Published:Updated:

`கல்விக் கடனுக்கு கல்தா... இலவச ஸ்மார்ட்போன்?’ - தி.மு.க-வுக்கு செக் வைக்கும் எடப்பாடி பட்ஜெட்!

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

`தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் விவசாயக்கடன் ரத்து செய்யப்படும்’ என்றார் ஸ்டாலின். ஆனால் தமிழக அரசு விவசாயக் கடனை ரத்து செய்து தி.மு.க-வுக்கு ஷாக் கொடுத்தது. அதேபோல் வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் தி.மு.க -வுக்கு அடுத்த ஷாக் கொடுக்க அ.தி.மு.க தயாராகிவருகிறது.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி வரும் மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. இதனால் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் தேர்தல் களத்தை எதிர்நோக்கி பல்வேறு வாக்குறுதிகளை வழங்கிவருகிறார்கள். வரும் சட்டமன்றத் தேர்தலலில் தி.மு.க ஆட்சியைக் கைப்பற்றும் வாய்பபு அதிகமாக இருப்பதாக மத்திய அரசுக்கும் நோட் சென்றிருக்கிறது.

ஆளுங்கட்சியான அ.தி.மு.க-வுடன் மத்தியில் ஆளும் பா.ஜ.க-வும் கூட்டணியை உறுதி செய்திருக்கிறது. மற்றொருபுறம் பாட்டாளி மக்கள் கட்சியை தங்கள் கூட்டணிக்குள்கொண்டு வந்து வடமாவட்டங்களில் அ.தி.மு.க-வின் செல்வாக்கை அதிகரித்துவிடலாம் என்று எடப்பாடி கணக்கு போட்டுவருகிறார். கூட்டணி பலம் என்பதைத் தாண்டி கவர்ச்சிகரமான அறிவிப்புகளே மக்களிடம் எளிதாக அ.தி.மு.க-வை கொண்டுசேர்க்கும் என அ.தி.மு.க-வுக்கு தேர்தல் வியூகத்தை வகுத்துவரும் சுனில் தலைமையிலான டீம் சொல்லியிருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி பரப்புரை
எடப்பாடி பழனிசாமி பரப்புரை

இதை முன்னிலைப்படுத்தியே பல்வேறு அறிவிப்புகளையும் திட்டங்களையும் எடப்பாடி அறிவித்துவருகிறார். குறிப்பாக, `தி.மு.க ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன்களை ரத்து செய்வோம்’ என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அடுத்த சில நாள்களிலிலேயே சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் தமிழக கூட்டுறவு வங்கிகளிலுள்ள 12ஆயிரம் கோடி ரூபாய் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டார்.

இது தி.மு.க தரப்புக்கு ஷாக்கை கொடுத்தது. ``நாங்கள் சொன்னதை எடப்பாடி செய்கிறார்” என்று தி.மு.க தரப்பிலிருந்து இதற்கு பதிலடி பிரசாரம் செய்யப்பட்டுவருகிறது. இந்தநிலையில், தற்போது ஸ்டாலின் தனது பிரசாரத்தில், `தி.மு.க ஆட்சிக்கு வந்தால் கல்விகடன்களை ரத்து செய்வோம்’ என்று அறிவித்திருக்கிறார். 2009-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி இப்படி ஒரு வாக்குறுதியை நாடாளுமன்றத் தேர்தலில் முன்வைத்து பெரும் வெற்றியைப் பெற்றது. அதே பாலிசியை தி.மு.க இப்போது கையில் எடுத்திருக்கிறது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

ஆனால், இதையும் காலி செய்யும் வேலையில் அ.தி.மு.க தரப்பு இறங்கியிருக்கிறது. வரும் பிப்ரவரி 22-ம் தேதி அன்று தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அதைத் தொடர்ந்து சில நாள்கள் சட்டமன்ற கூட்டத்தொடரும் நடக்கவிருக்கிறது. பட்ஜெட் கூட்டத்தொடரில் மாணவர்களின் கல்விக்கடன் ரத்து என்கிற அறிவிப்பை வெளியிடலாமா என்று அ.தி.மு.க தரப்பு தீவிரமாக ஆலோசனை நடத்திவருகிறது.

 `வெல்ல வியாபாரம் டு முதல்வர்'; `எமெர்ஜென்ஸி டு எதிர்க்கட்சித் தலைவர்' - பழனிசாமி Vs ஸ்டாலின்!

இதற்கான நிதி ஆதாரங்களை எந்த வகையில் பெறுவது என்று முதல்வர் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடம் அறிக்கை கேட்டிருக்கிறார். அதேபோல் மேலும் சில கவர்ச்சிகரமான அறிவிப்புகளையும் பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வரே அறிவிக்க திட்டமிட்டிருக்கிறார். குறிப்பாக, பாரத் நெட் என்கிற திட்டத்தில் அனைத்து கிராமங்களுக்கும் இணையவசிதியை ஏற்படுத்தும் வேலைகள் நடந்துவருகின்றன. இதை மனதில்வைத்து குடும்பத்துக்கு ஒரு ஸ்மார்ட்போன் வழங்கும் திட்டத்தை வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் அறிவித்துவிடுவார். ஆனால், அதைச் செயல்படுத்துவதில் சில சிக்கல்கள் இருக்கும் என்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

திட்டத்தை உடனடியாக அறிவித்தாலும், அதை செயல்படுத்துவதற்கு முன்பாகவே தேர்தல் தேதியைத் தேர்தல் ஆணையம் அறிவிக்கவிருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், தேர்தல் நடத்தை விதிப்படி அரசு வழங்கும் சலுகைகளை மக்களிடம் கொண்டு செல்ல முடியாது. ஆனால், அறிவிப்பை ஆளுங்கட்சி அறிவித்துவிட்டு அதையே தங்கள் கட்சிக்கு வாக்காக மாற்றிவிடலாம் என்று அ.தி.மு.க கணக்கு போடுகிறது. ஏற்கெனவே விவசாயக் கடன் ரத்து விவகாரத்தில் எடப்பாடி தரப்பு கோல் போட்டுவிட்டது. இப்போது கல்விக் கடன் விவகாரத்திலும் தி.மு.க-வின் அறிவிப்பையே அரசாணையாக வெளியிட்டால் அது தி.மு.க-வுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் என்கிற அச்சம் தி.மு.க தரப்பில் இருக்கிறது. இதைத் தவிர வாக்காளர்களைக் கவர இன்னும் பல அறிவிப்புகள் பட்ஜெட் கூட்டத்தொடரில் இருக்கப்போகின்றன என்று கண்சிமிட்டுகிறார்கள் அ.தி.மு.க-வினர்.

டாக்டருக்கு அல்வா கொடுக்கும் எடப்பாடி முதல் சசிகலாவின் தாய் வீட்டுச் சீதனம் வரை! -கழுகார் அப்டேட்ஸ்
அடுத்த கட்டுரைக்கு