Published:Updated:

தூத்துக்குடியில் முதல்வர் பழனிசாமி சொன்ன லாட்டரிசீட்டு கதை!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

`` 'செய்ய முடியாதவற்றைச் செய்வோம்' என மக்களிடம் வாய்ச்சொல் வாள் வீசியவர்கள், மக்களவைத் தேர்தலில் வென்றவர்கள். ஆனால், உள்ளாட்சித் தேர்தலில் தோற்றார்கள்” என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில், கல்வி, பத்திரிகை, விளையாட்டு ஆகியவற்றில் பல சேவைகள் புரிந்த சிவந்தி ஆதித்தனாருக்கு, தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் மணி மண்டபம் அமைக்கப்பட்டது. இந்த மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து அவர் பேசுகையில், தி.மு.க-வை சாடும் விதமாக ஒரு குட்டிக் கதை சொன்னார்.

மணிமண்டப திறப்புவிழாவில்  முதல்வர், அமைச்சர்கள்
மணிமண்டப திறப்புவிழாவில் முதல்வர், அமைச்சர்கள்

``ஒரு சிலர் போல், வாய்ச்சொல் வீரர்களாக நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளிக்காமல், சாத்தியமான திட்டங்களை மட்டுமே கூறி செய்துவருகிறோம். இதைக் கூறும் போது எனக்கு ஒரு கதை நினைவுக்குவருகிறது. மூன்று பேர் சேர்ந்து ஒரு லாட்டரிசீட்டு வாங்கினார்கள். பரிசு விழுந்தால் விழும் தொகையில் கடவுளுக்கு ஒரு பங்கு தருவதாக முடிவு செய்தனர். சில நாள்களில், அவர்கள் வாங்கிய சீட்டுக்கு பரிசும் விழுந்தது.

பணத்தை வாங்குவதற்கு முன்பு, மூன்று பேருக்கும் ஒரு யோசனை தோன்றியது. கடவுளுக்கு ஒரு பங்கு தருவோம் என்று சொன்னாமே, அப்படி தரக்கூடாது என முடிவு செய்தார்கள். அவசரப்பட்டு கடவுளுக்கு பங்கு தருவதாக சத்தியம் செய்து விட்டோமே... அதிலிருந்து எப்படி தப்பிப்பது என்ற எண்ணம் மூவரின் மனத்திலும் ஓடிக்கொண்டிருந்தது.

விழாவில் கலந்து கொண்ட அமைச்சர்கள்
விழாவில் கலந்து கொண்ட அமைச்சர்கள்

சரி, பங்குத்தொகை எவ்வளவு? எவ்வளவுதான் கொடுக்கலாம் என யோசித்தபோது, முதல்நபர் `தரையில் சிறிய வட்டம் வரைவோம். எல்லாப் பணத்தையும் நாணயங்களாக மாற்றி மேலே தூக்கி எறிவோம். சின்ன வட்டத்துக்குள் விழுவது கடவுளுக்கு” என்றான். இரண்டாவது நபர்,``கூடாது கூடாது. மிகப்பெரிய வட்டம் வரைவோம். நடுவில் நின்று கொண்டு மேல் நோக்கி எறிவோம். அந்த வட்டத்துக்கு வெளியே எவ்வளவு விழுகிறதோ, அது கடவுள் பங்கு” என்றான்.

`பெற்றோர் இல்லாத பெண் குழந்தைகளுக்கு ரூ.2 லட்சம்!' -பேரவையில் அறிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி

மூன்றாவது நபர், `சிறிய வட்டமும் வேண்டாம்; பெரிய வட்டமும் வேண்டாம். மேலே வீசி எறிவோம். மேலே நின்றுவிடும் பணம் கடவுளுக்கு. கீழே விழுகின்ற பணம் நமக்கு” என்றான். இவர்கள் மூவரிடமும் நல்ல குணம் இல்லாதது மட்டுமல்ல. கடவுளைவிட தாங்களே கெட்டிக்காரர்கள் என்ற ஆணவமும் இருந்தது. இவர்களைப் போன்ற சிலர், செய்ய முடியாதவற்றை எல்லாம் செய்வோம் என உண்மைக்கு மாறானவற்றை மக்களிடம் எடுத்துச்சொல்லி, நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றார்கள்.

திறப்பு விழா
திறப்பு விழா

ஆனால் அவர்கள், இந்த மூன்று நபர்களைப் போலவே சொன்னதைச் செய்யவில்லை. அதற்கு, வேறு வேறு விளக்கங்களைக் கொடுத்துவருகின்றனர். ஆனால், அவர்களைப் பற்றி நன்கறிந்த மக்கள், அவர்களுக்கு தக்க தண்டனையாக சமீபத்தில் நடந்த இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல்களில் தக்க பாடம் புகட்டியுள்ளார்கள். தொடர்ந்தும் அவர்களுக்கு இதே தண்டனையை வழங்கிக்கொண்டே இருப்பார்கள்” என்று லாட்டரி சீட்டு கதையைச் சொல்லி முடித்தார்.

அடுத்த கட்டுரைக்கு