Published:Updated:

`மிகப்பெரிய வெற்றியாகக் கருதுகிறோம்!' - வேலூர் தேர்தல் குறித்து எடப்பாடி பழனிசாமி

தினேஷ் ராமையா
தே.அசோக்குமார்

வேலூர் தேர்தல் முடிவுகளை அ.தி.மு.க-வின் வெற்றியாகவே பார்ப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

வண்டலூர் உயிரியல் பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் எடப்பாடி பழனிசாமி இன்று கலந்துகொண்டார். அங்கு 3 சிங்கக் குட்டிகள், 4 புலிக்குட்டிகளுக்கு அவர் பெயர்சூட்டினார். சிங்கக் குட்டிகளுக்கு பிரதீப், தக்ஷனா மற்றும் நிரஞ்சனா என்று அவர் பெயர்சூட்டினார். புலிக்குட்டிகளுக்கு ரித்விக், யுகா, வெண்மதி மற்றும் மித்ரன் என்று பெயரிட்டார். அதேபோல், விரைவில் கொண்டுவரப்பட உள்ள காண்டாமிருகத்துக்காக, பூங்கா நிர்வாகம் தயார்படுத்தியிருக்கும் வளமைப்படுத்தப்பட்ட காண்டாமிருக இருப்பிடத்தையும் அவர் பார்வையாளர்களுக்குத் திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனும் முதலமைச்சருடன் கலந்துகொண்டார்.

வண்டலூர் உயிரியல் பூங்கா
வண்டலூர் உயிரியல் பூங்கா

நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, `நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலை நீங்கள் பார்க்க வேண்டும். இதுகுறித்துப் பேசிய தி.மு.க தலைவர் ஸ்டாலின், `பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் நாங்கள் வெற்றிபெற்றிருக்கிறோம். அதேபோல், தள்ளிவைக்கப்பட்ட வேலூர் தேர்தலிலும் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவோம்' என்று சொல்லியிருந்தார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

ஆனால், 8,141 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றிபெற்றிருக்கிறார்கள். வேலூர் மக்களவைத் தொகுதியில் 6 சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. அதில், 3 சட்டமன்றத் தொகுதிகளில் நாங்கள் அதிக வாக்குகள் பெற்றிருக்கிறோம். குடியாத்தம், கே.வி.குப்பம் மற்றும் அணைக்கட்டு என 3 சட்டமன்றத் தொகுதிகளிலும் எங்களுக்கு அதிக வாக்குகள் கிடைத்திருக்கின்றன. ஆகவே, இதை எங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகவே நான் கருதுகிறேன்'' என்றார்.

அப்போது, சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெற ஏதேனும் வியூகம் வைத்திருக்கிறீர்களா என்ற கேள்விக்கு, ``தமிழகத்தைப் பொறுத்தவரை சாதி, மதம், இனம் என்ற வேறுபாடு கிடையாது. இவை அனைத்துக்கும் அப்பாற்பட்ட மாநிலம் தமிழகம். இன்றைக்கு அமைதிப்பூங்காவாகத் திகழ்ந்துகொண்டிருக்கிறது. இங்கு சாதி, மதத்தின் அடிப்படையில் அரசியல் செய்ய முடியாது. ஆகவே, அனைத்து தரப்பு மக்களையும் நாங்கள் ஒரே கண்ணோட்டத்தோடு பார்க்கிறோம். உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் அ.தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் வெற்றிபெறுவார்கள். விரைவில் தேர்தல் வரும்'' என்றார்.

வேலூரில், குடியாத்தம், கே.வி.குப்பம் மற்றும் அணைக்கட்டு என 3 சட்டமன்றத் தொகுதிகளில் எங்களுக்கு அதிக வாக்குகள் கிடைத்திருக்கின்றன. ஆகவே, இதை எங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகவே நான் கருதுகிறேன்.
எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் பெய்துவரும் கனமழை மற்றும் அரசு மேற்கொண்டு வரும் மீட்புப் பணிகள்குறித்துப் பேசிய அவர், ``மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. நீலகிரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பேரிடர் மீட்புக் குழு உதவிவருகிறது. அப்படி மீட்கப்பட்டவர்கள், ஏறக்குறைய 5,500 பேர் பாதுகாப்பாக முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர். மேலும், 15,000-க்கும் மேற்பட்டவர்கள், அவர்களின் உறவினர்களின் வீடுகளுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள்'' என்றார்.