2024-ல் நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டம் என்ற வகையிலும், தென்னிந்தியாவில் பா.ஜ.க ஆளும் ஒரே மாநிலம் என்ற வகையிலும் தேசிய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது கர்நாடக சட்டமன்றத் தேர்தல். அதற்கேற்றாற்போலவே பிரதமர், மத்திய அமைச்சர்கள் எனப் பெரும் பட்டாளத்தை இறக்கி தேர்தலைச் சந்தித்தது பா.ஜ.க. ஆனால், முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்காமலேயே, 40 சதவிகித கமிஷன் அரசு, ஹிஜாப் விவகாரம் உள்ளிட்ட பல பிரச்னைகளை முன்வைத்து களமிறங்கிய காங்கிரஸ், பா.ஜ.க-வின் அனைத்து யுக்திகளையும் தகர்த்து 135 இடங்களை வென்று தனிப்பெரும்பான்மையாக ஆட்சியைக் கைப்பற்றியது. பா.ஜ.க 66 இடங்களையும், ஜே.டி.எஸ் 19 இடங்களையும் மட்டுமே வென்றன.

தேர்தல் முடிவுகள் வெளியாகி ஐந்து நாள்கள் ஆன பின்னரே, கர்நாடக முதல்வர் யார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. கர்நாடகாவில் இதற்கு முன்னர் காங்கிரஸ் அமைத்த ஆட்சியை சித்தராமையா முழுமையாக நிர்வகித்தது, கடந்த முறை காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி கவிழ்ந்த பிறகு டி.கே.சிவக்குமார் கட்சியை வலுப்படுத்தி இந்தத் தேர்தலில் வெற்றியை மீட்டது என இருவருமே முக்கியமானவர்கள் என காங்கிரஸில் கடந்த ஐந்து நாள்களாக ஆலோசனை செய்துவந்தனர். இன்னொருபக்கம், ஒருவேளை முதல்வரை அவசரமாக அறிவித்த பின்னர், எங்கே கட்சிக்குள் கிளர்ச்சி எழுந்துவிடுமோ, அடுத்தாண்டு நடைபெறும் லோக் சபா தேர்தலில் கட்சிக்கு அது பாதிப்பை ஏற்படுத்துமோ என்று காங்கிரஸ் யோசிப்பதாகக் கூறப்படுகிறது.
அதேசமயம் காங்கிரஸில் `ஒருவருக்கு ஒரு பதவி' என்ற முறை என்பதன் அடிப்படையில் சிவக்குமார் முதல்வராவதற்குச் சின்ன தடை இருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது தற்போது கர்நாடக காங்கிரஸ் மாநிலத் தலைவராக இருக்கும் சிவக்குமார், `ஒருவருக்கு ஒரு பதவி' என்ற முறைப்படிப் பார்த்தால் ஒரே நேரத்தில் முதல்வராகவும், மாநிலத் தலைவராகவும் இருக்க முடியாது என்று சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவிக்கான தேர்தலில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் போட்டியிட முன்வந்தபோது, சச்சின் பைலட்டின் ஆதரவாளர்கள் இதே பிரச்னையைத்தான் எழுப்பினார்கள்.

தற்போது இந்த முதல்வர் ரேஸில் சித்தராமையா எதுவும் வாய் திறக்கவில்லையென்றாலும், சிவக்குமாரின் பேச்சுகள், கட்சி தனக்கு முதல்வர் பதவி கொடுக்கவில்லையென்றாலும் பரவாயில்லை என்றவாறே இருக்கிறது. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு ஊடகத்திடம் பேசிய சிவக்குமார், ``கட்சி விரும்பினால் எனக்குப் பொறுப்பு வழங்கட்டும். இங்கு யாரையும் நான் பிரிக்க விரும்பவில்லை. யாருடைய முதுகிலும் குத்த மாட்டேன்" எனக் கூறியிருந்தார். அதே நேரத்தில் காங்கிரஸ் தலைமையிடம், `துணை முதல்வராகப் பதவியேற்கத் தயார், ஆனால், தான் ஒருவர் மட்டுமே துணை முதல்வராக அறிவிக்கப்பட வேண்டும். மேலும், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராகவும் தொடர வேண்டும்' என்றும் கோரிக்கைவைத்தார்.
அதைத் தொடர்ந்து நேற்று கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோர் அடங்கிய காங்கிரஸ் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் சிவக்குமாரிடம் இரண்டு விருப்பங்கள் முன்வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதில் ஒன்று, தற்போது வகிக்கும் மாநிலத் தலைவர் பதவியுடன் துணை முதல்வர் பதவி மற்றும் தான் விரும்பும் ஆறு இலாகாக்கள். மற்றொன்று ஆட்சிப்பகிர்வு. ஆனால், இந்த முடிவு சிவக்குமாரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையில், காங்கிரஸின் முன்னாள் துணை முதல்வரும், பட்டியலின மக்களின் செல்வாக்குடையவருமான பரமேஸ்வரா, ``கட்சி விரும்பினால் நான் முதல்வர் பதவியை ஏற்கிறேன்" என்று கூறி சிறிய பரபரப்பை உண்டாக்கினார்.

ஆனால், அவரின் பேச்சை காங்கிரஸ் மேலிடம் கண்டும் காணாமல்போல விட்டுவிட்டது. இந்த நிலையில், ஐந்து நாள்களாக யார் முதல்வர் என்று நீடிக்கும் இந்த விவகாரத்தில் சோனியா காந்தி நேரடியாக சிவக்குமாரை துணை முதல்வராகப் பதவியேற்கச் சம்மதிக்க வைத்ததாக தற்போது பேச்சுகள் உலவுகின்றன. மேலும், கட்சியின் நலன் கருதி முதல்வர் பதவியைத் தியாகம் செய்வதாகவும், துணை முதல்வராகப் பதவியேற்க ஒப்புக்கொண்டதாகவும் சிவக்குமார் தெரிவித்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி சித்தராமையா முதல்வராகவும், சிவக்குமார் துணை முதல்வராகவும் 20-ம் தேதி பதவியேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்தத் தகவலால் வருத்தமடைந்த காங்கிரஸ் எம்.பி-யும், சிவக்குமாரின் சகோதரருமான டி.கே.சுரேஷ், ``நான் முழுமையாக மகிழ்ச்சியடையவில்லை. கர்நாடகாவின் நலன் கருதி நாங்கள் எங்கள் உறுதிமொழியை நிறைவேற்ற விரும்பினோம். அதனால்தான் டி.கே.சிவக்குமார் இந்த முடிவை ஏற்க வேண்டியதாயிற்று. ஆனால், சிவக்குமார் முதல்வராக வேண்டும் என்று விரும்பினேன். அது நடக்கவில்லை. எதிர்காலத்தில் செல்ல வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்" என்று ஊடகத்திடம் கூறினார்.

முதல்வர் அறிவிப்புக்கு முன்னர், காங்கிரஸ் எம்.எல்.ஏ-வும், முன்னாள் துணை முதல்வருமான பரமேஸ்வரா, ``யாருக்கு எந்தப் பதவி வழங்குவது என்பது குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி அதிகாரபூர்வமாக அறிவிக்கட்டும். அதன் பிறகு மற்ற விஷயங்கள் தொடரும்" என்று கூறியிருக்கிறார்.
இந்தக் குழப்பங்களுக்கிடையில்தான் இன்று டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், ``சித்தராமையா முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அதோடு சிவக்குமார் ஒருவரே துணை முதல்வராகப் பதவியில் இருப்பார். முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் பதவியேற்பு விழா 20-ம் தேதி நடைபெறும். மேலும், அடுத்தாண்டு மக்களவைத் தேர்தல் வரையில் சிவக்குமாரே கர்நாடக காங்கிரஸ் மாநிலத் தலைவராகப் பதவி வகிப்பார்" என்றார். இதன் மூலம் டி.கே.சிவக்குமார் கோரிக்கை ஏற்கப்பட்டிருக்கிறது என்று சொல்லப்படுகிறது.