Published:Updated:

`விஷம' நரியிடமிருந்து தப்பிய ஆடுகள்! - ஒற்றுமையை வலியுறுத்த முதல்வர் பழனிசாமி சொன்ன `குட்டிக் கதை'

ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி விழா
ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி விழா ( உ.பாண்டி )

முதல் கட்டமாக ராமநாதபுரம் உள்ளிட்ட 6 இடங்களில் கல்லூரிக்கான கட்டடங்கள் அமைக்க தலா ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளோம். வரும் 2021-22 கல்வி ஆண்டு முதல் தலா 150 மாணவர்கள் சேர்க்கையுடன் புதிய மருத்துவக் கல்லூரிகள் செயல்படத் துவங்கும்.

`ஒற்றுமையாக வாழும் தமிழக மக்கள் இடையே பிரிவினையை ஏற்படுத்த சில கட்சிகள் முயல்கின்றன. அந்தப் பொய் பிரசாரத்துக்கு யாரும் செவிசாய்க்காமல் ஒற்றுமையாக வாழ வேண்டும்' என ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.

ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழா
ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழா

தமிழகத்தில் புதிதாக 11 இடங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இவற்றில் முதலாவதாக அமைக்கப்பட உள்ள புதிய மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா ராமநாதபுரத்தில் இன்று நடந்தது. மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன், துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோர் புதிய மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டினர்.

இதைத் தொடர்ந்து நடந்த விழாவில் உரையாற்றிய முதல்வர் பழனிசாமி, ``ஒரே ஆண்டில் மிகப்பெரும் சாதனையை நம்முடைய அரசு செய்திருக்கிறது. மிகக் குறுகிய காலத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை அமைக்க மத்திய அரசிடமிருந்து பலமுறை வற்புறுத்தி நாம் அனுமதி பெற்றிருக்கிறோம். இதில் முதல் கட்டமாக ராமநாதபுரம் உள்ளிட்ட 6 இடங்களில் கல்லூரிக்கான கட்டடங்கள் அமைக்க தலா ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளோம். வரும் 2021-22 கல்வி ஆண்டு முதல் தலா 150 மாணவர்கள் சேர்க்கையுடன் புதிய மருத்துவக் கல்லூரிகள் செயல்படத் துவங்கும். 11 மாவட்டங்களில் சுமார் 5,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 11 மருத்துவக் கல்லூரிகளை துவங்க மத்திய அரசின் அனுமதியைப் பெற்று அம்மாவின் அரசு சாதனை படைத்திருக்கிறது.

முதல்வர் எடப்பாடி பேச்சு.
முதல்வர் எடப்பாடி பேச்சு.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இஸ்லாமியர்களும் இந்துக்களும் கிறிஸ்துவர்களும் ஒற்றுமையாக வாழ்ந்து சமய நல்லிணக்கத்துக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக திகழ்கின்றனர்.`ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு; நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு'' என்றார் பாரதியார். இதைக் கூறும்போது எனக்கு கதை ஒன்று நினைவுக்கு வருகிறது.

ஒரு காட்டுக்கு அருகில் இருந்த ஊரில் இரு ஆடுகள் தோழமையுடன் வாழ்ந்து வந்தன. இந்த ஆடுகளின் ரத்தத்தை ருசி பார்க்க விரும்பிய ஒரு நரி, அந்த ஆடுகளை வேட்டையாட நோட்டம் பார்த்து வந்தது. ஒருநாள் அந்த ஆடுகளில் ஒன்று தனியாக இருப்பதைக் கண்ட நரி, அந்த ஆட்டிடம் சென்று, `நீயும் உன் நண்பனும் உணவு உண்ண, நீ ஒருவன் மட்டுமே கஷ்டப்படுகிறாய். மற்றொரு ஆடு உழைக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. இது உனக்கு கஷ்டமாக இல்லையா? என அந்த ஆட்டின் மனதில் விஷமத்தை உண்டாக்கியது. மற்றொரு நாள் இதேபோன்று மற்றொரு ஆட்டிடமும் கூறியது அந்த நரி.

ஒரு கட்டத்தில் ஆடுகள் இரண்டிடமும் இந்த எண்ணம் எழவே அவை சண்டையிட்டுக் கொண்டன. பின்னர் சோர்ந்து போய் ஓரமாக உட்கார்ந்தன. இந்நேரத்தில் அங்கு வந்த அந்த நரி, அங்கு சிந்திக்கிடந்த ஆட்டின் ரத்தத்தை ருசி பார்த்தது. இதைக் கண்ட ஆடுகள் இரண்டும் நரியின் விஷமத்தனத்தைப் புரிந்துகொண்டன. விழித்துக்கொண்ட ஆடுகள், இரண்டும் போலியாக சண்டையிட்டுக் கொண்டன. இந்தச் சண்டையை சமாதானம் செய்ய வந்ததுபோல் அங்கு வந்த நரியை இரு ஆடுகளும் சேர்ந்து முட்டித் தள்ளி விரட்டியடித்தன. இதன் மூலம் அந்த நரிக்கும் பாடம் புகட்டின.

அந்த நரியைப்போல சில கட்சிகள் ஒற்றுமையாக உள்ள மக்களைப் பிளவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. அந்த முயற்சிக்கு அம்மாவின் அரசு இடம் கொடுக்காது. மக்களும் அதற்கு செவிசாய்க்காமல் ஒற்றுமையாக வாழ வேண்டும்'' என்றார்.

விழாவில் பங்கேற்ற பெண்கள்
விழாவில் பங்கேற்ற பெண்கள்

விழாவில், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், அன்பழகன், சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.பி-க்கள் நவாஸ் கனி, ரவீந்திரநாத் குமார், எம்.எல்.ஏ-க்கள் மணிகண்டன், கருணாஸ், பாண்டி, சதன்பிரபாகர், முன்னாள் எம்.பி-க்கள் அன்வர் ராஜா, தம்பிதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்ட ஆட்சியர் வீர ராகவராவ் நன்றி கூறினார்.

அடுத்த கட்டுரைக்கு