Published:Updated:

நெல்லை:`என்ன தகுதி இருக்கிறது உதயநிதிக்கு... எனது அனுபவம்தான் அவர் வயது!’-முதல்வர் பழனிசாமி காட்டம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

`அரசியலில் எந்த அனுபவமும் இல்லாதவர் உதயநிதி ஸ்டாலின். கருணாநிதியின் பேரன் என்பதைத் தவிர அவருக்கு எந்தத் தகுதியும் கிடையாது’ என்று தேர்தல் பரப்புரையின்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ஆறாவதுகட்ட தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கியிருக்கிறார். தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசாரத்தை முடித்துக்கொண்டு இன்று (18-ம் தேதி) நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.

முதல்வரை வரவேற்ற அ.தி.மு.க நிர்வாகிகள்
முதல்வரை வரவேற்ற அ.தி.மு.க நிர்வாகிகள்

தூத்துக்குடியிலிருந்து நெல்லை மாவட்டத்துக்கு வருகை தந்த எடப்பாடி பழனிசாமிக்கு மாவட்ட எல்லையான கே.டி.சி நகர் பகுதியில் அ.தி.மு.க-வினர் உற்சாக வரவேற்பு அளித்தார்கள். பின்னர் வள்ளியூர் சென்ற அவருக்கு நகருக்கு வெளியே மாவட்டச் செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் ராதாபுரம் எம்.எல்.ஏ இன்பதுரை உள்ளிடோர் வரவேற்பு அளித்தனர்.

பின்னர் வள்ளியூரில் திரண்டிருந்த பொதுமக்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ``இந்த ஆட்சி மூன்று மாதங்களில் கலைந்துவிடும், ஓராண்டில் முடிந்துவிடும் என்று ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்தார். ஆனால், அம்மாவின் அரசு, நான்காண்டுகளை முடித்து ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்துத்திருக்கிறது.

வாகனத்தில் பிரசாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி
வாகனத்தில் பிரசாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியையும், அம்மாவின் வழியில் நடக்கும் அ.தி.மு.க ஆட்சியையும் ஒப்பிட்டுப் பார்த்து எங்கள் ஆட்சியில் கிடைத்த நன்மைகளை எண்ணிப் பாருங்கள். தி.மு.க தலைவர் ஸ்டாலின் செல்லும் இடங்களிலெல்லாம் அ.தி.மு.க அரசு ஒன்றும் செய்யவில்லை என்று அவதூறு பரப்பிவருகிறார் .

ராதாபுரம் தொகுதியில் மாணவர்களின் கல்விக்காக அரசு சார்பாக ஐ.டி.ஐ கொண்டுவந்திருக்கிறோம். திசையன்விளையைத் தலைமையிடமாகக்கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்பட்டிருக்கிறது. ராதாபுரம் கால்வாயில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வரும் வகையில் 120 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

வள்ளியூர் பிரசாரக் கூட்டம்
வள்ளியூர் பிரசாரக் கூட்டம்

வள்ளியூரைத் தலைமையிடமாகக்கொண்டு புதிய கல்வி மாவட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. உவரி கப்பல் மாதா கோயில், ஆற்றங்கரை பள்ளிவாசல், விசுவாமித்திரர் கோயில், தெற்குகள்ளிகுளம் புனித மாதா கோயில் ஆகியவற்றை சுற்றுலாதலங்களாக அறிவித்திருக்கிறோம். இது போன்ற அடுக்கடுக்கான திட்டங்களை இந்தத் தொகுதிக்கு வழங்கியிருக்கிறோம்.

தமிழகம் முழுவதும் 52 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி கொடுக்கப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 7,000 கோடி ரூபாய்க்கு மேல் இதற்காகச் செலவிடப்பட்டு மடிக்கணினி வழங்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவிலேயே உயர்கல்வியில் தமிழகம் முதல் மாநிலமாகத் திகழ்கிறது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

ஆனால், துணை முதல்வராக இருந்த ஸ்டாலின் பொதுமக்களைப் பார்க்கவில்லை. அதிகாரம் இருக்கும்போது மக்களிடம் மனு வாங்க வரவில்லை. அதிகாரம் இல்லாதபோது மனு வாங்கிக்கொண்டிருக்கிறார். மக்களை ஏமாற்றுவதற்காக இது போன்று செயல்படுகிறார்.

முதல்வர் குறை தீர்க்கும் திட்டம் அமைக்கப்பட்டு, 9,25,000 மனுக்களைப் பெற்று, அனைத்து மனுக்களையும் பரிசீலனை செய்து அனைத்துக்கும் தீர்வு காணப்பட்டிருக்கிறது. இந்தியாவிலேயே அமைதிப் பூங்காவாக இருப்பது தமிழகம்தான்.

எடப்பாடி பழனிசாமி பிரசாரம்
எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

இதை நான் சொன்னால் ஸ்டாலின் ஏற்றுக்கொள்ள மாட்டார். ஆங்கில இதழில் இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் சட்டம் ஒழுங்கில் சிறப்பாகச் செயல்படும் மாநிலம் எனத் தமிழகத்துக்கு விருது வழங்கப்பட்டிருக்கிறது.

உதயநிதி ஸ்டாலின் ஊர் ஊராகச் சென்று எதையோ பேசிவருகிறார். அவருக்கு என்ன தகுதி இருக்கிறது. கருணாநிதியின் பேரன், ஸ்டாலினின் மகன் என்பதைத் தவிர உதயநிதி என்ன தகுதி கொண்டவர்? எனது அனுபவம்தான் அவரது வயது.

தேர்தல் பிரசார கூட்டத்தினர்
தேர்தல் பிரசார கூட்டத்தினர்

தி.மு.க என்பது ஒரு கம்பெனி. ஸ்டாலின்தான் அதன் தலைவர். மீதி இருப்பவர்கள் எல்லோரும் நிர்வாக இயக்குநர்கள். அவர்களைத் தவிர வேறு யாரும் அங்கு எந்தப் பொறுப்புக்கும் வர முடியாது. ஆனால், எங்கள் கட்சியில் தலைவர்களாகும் தகுதியுடன் பலர் இருக்கிறார்கள்.

மக்களோடு மக்களாக இருப்பது அ.தி.மு.க. விவசாயத்துக்கு வாங்கிய பயிர்க் கடன் ரத்துசெய்யப்பட்டிருக்கிறது. தடையில்லா மின்சாரம் வழங்கிய ஒரே அரசு இந்த அரசு. தடையில்லா மின்சாரம் இருப்பதால், புதிது புதிதாகத் தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வருகின்றன.

முதல்வர் பெயர் சூட்டிய குழந்தையின் உறவினர்கள்
முதல்வர் பெயர் சூட்டிய குழந்தையின் உறவினர்கள்

புதிய தொழில் நிறுவனங்கள் தொழில் தொடங்க முன்வருவதால், வேலைவாய்ப்புகள் பெருகிவருகின்றன. தமிழகம் மின் மிகை மாநிலமாகச் செயல்பட்டுவருகிறது” என்று பேசினார். வள்ளியூரில் இரு குழந்தைகளுக்கு முதல்வர் பெயர் சூட்டினார். பின்னர் களக்காடு சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மகளிர் குழு பெண்களிடம் உரையாடினார். சேரன்மகாதேவியில் இளம்பெண்கள் மற்றும் இளைஞர் பாசறை அமைப்பினருடன் கலந்துரையாடினார் .

அடுத்த கட்டுரைக்கு