Published:Updated:

விருதுநகர்: `ஒருவரின் இறப்பில்தான் அரசியல் செய்ய வேண்டுமா?’ - கொந்தளித்த முதல்வர் பழனிசாமி!

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

``கொரோனாவாலும், நுரையீரல் பாதிப்பாலும் உயிரிழந்த மறைந்த முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணுவின் இறப்பில் சந்தேகம் இருக்கிறது என்கிறார் ஸ்டாலின். அரசியல் செய்ய எவ்வளவோ விஷயம் இருக்கும்போது ஒருவரின் இறப்பைவைத்து அரசியல் செய்வது நியாயமா?’’ எனக் கொந்தளித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கொரோனா தடுப்புப் பணிகள் மற்றும் நலத்திட்டங்கள் தொடங்கும் விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டார். ரூ.27.51 கோடி மதிப்பிலான 30 திட்டப் பணிகளை தொடங்கிவைத்தார். ரூ.11.35 கோடி மதிப்பிலான 15 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகளின் கீழ் 36 லட்சம் மதிப்பிலான 8,466 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஆய்வுக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி,

திட்டங்களைத் தொடங்கிவைத்த முதல்வர்
திட்டங்களைத் தொடங்கிவைத்த முதல்வர்

``கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு 40 சதவிகிதமாக இருந்த நுரையீரல் பாதிப்பு 90 சதவிகிதமாக அதிகரித்ததால், அதனால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவருக்கு காவேரி மருத்துவமனையில் உயர் சிகிச்சை அளிக்கப்பட்டது. `துரைக்கண்ணுவின் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது’ என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் எதைவைத்துக் குற்றம்சாட்டுகிறார்?

இறப்பில் மர்மம் இருக்கிறது என அவர் கூறியது கண்டிக்கத்தக்கது. வார்த்தையை ஸ்டாலின் கவனமாகக் கையாள வேண்டும். அரசியல் செய்வதற்கு எவ்வளவோ விஷயம் இருக்கும்போது துரைக்கண்ணுவின் மரணத்தில் அரசியல் செய்வது ஏற்புடையதல்ல. ஒருவரின் இறப்பை வைத்து அரசியல் செய்வது நியாயமா... ஸ்டாலினின் தந்தையார் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியும் அதே மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற்றார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

ஸ்டாலின் சொல்வதைப் பார்த்தால் அவரது தந்தையார் மரணத்தில் சந்தேம் இருக்கிறது என சொல்லத்தான் முடியுமா? கொரோனா காலத்தில் அரசு மேற்கொண்ட பணிகளைக் குறை சொல்கிறார். கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பம் முதல் தற்போதுவரை மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோர் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

கொரோனா பாதிப்பு தற்போது கட்டுக்குள் வந்திருப்பதும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததற்கும் காரணமே அவர்கள்தான். உண்மையான எதிர்க்கட்சித் தலைவராக இருந்தால், அவர்களின் பணிகளைப் பாராட்ட வேண்டும். அரசு ஊழியர்களைப் பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை. குறைசொல்லாமல் இருந்தால் போதும். ஸ்டாலின் மீது உச்ச நீதிமன்றத்தில் ஒரு தேர்தல் வழக்கு தொடங்கியிருக்கிறது.

நலத்திட்ட உதவி வழங்கல்
நலத்திட்ட உதவி வழங்கல்

அந்த வழக்கின் தீர்ப்பு அவருக்கு எதிராக அமைந்தால், அவரால் ஆறு ஆண்டுகளுக்குத் தேர்தலில் நிற்க முடியாது. எங்களின் திட்டங்களைக் குறைசொல்லி, விமர்சனம் செய்து மக்களிடம் வாக்குக் கேட்பதைவிட்டுவிட்டு, `நாங்கள் ஆட்சிக்கு வந்தால், இன்ன இன்ன திட்டங்களை நிறைவேற்றுவோம்’ எனச் சொல்லி வாக்குக் கேளுங்கள். எதிர்க்கட்சித் தலைவர் என்றால் எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்படுங்கள்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு