரசு. ஸ்டாலின் சென்ற இடமெல்லாம் அவதூறு பிரசாரம் செய்கிறார். `இந்த ஆட்சியில் என்னென்ன குறைகள் இருக்கின்றன’ என்று மக்களிடம் கேட்கிறார். இந்தக் கேள்வியை உங்கள் தந்தை முதலமைச்சராக இருந்தபோது ஏன் கேட்கவில்லை? நாட்டு மக்களுக்காக தி.மு.க எதையும் செய்ததாக வரலாறே கிடையாது. வீட்டு மக்களுக்காக மட்டுமே செய்வார்கள். அ.தி.மு.க அரசாங்கம்தான் நாட்டு மக்களுக்காக நன்மை செய்கிறது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு வாரிசு கிடையாது. இங்கு கூடியிருக்கிற நாம்தான் வாரிசு. இரு பெரும் தலைவர்களும் தவ வாழ்க்கையை வாழ்ந்தார்கள்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

மத்தியில் 13 ஆண்டுக்காலம் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது தி.மு.க. வீட்டு மக்களுக்குப் பதவி வாங்கிக்கொடுக்க டெல்லிக்குப் போனார் கருணாநிதி. அதனால்தான் மக்கள் கருணாநிதியை மறந்துவிட்டனர். புரட்சித்தலைவரும் புரட்சித்தலைவியும் மறைந்தாலும், மக்களின் உள்ளத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். எந்தப் பிரச்னையாக இருந்தாலும், நலத்திட்ட உதவி கொடுக்க வேண்டுமென்றாலும் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதிக்கு மட்டும்தான் போவார். வேறு எந்தத் தொகுதிக்கும் நலத்திட்ட உதவிகளைக் கொடுத்த வரலாறே கிடையாது. ஏனெனில், அவர் வெற்றிபெற கொளத்தூர் தொகுதி வேண்டும். அப்படிப்பட்ட குறுகிய எண்ணம்கொண்ட கட்சி தி.மு.க. பரந்த எண்ணம்கொண்ட கட்சி அ.தி.மு.க. சாதி, மதத்தின் அடிப்படையில் சில கட்சிகள் வாக்குகள் பெற முயல்கின்றன.

அ.தி.மு.க-வைப் பொறுத்தமட்டில் எம்.ஜி.ஆர் தொடங்கி அம்மா காலம் வரை ஆட்சியிலும் கட்சியிலும் சாதி, மதம் பார்த்தது கிடையாது. ஆண் சாதி, பெண் சாதி என்றுதான் பார்க்கிறோம். இந்தியாவிலேயே சட்டம்-ஒழுங்கைப் பேணி காப்பதில் நம்பர் ஒன் மாநிலம் தமிழ்நாடு. இந்த மண்ணில் பிறந்த எந்த மதத்தைச் சார்ந்தவர்களுக்கும் இருபெரும் தலைவர்களின் வழியில் பாதுகாப்பைக் கொடுப்போம். `சிறுபான்மை மக்களுக்கு இந்த அரசாங்கத்தில் பாதுகாப்பு இல்லை’ என்று எதிர்க்கட்சிகள் தவறான பிரசாரம் செய்துவருகின்றன. நூற்றுக்கு நூறு சதவிகிதம் அது பொய். எம்.ஜி.ஆரும் அம்மாவும் எந்த வழியில் நடந்தார்களோ... அதே வழியில் நாங்களும் பயணிப்போம். சிறுபான்மை மக்களின் நலனுக்காக ஏராளமான திட்டங்களை வழங்கிக்கொண்டிருக்கிறோம். மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுத்திருக்கிறோம்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

இந்தியாவிலேயே சிறப்பான சாலை வசதிகள்கொண்ட மாநிலம் `தமிழ்நாடு’ என்ற பெருமையைப் பெற்றிருக்கிறோம். சாலை விபத்துகள் குறைக்கப்பட்டிருக்கின்றன. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையிலும் நம் மாநிலம் முன்னிலையில் இருக்கிறது. வேளாண் உற்பத்தியிலும் தமிழ்நாடு சாதனை படைத்திருக்கிறது. இப்படி அனைத்துத்துறைகளிலும் சாதனை படைத்து விருது பெற்றுக்கொண்டிருக்கிறோம். இதெல்லாம் எதிர்க்கட்சித் தலைவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவரின் ஆட்சியில் எந்தத் துறையும் சிறக்கவில்லை. மக்களுக்கும் நன்மை கிடைக்கவில்லை. அதனால், தேசிய அளவில் அவர்களது ஆட்சிக்கு விருதும் கொடுக்கப்படவில்லை. தி.மு.க ஆட்சியில் ஒரு குடும்பத்துக்காவது நூறு ரூபாய் கொடுத்திருப்பார்களா? ஏழை மக்கள் எப்போதெல்லாம் துன்பப்படுகிறார்களோ... அப்போதெல்லாம் நேசக்கரம் நீட்டக்கூடிய ஒரே அரசாங்கம் அம்மாவுடையது.

ஏழு பேர் விடுதலையைப் பற்றி ஸ்டாலின் தொடர்ந்து தவறான செய்தியைப் பரப்பிக்கொண்டிருக்கிறார். 2000-ம் ஆண்டில் தி.மு.க ஆட்சியில் இருந்தது. அன்றைய தினம் முதல்வராக இருந்தவர் கருணாநிதி. அப்போது, அவர் தலைமையில் கூடிய அமைச்சரவையில் துரைமுருகனும் இடம்பெற்றிருந்தார். ஏற்கெனவே நீதிமன்றம் ஏழு பேருக்கு என்ன தண்டனை கொடுத்திருக்கிறதோ... அந்தத் தண்டனையை நடைமுறைப்படுத்தலாம் என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள். இப்படியொரு தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டு இப்போது ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டுமென்று ஆளுநரிடம் மனு கொடுக்கிறார் ஸ்டாலின். வேடிக்கையாக இருக்கிறது. முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கிறார் ஸ்டாலின்.

இந்தியத் திருநாட்டிலேயே ஓர் அரசியல் கட்சித் தலைவருக்கு பொய் பேசுவதில் நோபல் பரிசு கொடுக்க வேண்டுமென்றால் அதற்குப் பொருத்தமானவர் ஸ்டாலின் மட்டும்தான். ஸ்டாலின் ஊர் ஊராகப் போய்க் குறைகளைக் கேட்கிறார். மனுக்களைப் பெட்டியில் போடச் சொல்கிறார். பெட்டியைப் பூட்டி சீல் வைத்து சாவியை வீட்டில் கொண்டு சென்று வைத்துக்கொள்வாராம். அவர் ஆட்சிக்கு வந்த பின்னர் பெட்டியைத் திறப்பாராம். இன்னும் நூறு வருடங்களுக்குப் பெட்டியைத் திறக்கவே முடியாது. `எனக்குப் பின்னால் நூறு ஆண்டுக்காலம் அ.தி.மு.க ஆட்சியை எவராலும் அசைக்க முடியாது’ என்று அம்மா அன்றைக்கே சொல்லிவிட்டார்.

பரப்புரை மேற்கொண்ட முதல்வர்
பரப்புரை மேற்கொண்ட முதல்வர்

இப்போது, நாங்கள் அடிக்கிற அடியில் பறந்து போய் திண்ணையில் உட்கார்ந்திருக்கிறார் ஸ்டாலின். கிராமங்களை அடையாளப்படுத்தியதே அ.தி.மு.க-தான். கிராமத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா ஸ்டாலின்? மந்திரியாக இருந்தபோதும், எம்.எல்.ஏ-வாக இருந்தபோதும் கிராமத்தைப் பார்த்தது கிடையாது. இப்போதாவது போய்ப் பாருங்கள். ஸ்டாலினிடம் கறவைப் பசு வேண்டுமென்று திருமலை என்ற ஆண் மனு கொடுக்கிறார். மனுவை வாங்கிப் படித்த ஸ்டாலின், `திருமலை சகோதரி எங்கே?’ என்று தேடுகிறார். திருமலை என்ற பெயர் ஆணுக்குத்தான் வைப்பார்கள். அதுகூட ஸ்டாலினுக்குத் தெரியவில்லை. அப்புறம், கறவைப் பசு கேட்டவரிடம், `காணாமல்போன கணவரைப் கண்டுப்பிடித்துத் தருகிறேன்’ என்று சொல்கிறார். நேராகக் கொடுக்கிற மனுவுக்கே இப்படியென்றால் பெட்டியில் போடுகிற மனுவின் நிலை எண்ணவாகும் பாருங்கள்.

நாடாளுமன்றத் தேர்தலின்போது என்ன நாடகத்தை அரங்கேற்றினாரோ... அதே நாடகத்தை சட்டமன்றத் தேர்தலிலும் செய்கிறார். மக்களை ஏமாற்றுகிற கட்சி தி.மு.க. பயிர்க்கடன் ரத்து செய்திருக்கிறோம். இதையெல்லாம் பாராட்ட ஸ்டாலினுக்கு மனமில்லை. பயிர்க்கடன் தள்ளுபடியால் அதிகமாகப் பயனடைந்திருப்பது, தி.மு.க-வினர்தான். ஸ்டாலின் இப்படியே பேசிக்கொண்டிருந்தால், தி.மு.க-வினரே அவருக்கு கறுப்புக்கொடி காட்ட ஆரம்பித்துவிடுகிறார்கள். `விவசாயிகளின் வாயில் விஷத்தை ஊற்றும் விஷக்கிருமி முதல்வர்’ என்று சிவகங்கைப் பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேசுகிறார். இப்படிப்பட்ட தலைவர் ஆட்சிக்கு வந்தால் நாடு தாங்குமா? `விளையும் பயிர் முளையிலேயே தெரியும்’ என்று கிராமத்தில் சொல்வார்கள். அ.தி.மு.க அரசு சிறப்பாக முளைத்து மக்களுக்கு நல்லது செய்கிறது. நல்ல விளைச்சலைத் தருகிறது. தீய சக்தி தி.மு.க-வினர் இப்படித்தான் பேசுவார்கள். அவர்களிடம் நல்ல வார்த்தை வராது’’ என்று காட்டமாகப் பரப்புரையை முடித்தார் முதல்வர்.

அடுத்த கட்டுரைக்கு