அரசியல்
அலசல்
Published:Updated:

ரஃப் கவர்னர்... டஃப் முதல்வர் - அதிரும் அரசியல் மாளிகை!

ஸ்டாலின், ரவி
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்டாலின், ரவி

ஆளுநர் ரவியைத் திரும்பப் பெறக் கோரி நாடாளுமன்றத்தில் தி.மு.க உறுப்பினர்கள் தனித் தீர்மானம் கொண்டுவர முயன்றது,

“ ‘நீட் மற்றும் கூட்டுறவுச் சங்க மசோதாக்களுக்கு எப்போது ஒப்புதல் கிடைக்கும்?’ எனக் கேட்டோம். அதற்கு ஆளுநர், ‘மசோதாக்கள் என்னுடைய பரிசீலனையில் இருக்கின்றன’ என்று மட்டும்தான் பதிலளித்தார். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் உத்தரவாதத்தையோ, கால வரையறையையோ அவர் குறிப்பிடவில்லை. ஆளுநரின் இந்த நடவடிக்கை, ஒட்டுமொத்தத் தமிழக மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலும், ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் வகையிலும், சட்டமன்றத்தின் மாண்பைக் குறைக்கும் வகையிலும் இருக்கிறது. இப்படியான சூழலில், ஆளுநர் தரும் தேநீர் விருந்தில் நாங்கள் கலந்துகொள்வது தமிழக மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் என்பதால் அதைப் புறக்கணிக்கிறோம்!” - ஏப்ரல் 14 அன்று ஆளுநரைச் சந்தித்துவிட்டு வந்த அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் மா.சுப்பிரமணியன் பேசிய வார்த்தைகள் இவை!

ஆளுநரைக் கண்டிக்கும்விதமான வார்த்தைகளோடு, தி.மு.க கூட்டணியிலிருக்கும் சி.பி.எம்., சி.பி.ஐ., விடுதலைச் சிறுத்தைகள், ம.ம.க ஆகிய கட்சிகள் முந்தைய நாளே ஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணித்திருந்த நிலையில், எதிர்பார்த்தபடியே தி.மு.க-வும் ஆளுநரின் விருந்தைப் புறக்கணித்து, தன் எதிர்ப்பைப் பதிவுசெய்திருக்கிறது. தி.மு.க அரசுக்கும், ஆளுநர் ரவிக்குமிடையே தொடர்ந்துவரும் மோதல், தற்போது அடுத்தகட்டத்துக்கு நகர்ந்திருக்கிறது. இதுவரை, மத்திய அரசுக்கு எதிராக ஐந்து தீர்மானங்களை தி.மு.க அரசு நிறைவேற்றியிருக்கிறது. மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானைச் சந்தித்து, தேசியக் கல்விக்கொள்கை குறித்து ஆளுநர் விவாதித்திருப்பது தி.மு.க தரப்பை உஷ்ணமாக்கியிருக்கிறது. உயர்கல்வித்துறையில் நடைபெற்ற ஊழல்கள் தொடர்பாக ஆளுநர் மாளிகை விசாரணையைத் துரிதப்படுத்த... துணைவேந்தர்களை நியமிக்கும் தீர்மானத்தை தி.மு.க கையிலெடுக்க... என இந்த உரசல் போக்கு நாளுக்கு நாள் உச்சத்தை நோக்கி நகர ஆரம்பித்திருக்கிறது!

ரஃப் கவர்னர்... டஃப் முதல்வர் - அதிரும் அரசியல் மாளிகை!

“சட்டத்தின்படிதான் நடக்கிறாரா ஆளுநர்?”

ஆளுநர் ரவியுடனான மோதல், இன்று ஆரம்பித்ததல்ல. அண்ணா பிறந்தநாளில் கைதிகளை விடுவிக்கும் விவாகரத்தில் தொடங்கி, நீட் விலக்கு தீர்மானத்தைக் கிடப்பில்போட்ட விவகாரத்தில் பற்றிக்கொண்டது. தி.மு.க ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது முதல், (நீட் தேர்வு (இரண்டு முறை), வேளாண் திருத்தச் சட்டம், மத்தியப் பல்கலைக்கழகங்களில் பொது நுழைவுத்தேர்வு, இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம்) மத்திய அரசுக்கு எதிராக ஐந்து தீர்மானங்களை சட்டமன்றத்தில் நிறைவேற்றியிருக்கிறது. ‘மத்திய அரசைச் சீண்டும் இந்தத் தீர்மானங்களையெல்லாம் ஆளுநர் மாளிகை ரசிக்கவில்லை’ என்கிறது ராஜ்பவன் வட்டாரம். அதேவேளையில், ‘ஆளுநர் மாளிகை ரசிக்கவில்லை என்பதற்காக, தமிழக மக்களுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைகளைச் சாமரம் வீசியா வரவேற்க முடியும்?’ என்று கொந்தளிக்கிறது தி.மு.க.

நம்மிடம் பேசிய சீனியர் அமைச்சர் ஒருவர், “ஆளுநர் ரவியைத் திரும்பப் பெறக் கோரி நாடாளுமன்றத்தில் தி.மு.க உறுப்பினர்கள் தனித் தீர்மானம் கொண்டுவர முயன்றது, அவரைத் தனிப்பட்டரீதியில் டென்ஷனாக்கியிருக்கிறது. ஆனால், அதற்கெல்லாம் நாங்கள் கவலைப்படப்போவதில்லை. இரண்டாவது முறையாகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட நீட் விலக்குத் தீர்மானத்தை ஜனாதிபதிக்கு அவர் இந்நேரம் அனுப்பியிருக்க வேண்டும். ஆனால், அவர் சட்டத்தின்படி நடக்கவில்லை. அதனால்தான், ஏப்ரல் 9-ம் தேதி கேரள மாநிலம், கண்ணூரில் நடந்த சி.பி.எம் கட்சியின் 23-வது மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் மிகத் தெளிவாக இது குறித்துப் பேசினார். ‘சட்டத்தின்படிதான் ஆளுநர் நடக்கிறாரா... நீட் மசோதா மட்டுமல்ல, மேலும் 11 மசோதாக்கள் ஆளுநர் ரவி வசம் கிடப்பில் உள்ளன. அதற்கெல்லாம் அவர் அனுமதி மறுப்பதற்கு என்ன காரணம்... எட்டுக் கோடி மக்களைவிட நியமன ஆளுநருக்கு அதிகாரம் வந்துவிடுகிறதா? இப்படி ஜனநாயகத்தை மரணிக்க வைப்பவர்களாக ஆளுநர்கள் நடந்துகொள்கிறார்கள்’ என்று சீறினார். அவரது சீற்றத்தில் என்ன தவறு?

“பதிலடி பலமாக இருக்கும்!”

ஏப்ரல் 8-ம் தேதி மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானைச் சந்தித்திருக்கும் ஆளுநர் ரவி, தேசிய கல்விக் கொள்கையைத் தமிழ்நாட்டில் அமல்படுத்துவது குறித்து விவாதித்திருக்கிறார். இவர் என்ன மக்கள் பிரதிநிதியா? மாநிலக் கல்விக் கொள்கை குறித்து ஓய்வுபெற்ற நீதியரசர் முருகேசன் தலைமையில் 12 பேர் கொண்ட குழுவைத் தமிழக அரசு அமைத்திருக்கும் வேளையில், தமிழ்நாட்டில் கல்விக்கொள்கை குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை ஆளுநருக்கு யார் கொடுத்தது... மாநில அரசின் அதிகார வரம்புக்குள் ஆளுநர் தலையிட முயன்றால், தி.மு.க அரசின் பதிலடி பலமாக இருக்கும். இதுவரை, எந்தத் தமிழ் வருடப்பிறப்பு தினத்தில் ராஜ்பவனுக்கு டீ பார்ட்டிக்கு அழைத்திருக்கிறார் கவர்னர்... தை முதல் நாளை நாங்கள் தமிழ் வருடப்பிறப்பு எனக் குறிப்பிடுவதை வம்புக்கு இழுக்கவே சித்திரை முதல் தேதியைத் தமிழ்ப் புத்தாண்டு எனக் குறிப்பிட்டு, அதைக் கொண்டாட தேநீர் விருந்துக்கு அழைக்கிறார் ஆளுநர். இதுகூடப் புரியாதா எங்களுக்கு?” என்றார் கோபமாக.

அயோத்தியா மண்டபமும்... ஆளுநர் அரசியலும்!

இந்தச் சூழலில்தான், சென்னை அயோத்தியா மண்டப விவகாரமும் வெடித்தது. இந்த மண்டபம் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுவதற்கு ஒரு வாரம் முன்னதாகத்தான் ஆளுநர் அங்கு சென்று வழிபட்டார். “தன்னை மட்டுமல்லாமல், தான் செல்லும் இடமெல்லாம் நோட்டமிட்டு தி.மு.க அரசு திருப்பி அடிக்கிறது என்பது ஆளுநருக்குப் புரியாமல் இல்லை. தன்னைக் கண்காணிப்பதற்காக மாநில உளவுத்துறையிலிருந்து சில அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டிருப்பதும் அவருக்குத் தெரியும். அதனால்தான், ஊட்டியில் நடந்த தன் மகள் திருமண நிகழ்ச்சியை மிக கவனமாக எந்தக் குற்றச்சாட்டும் எழாதவாறு நடத்தினார். தி.மு.க அரசுக்கு பதிலடி கொடுக்க அவரும் அரசியல் சாட்டையைக் கையிலெடுத்துவிட்டார்” என்கிறார்கள் ஆளுநருக்கு நெருக்கமானவர்கள். அதேசமயம், “அயோத்தியா மண்டப விவகாரம், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கை. அதைவைத்து மத அரசியல் செய்யப்பார்க்கிறார்கள்” என்கிறது தி.மு.க தரப்பு!

அயோத்யா மண்டபம்
அயோத்யா மண்டபம்

வேலை செய்யாத ஏ.சி., லிஃப்ட்... வியர்வையில் நனைந்த கவர்னர்!

பல்கலைக்கழகங்களில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்க, பிரசன்ன ராமசாமி என்பவரைத் துணைச் செயலாளர் பொறுப்பில் நியமித்திருக்கிறார் ஆளுநர் ரவி. இதுவரை 112 முறைகேடு புகார்கள் பிரசன்ன ராமசாமி வசம் வந்திருக்கும் நிலையில், அவற்றில் 73 புகார்கள் கால்நடைப் பல்கலைக்கழகம் தொடர்பானவை என்கிறது பவன் வட்டாரம். இந்தப் புகார்களையெல்லாம் தீவிரமாக விசாரிக்க உத்தரவிட்டிருக்கும் ஆளுநர், ‘கல்வியையே திராவிட ஆட்சிகள் நிர்மூலமாக்கிவிட்டன. அதைச் சீர்செய்ய வேண்டும்’ என்கிற முழக்கத்தோடு, தி.மு.க-வுக்கு எதிராகக் கல்வித்துறைப் பிரச்னைகளைக் கையிலெடுத்து அட்டாக் செய்யவிருக்கிறாராம்.

ஆளுநருக்கு நெருக்கமான சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடம் பேசினோம். “கல்வி என்பது அரசியலைமைப்பு விதியின்படி பொதுப்பட்டியலுக்குள் வருகிறது. தமிழகத்தின் உயர்கல்வி சார்ந்த கட்டமைப்புகள் மத்திய அரசின் நிதி உதவியோடுதான் நடக்கின்றன. இதைத்தான் ஆதார விஷயமாகக் கையிலெடுத்திருக்கிறார் ஆளுநர் ரவி. கடந்த மார்ச் 30-ம் தேதி, கால்நடைப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக வேப்பேரி கால்நடை கல்லூரிக்குச் சென்றிருந்தார். அவர் வருகைக்கு முன்பாகவே கல்லூரியிலிருந்த லிஃப்ட் வேலை செய்யவில்லை. இதனால் ஆளுநரின் புரோக்ராம் ஷெட்யூலில் மாற்றங்களைச் செய்ய வேண்டியதானது. பட்டமளிப்புவிழா மேடையில் ஆளுநர் அமர, அங்கிருந்த ஏ.சி-க்கள் அனைத்தும் வேலை செய்யவில்லை. வியர்வையில் நனைந்தபடியே ஒன்றரை மணி நேரம் பட்டங்களை வழங்கினார் ஆளுநர். அப்போதே கால்நடைத்துறைச் செயலாளரை அழைத்து ‘ஐ.சி.ஏ.ஆர்., ஐ.டி.ஜி., என்.ஏ.டி.பி என மத்திய அரசின் நிறுவனங்களிடமிருந்துதான் இந்தப் பல்கலைக்கழகங்களுக்கான பெருமளவு நிதி வருகிறது. அந்த நிதியைவைத்து என்ன செய்கிறீர்கள்... கல்லூரியை என்ன பராமரிக்கிறீர்கள்?’ என்று கடுகடுத்த ஆளுநர், கால்நடைப் பல்கலைக்கழக ஊழல் விவகாரங்களையெல்லாம் தீவிரமாகத் தோண்டச் சொல்லியிருக்கிறார்” என்றவர்கள், அந்த ஊழல் தொடர்பாகவும் நம்மிடம் விவரித்தனர்...

கால்நடைப் பல்கலைக்கழகத்தில் ஊழல்... கல்வித்துறையைக் கையிலெடுக்கும் ஆளுநர்!

“திருவள்ளூர் மாவட்டம், கொடுவள்ளியிலுள்ள பால் மற்றும் உணவுத்துறைக் கல்லூரியில், 14 கோடி ரூபாய் செலவில் கட்டடம் கட்டுவதற்கு டெண்டர் விடப்பட்டது. கட்டடம் கட்டப்படும் இடம் செம்மண் பூமி என்பதால், அந்த மண்ணை எடுப்பதற்கு முறைப்படி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவும் பெறப்படவில்லை. தவிர, கட்டடத்துக்காகத் தோண்டிய மண்ணை மீண்டும் கட்டடப் பணிகளுக்கே பயன்படுத்தி, அதிலும் போலியாக பில் போட்டுப் பணத்தைச் சுருட்டியிருக்கிறார்கள். ‘இந்தக் கட்டடப் பணியை எடுத்தது பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஒருவரின் பினாமி நிறுவனம்தான்’ என ஆளுநருக்குப் புகார் வந்திருக்கிறது. இது தொடர்பாக, தலைமைச் செயலாளர் இறையன்புவும் தனியாக ஒரு குழு அமைத்து விசாரணை நடத்திவருகிறார். ஐந்து கோடி ரூபாய்க்குக் கீழுள்ள டெண்டர்களை சிங்கிள் கவர் சிஸ்டம் மூலமாக ஆன்லைனிலேயே நடத்திவிடலாம். ஆனால், டெண்டர் எடுக்க நினைப்பவர்கள் பதிவாளரைப் பார்த்த பின்புதான் பணிகளை எடுக்க முடியும் என்கிற சூழல்தான் இந்தப் பல்கலையில் நிலவுகிறது.

சுமார் 20 கோடி ரூபாய் செலவில் மாதவரம் கால்நடைப் பல்கலைக்கழக வளாகத்தில் கட்டப்பட்ட கன்வென்ஷன் சென்டர், பயனற்ற நிலையில் இருக்கிறது. இந்த சென்டருக்குச் செல்வதற்கென சாலை வசதிகூட இல்லை. ஒவ்வொரு வருடமும் சுமார் 500 கோடி ரூபாயை மத்திய அரசு நிதியாக ஒதுக்கியும் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதில் கோட்டைவிட்டது யார் என்கிற விசாரணையைத் தீவிரமாக்கியிருக்கிறது ஆளுநர் மாளிகை. இந்த முறைகேடுகள் அ.தி.மு.க ஆட்சியிலிருந்தே நடைபெற்று வந்திருந்தாலும் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு மேலும் தீவிரமாகியிருக்கின்றன.

அண்ணா பல்கலைக்கழகத்துக்குள் நடைபெறும் கட்டுமானப் பணிகளை கடந்த அ.தி.மு.க ஆட்சியில் நாமக்கல்லைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட நிறுவனம்தான் டெண்டர் எடுத்துவந்தது. இதிலும் முறைகேடுகள் நடந்ததாகச் சர்ச்சைகள் வெடித்திருக்கின்றன. இந்நிலையில், தான் வேந்தராகப் பொறுப்பு வகிக்கும் எந்தப் பல்கலைக்கழகத்திலும் முறைகேடுகள் நடைபெறக் கூடாது என்பதில் தீவிரமாக இருக்கிறார் ஆளுநர். மத்தியக் கல்வித்துறை அமைச்சரைச் சந்தித்தபோது, அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்ச்சி விகிதம் சமீப ஆண்டுகளாகக் குறைந்திருப்பதைக் கவலையோடு குறிப்பிட்டிருக்கிறார் ஆளுநர். விரைவிலேயே உயர்கல்வித்துறையில் பல்வேறு அதிரடிகள் அரங்கேறப்போகின்றன. இது தமிழக அரசியலுக்குள் நிறைய புது பூகம்பங்களை ஏற்படுத்தும். அரசியல்ரீதியாகத் தன்னை தி.மு.க அட்டாக் செய்யும்போது, பதிலடியாகக் கல்வித்துறையை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தும் திட்டத்திலிருக்கிறார் ஆளுநர் ரவி” என்றனர் விரிவாக.

செந்தில் பாலாஜி, அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன், பொன்முடி
செந்தில் பாலாஜி, அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன், பொன்முடி

“மேற்கு வங்க ஸ்டைலில் பத்து மடங்கு பதிலடி...” அதிரும் அரசியல் மாளிகை!

தி.மு.க சீனியர் அமைச்சர் ஒருவர், “கல்வி மூலமாக ஆளுநர் ரவி மோத ஆரம்பித்திருப்பதை தி.மு.க அரசும் உணராமல் இல்லை. வழக்கமாக துணைவேந்தர் நியமனங்கள், மாநில உயர்கல்வித்துறையின் பரிந்துரையின் பேரில் நடைபெறும். ஆனால், ரவி ஆளுநராகப் பொறுப்பேற்ற பிறகு அவரது விருப்பத்தின்பேரில்தான் நடக்கின்றன. கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக, ராஜ்பவனில் இருந்தபடி தமிழக உயர்கல்வித்துறையை கவனித்துவந்தவர் துணைச் செயலாளர் முத்துக்குமார். அ.தி.மு.க ஆட்சியில் உயர்கல்வித்துறையின் அமைச்சராக இருந்த அன்பழகனுக்கு வேண்டப்பட்டவர். அவரை திடீரென காத்திருப்போர் பட்டியலுக்கு அனுப்பிவிட்டு, பிரசன்ன ராமசாமி என்பவரைப் புதிதாக நியமித்துக்கொண்டார் கவர்னர் ரவி. இப்படி இஷ்டத்துக்கு கவர்னர் அதிகாரத்தைக் கையிலெடுப்பதால்தான், ‘துணைவேந்தர்களை நியமிக்கும் முழு அதிகாரத்தையும் மாநில அரசே கையிலெடுக்கும்’ என அறிவித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இதற்கான தீர்மானம் விரைவிலேயே நிறைவேற்றப்படும். சமீபத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம் மனம்விட்டுப் பேசிய முதல்வர், ‘சுயமரியாதை, மாநில சுயாட்சி ஆகியவற்றில் ஊறிய இயக்கம் தி.மு.க. இது ஒன்றும் அ.தி.மு.க கிடையாது. மத்திய அரசுக்குச் சலாம் போடவேண்டிய அவசியம் நமக்கில்லை. மாநில அரசின் அதிகார வரம்புக்குள் ஆளுநர் தொடர்ந்து அத்துமீறினால், மேற்கு வங்க ஸ்டைலில் பத்து மடங்கு பதிலடி கொடுக்க நமக்குத் தெரியும். நீங்கள் துணைவேந்தர் நியமனம் தொடர்பான தீர்மானத்தைக் கொண்டுவரும் வேலையைத் துரிதப்படுத்துங்கள்’ என்றிருக்கிறார். ஆளுநர், மாநில அரசிடம் ரஃப்பான வகையில் நடக்க முயன்றால், அதற்கு டஃபான வகையில் பதிலடி கொடுக்கத் தயாராகிவிட்டார் முதல்வர்” என்றார்.

‘இந்த மோதலின் உச்சமாக, அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன், பொன்முடி ஆகியோர் மீதுள்ள அமலாக்கத்துறை வழக்குகளை வைத்து, அதன் மூலமாக தி.மு.க அரசுக்குக் குடைச்சல் கொடுக்கவும் தயாராகிவிட்டார் ஆளுநர்’ என்கிற தகவல்களும் கசிகின்றன. ‘ஸ்டாலின் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகளால் அதிர்ந்துபோயிருக்கிறது ஆளுநர் மாளிகை’ என தி.மு.க வட்டாரமும், ‘இல்லை. தி.மு.க அரசின் மீது அடுத்தடுத்து ஆளுநர் தொடுக்கும் கோப அஸ்திரங்களால்தான் அதிர்கிறது ஆளுநர் மாளிகை’ என கவர்னர் தரப்பும் பேச, அரசியலுக்கு அப்பாற்பட்டுச் செயல்படவேண்டிய ஆளுநர் மாளிகை, ‘அரசியல்’ மாளிகையாக மாறியிருக்கிறது!

தேனிலவுக் காலம் முடிந்து, தேநீர் விருந்தும் முறிந்து, பற்றியெரியத் தொடங்கியிருக்கிறது முதல்வர் - ஆளுநர் மோதல்!