Published:Updated:

`அரசியல் ஆதாயம்; மக்கள் எள்ளி நகையாடுகிறார்கள்!’ - ஸ்டாலினை விமர்சித்த எடப்பாடி

ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி
ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி

7.5% உள் இட ஒதுக்கீடு விவகாரத்தில், `வெண்ணெய் திரண்டுவரும் நேரத்தில், தங்களால்தான் எல்லாம் நடந்தது என்ற மாயத் தோற்றத்தை உருவாக்கும் எண்ணத்துடன் ஸ்டாலின், ஆளுநருக்குக் கடிதம் எழுதுவது அரசியல் ஆதாயம் தேடும் செயல்' என முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருக்கிறார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவிகிதம் உள் இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் சட்ட முன்வடிவு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் ஆளுநரை நேரில் சந்தித்து தமிழக அமைச்சர்களும் பேசினார்கள். இந்தநிலையில், சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி, தி.மு.க தலைவர் ஸ்டாலின், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்குக் கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்துக்குப் பதிலளித்த ஆளுநர், சட்டரீதியான கருத்துகளைக் கேட்டுக்கொண்டிருப்பதாகவும், இதில் முடிவெடுக்க மூன்று முதல் நான்கு வார கால அவகாசம் தேவை என்றும் பதிலளித்திருந்தார்.

எடப்பாடி பழனிசாமி - ஸ்டாலின்
எடப்பாடி பழனிசாமி - ஸ்டாலின்

`இந்த விவகாரத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலினின் செயல்பாடு அரசியல் ஆதாயம் தேடும் செயல்’ என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், சட்டப்பேரவையில் சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டதையும், அது தொடர்பாக அமைச்சர்கள் ஆளுநரைச் சந்தித்ததையும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், ``தற்போதிருக்கும் மருத்துவப் படிப்பு இடங்களில், இந்த 7.5 சதவிகிதம் உள் இட ஒதுக்கீடு வழங்குவதால், ஏழை எளிய மாணவர்களுக்கு சமநீதி வழங்க இது வழிவகுக்கும் என்பதை உணர்ந்து மாண்புமிகு ஆளுநர் அவர்கள் இதற்கு விரைந்து ஒப்புதல் அளிப்பார் என்று உறுதியாக நம்புகிறேன்’’ என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டிருக்கிறார்.

நீட் தேர்வை அறிமுகப்படுத்தி, மாணவர்களுக்கு துரோகம் இழைத்தது தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள்தான் என்று குறிப்பிட்டிருக்கும் அவர், ஆளுநருக்கு அழுத்தம் தரவில்லை என்று கூறுவதற்கு அந்தக் கட்சிகளுக்கு எந்தத் தகுதியும் இல்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார். அதேபோல், `வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில், தங்களால்தான் எல்லாம் நடந்தது என்ற மாயத் தோற்றத்தை உருவாக்கும் எண்ணத்துடன் ஆளுநருக்குக் கடிதம், அறிக்கைகள் என எதிர்க்கட்சித் தலைவரின் நடவடிக்கை அரசியல் ஆதாயம் தேடும் செயல் மட்டுமே என நாட்டு மக்கள் அனைவருமே அறிவர்’’ என்று தி.மு.க தலைவர் ஸ்டாலினை எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருக்கிறார்.

`ஜெயலலிதா பாணியில் ஸ்டாலினுக்கும் தேர்தல் தடை!’- எடப்பாடி எடுத்த அஸ்திரம்

`கொரோனா தடுப்பூசி இலவசம்’ என்ற அறிவிப்பால் தமிழக அரசுக்கு மக்கள் ஆதரவு பெருகிவருகிறதே என்ற அச்சத்தில் வழக்கம்போல் ஸ்டாலின் அறிக்கை அரசியல் நடத்துவதாகவும், தமிழக மக்கள் அதைப் பார்த்து எள்ளி நகையாடுவதாகவும் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு