முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், மாற்றுக்கட்சியினர் திமுக-வில் இணையும் நிகழ்ச்சி கோவை தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “ஒட்டுமொத்த இந்தியாவுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்துகொண்டிருக்கும் முதலமைச்சர், நாளை இந்திய தேசத்தை ஆளக்கூடிய பிரதமராக ஆட்சிப்பொறுப்பு ஏற்கவிருக்கிறார் “என்று சொல்லி தொடங்கிவைத்தார்.

அதேபோல மாற்றுக்கட்சி நிர்வாகிகளை இணைக்கும் பணியில் ஈடுபட்ட கோவை செல்வராஜ், “வேட்டி கட்டிய தமிழராக நீங்கள்தான் பிரதமராகப்போகிறீர்கள்.” என்று தன் பங்குக்கு பில்டப் கொடுத்தார்.
இறுதியாகப் பேசிய மு.க.ஸ்டாலின், “தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் அதிமுக-வினர் பேசுவதைப் பார்க்கும்போது ஆத்திரம் வரும். ஆனால், செல்வராஜ் பேசுவதைப் பார்க்கும்போது ஆத்திரம் வராது. அவர் உள்ளொன்று வைத்து, வெளியே ஒன்று பேச மாட்டார். சில சமயங்களில் அவர் நம்மைத் திட்டியிருக்கிறார். திட்ட திட்டத்தான் நாம் வைரமாக ஜொலித்துக்கொண்டிருக்கிறோம். 1949-ம் ஆண்டு அண்ணா கட்சியைத் தொடங்கியபோது ஆட்சிக்கு வந்தே தீர வேண்டும் என ஆரம்பிக்கவில்லை.

இப்போது திடீர் திடீரெனத் தொடங்கப்படும் கட்சிகள் அடுத்த நாளே, 'இனி எங்கள் ஆட்சிதான், அடுத்த முதலமைச்சர் நான்தான்' என்கிறார்கள். அப்படித் தோன்றிய கட்சிகள் அநாதைகளாக அலைந்துகொண்டிருப்பதைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். திமுக அப்படியல்ல.
1949-ம் தொடங்கிய கட்சி, 1957-ல் தான் தேர்தலில் போட்டியிட்டது. நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும். அதற்கு இன்றே களமிறங்கி வியூகங்கள் அமைத்து பணியாற்ற வேண்டும். மதம், சாதியைப் பயன்படுத்தி, கலவரத்தை ஏற்படுத்தி ஆட்சியைக் கவிழ்க்க முயற்சி நடக்கிறது. அதைப் பற்றிக் கவலைப்படாமல் நாடாளுமன்றத் தேர்தல் பணியாற்ற வேண்டும். 40-க்கு 40 தொகுதிகளிலும் வெல்ல வேண்டும்.

நாளும் நமதே, நாளையும் நமதே. மதச்சார்பற்ற கூட்டணி தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமுள்ள அனைத்து மாநிலங்களிலும் வெற்றிபெறும் முயற்சியில் முழுமையாக ஈடுபடப்போகிறோம்” என்றார்.