Published:Updated:

நள்ளிரவு மீட்டிங்; எம்.எல்.ஏ கடத்தல்?- உச்சக்கட்ட பரபரப்பில் மகாராஷ்டிரா அரசியல்

மகாராஷ்டிரா முதல்வரும் துணை முதல்வரும் நேற்று இரவு தனியாகச் சந்தித்துப் பேசியுள்ள விவகாரம் கவனம் பெற்றுள்ளது.

அஜித் பவார்
அஜித் பவார்

மகாராஷ்டிராவில் கடந்த ஒரு மாதமாக நடந்துவரும் பல்வேறு அரசியல் குழப்பங்கள் சர்ச்சைகள் அனைத்துக்கும் இன்று முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அம்மாநிலத்தில் சிவசேனா தலைமையிலான ஆட்சி அமையும் எனக் கூறப்பட்ட நிலையில், யாரும் எதிர்பார்க்காத விதமாக பா.ஜ.க, என்.சி.பி-யுடன் கூட்டணி வைத்து பட்னாவிஸ் சத்தமில்லாமல் பதவியேற்றுக்கொண்டார்.

சரத் பவார்
சரத் பவார்
ANI

என்.சி.பி, பா.ஜ.க.வு-க்கு ஆதரவு அளிக்கவில்லை அது அஜித் பவாரின் தனிப்பட்ட முடிவு அதற்கும் எங்களும் எந்தத் தொடர்பும் இல்லை என சரத் பவார் தெரிவித்துள்ளார். பட்னாவிஸின் பதவியேற்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் சிவசேனா - காங்கிரஸ்- என்.சி.பி ஆகிய மூன்று கட்சிகள் இணைந்து வழக்குப் பதிவு செய்திருந்தன. அவசர மனுவாக நேற்று விசாரிக்கப்பட்ட அந்த வழக்கு இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அநேகமாக இன்று அல்லது நாளை மகாராஷ்டிராவில் பா.ஜ.க பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் - என்.சி.பி- சிவசேனா ஆகிய மூன்று கட்சிகளும் தங்கள் மொத்த எம்.எல்.ஏ-க்களையும் பல்வேறு இடங்களில் ஹோட்டல்களில் தங்கவைத்துள்ளனர்.

மகாராஷ்டிரா  எம்.எல்.ஏ
மகாராஷ்டிரா எம்.எல்.ஏ
ANI

இதற்கிடையில், ``நான் என்.சி.பி-யைச் சேர்ந்தவன், எப்போதும் என்.சி.பி-யிலேயே இருப்பேன். சரத்பவார்தான் என்னுடைய தலைவர். எங்கள் பா.ஜ.க - என்.சி.பி கூட்டணி அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மகாராஷ்டிராவில் நிலையான அரசு அமைத்து, மக்கள் நலம் மற்றும் மாநில வளர்ச்சிக்காக உண்மையாக உழைக்கும்” என அஜித் பவார் தன் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

`நள்ளிரவில் ஒப்புக்கொண்ட ஆளுநர்; அவசர பதவியேற்பு'- அமைச்சரவையை முன்வைத்து காங்கிரஸின் 10 கேள்விகள்!

இதற்குப் பதில் அளித்திருந்த சரத் பவார், ``தேசியவாத காங்கிரஸ், பா.ஜ.க-வுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. நாங்கள் சிவசேனா மற்றும் காங்கிரஸுடன் கூட்டணி வைப்பதாக ஒருமனதாக முடிவெடுத்துள்ளோம். அஜித் பவார் தற்போது கூறியுள்ள கருத்து மக்கள் மத்தியில் குழப்பத்தை விளைவிக்கும் வகையிலும், உண்மைக்குப் புறம்பாகவும் உள்ளது” என விமர்சித்துள்ளார்.

என்சி.பி நிர்வாகிகள்
என்சி.பி நிர்வாகிகள்
ANI

இந்த நிலையில், என்.சி.பி-யைச் சேர்ந்த 4 எம்.எல்.ஏ-க்கள் காணாமல் போனதாக கூறப்பட்டு வந்த நிலையில், அவர்கள் அனைவரையும் தனி விமானத்தில் பா.ஜ.க டெல்லி அழைத்துச் சென்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. தொடர்ந்து என்.சி.பி-யைச் சேர்ந்த மூத்த தலைவர் நவாப் மாலிக், டெல்லி சென்று அவர்களில் 2 எம்.எல்.ஏ-க்களை தன்னுடன் அழைத்து வந்துவிட்டதாகவும் தற்போது என்.சி.பிக்கு 52 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், ஒரு எம்.எல்.ஏ-வுடன் தான் தொடர்பில் இருப்பதாகவும் அவர் நாளை மும்பை வந்தடைவார் என்றும் தெரிவித்துள்ளார்.

இவை அனைத்துக்கும் நடுவில் நேற்று இரவு 10 மணிக்கு மேல் மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார், அம்மாநில முதல்வர் பட்னாவிஸை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இவர்களில் சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் நீடித்ததாக கூறப்படுகிறது. தங்கள் கூட்டணிக்குத் தேவையான ஆதரவு, உச்சநீதிமன்ற வழக்கு மற்றும் நம்பிக்கை வாக்கெடுப்பு ஆகியவற்றைப் பற்றி இவர்கள் விவாதித்திருக்கலாம் என அரசியல் வட்டாரத்தில் கூறப்பட்டு வருகிறது. ஆனால், தாங்கள் மகாராஷ்டிரா விவசாயிகள் மற்றும் நீர் பிரச்னை தொடர்பாக விவாதித்ததாக மகாராஷ்டிரா முதல்வரின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பட்னாவிஸ் - அஜித் பவார்
பட்னாவிஸ் - அஜித் பவார்
ANI

மகாராஷ்டிராவில் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவிவரும் நிலையில், இன்று நடக்கவுள்ள உச்சநீதிமன்ற வழக்கு அதிக கவனம் பெற்றுள்ளது. அதன் முடிவில் மகாராஷ்டிரா அரசில் பிரச்னைக்கு ஒரு தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.