Published:Updated:

`சசிகலாவை அ.தி.மு.க-வில் இணைக்க 100% வாய்ப்பில்லை!’-அமித் ஷா, மோடி சந்திப்புக்குப் பிறகு முதல்வர்

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

`முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை சசிகலா கட்சியிலேயே இல்லை. சசிகலாவுடன் இருந்தவர்கள் பலர் அ.தி.மு.க-வில் இணைந்துவிட்டனர்’ - முதல்வர் பழனிசாமி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாள்கள் சுற்றுப் பயணமாக டெல்லி சென்றிருக்கிறார். அவருடன் அமைச்சர் ஜெயக்குமார் சென்றிருக்கிறார். டெல்லியில் அ.தி.மு.க எம்.பி-க்கள் முதல்வரை வரவேற்றனர். இந்தநிலையில், நேற்று இரவு 7:30 மணிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இல்லத்துக்கு சென்று அவரை சந்தித்தார் பழனிசாமி. அப்போது தமிழக அரசியல் நிலவரம் குறித்து, இருவரும் பேசியதாகக் கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இந்தநிலையில், இன்று காலை முதல்வர், பிரதமர் மோடியை அவரின் இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி, ``புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்ட வேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கைவைத்தேன். வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழாவுக்கும் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தேன். கோரிக்கையை ஏற்று தமிழகம் வருவதாகத் தெரிவித்திருக்கிறார். இலங்கைக் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட படகுகளை மீட்கக் கோரி பிரதமரிடம் கோரிக்கை விடுத்தேன். தமிழக அரசின் கோரிக்கைகளைப் பரிசீலிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்” என்றார்.

தொடர்ந்து அமித் ஷா உடனான சந்திப்பு குறித்துப் பேசியவர், ``உள்துறை அமைச்சர் அமித் ஷா உடன் அரசியல் பேசவில்லை” என்றார்.

சசிகலா
சசிகலா

தற்போது தமிழக அரசியலில் சசிகலாவின் விடுதலை குறித்துதான் அதிகம் பேசப்படுகிறது. டெல்லி சென்ற முதல்வர் சசிகலா குறித்துப் பேசினார். ``முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை சசிகலா கட்சியிலேயே இல்லை. சசிகலாவுடன் இருந்தவர்கள் பலர் அ.தி.மு.க-வில் இணைந்துவிட்டனர். சசிகலா வருகையால் அ.தி.மு.க-வில் எந்த மாற்றமும் ஏற்படாது. சசிகலாவை அ.தி.மு.க-வில் இணைக்க 100 சதவிகிதம் வாய்ப்பில்லை” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு