Published:Updated:

"12 மணி நேர வேலை மசோதா நிறுத்தம்; தொழிலாளர் நலனைப் பேணுவதே அரசின் நோக்கம்..!" - முதல்வர் ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின் ( ட்விட்டர் )

``தொழில் முன்னேற்றத்தை ஊக்குவிப்பதும், அதேநேரத்தில் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றைப் பேணுவதும் அரசின் நோக்கமாகும்." - ஸ்டாலின்

Published:Updated:

"12 மணி நேர வேலை மசோதா நிறுத்தம்; தொழிலாளர் நலனைப் பேணுவதே அரசின் நோக்கம்..!" - முதல்வர் ஸ்டாலின்

``தொழில் முன்னேற்றத்தை ஊக்குவிப்பதும், அதேநேரத்தில் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றைப் பேணுவதும் அரசின் நோக்கமாகும்." - ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின் ( ட்விட்டர் )

தி.மு.க தலைமையிலான தமிழ்நாடு அரசு, கடந்த வெள்ளிக்கிழமையன்று நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும் கூட்டணிக் கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக மாற்றுவதற்கு மசோதா ஒன்றை நிறைவேற்றியது. இது குறித்து அரசுத் தரப்பிலிருந்து, தமிழ்நாட்டில் பெருகிவரும் பன்னாட்டு நிறுவனங்களில் நெகிழ்வுத் தன்மையைக் கொண்டுவரவே இந்த மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பதாகவும், இது கட்டாயமல்ல... விருப்பப்படும் தொழிலாளர்களுக்கு மட்டுமே என்றும் விளக்கமளிக்கப்பட்டது.

சட்டப்பேரவை
சட்டப்பேரவை

இருப்பினும், அரசின் இத்தகைய முடிவு தொழிலாளர் நலனை பாதிக்கும், தொழிலாளர்மீதான உழைப்புச் சுரண்டலுக்கு வழிவகுக்கும் என இதைத் திரும்பப் பெறுமாறு கூட்டணிக் கட்சிகளே தி.மு.க அரசை வலியுறுத்தின. எதிர்ப்புகள் தொடர்ந்து எழுந்துகொண்டேயிருந்ததால், தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு திட்டமிட்டது. அதன்படி தலைமைச் செயலகத்தில், அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன், தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோர் முன்னிலையில் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடைபெற்றது.

இந்த நிலையில் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு, தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் மசோதாவை நிறுத்திவைப்பதாக முதல்வர் ஸ்டாலின் தரப்பிலிருந்து தற்போது அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

இது குறித்து அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``தமிழ்நாட்டில் பெரும் முதலீடுகளை ஈர்த்திடவும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பைப் பெருக்கிடவும், குறிப்பாக, தென் மற்றும் வட மாவட்டங்களில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திடும் நோக்கிலும் தமிழ்நாடு அரசால் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கக்கூடிய பல்வேறு அம்சங்கள் இந்தச் சட்டத்தில் இருந்தாலும், சில தொழிற்சங்கங்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் இன்று, அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர். ஆலோசனைக் கூட்டத்தில் இந்தச் சட்டத்தில் வகுக்கப்பட்டிருக்கும் விதிமுறைகள் குறித்தும் விரிவாக தொழிற்சங்கப் பிரதிநிதிகளிடம் எடுத்துக் கூறி, தமிழ்நாட்டிலுள்ள மிகச் சில குறிப்பிட்ட வகை தொழிற்சாலைகளுக்கு மட்டுமே நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் அரசின் பரிசீலனைக்குப் பின்பே பணி நேரம் குறித்த விதிவிலக்கு வழங்கப்படும் என்றும், எந்தச் சூழ்நிலையிலும், தொழிலாளர்களின் நலனில் சமரசம் செய்துகொள்ளப்பட மாட்டாது என்றும் அமைச்சர்கள் தெளிவாக எடுத்துரைத்தனர்.

மேலும், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், இந்தச் சட்டமுன்வடிவினை நடைமுறைப்படுத்தினால் தொழிலாளர்களுக்கு ஏற்படக்கூடிய சிக்கல்கள், சிரமங்கள் குறித்து விவரமாக எடுத்துரைத்து, தங்களுடைய கருத்துகளை அரசு பரிசீலிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டனர். தொழில் முன்னேற்றத்தை ஊக்குவிக்கின்ற... அதே நேரத்தில் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றைப் பேணுவதும் அரசின் நோக்கமாகும்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

இந்த அரசு ஒரு சட்டமுன்வடிவை எந்த அளவு உறுதியுடன் கொண்டுவருகிறதோ, அது குறித்து மக்களிடம் ஏதேனும் மாற்றுக் கருத்துகள் வரப்பெற்றால், அவற்றைச் சீர்தூக்கி ஆராய்ந்து, அவர்களின் கருத்துகளுக்கிணங்க, அவற்றுக்கு மதிப்பளிக்கும் வகையில் நடந்துகொள்வதிலும் அதே அளவு உறுதி காணப்பட வேண்டும். அந்த வகையில், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவின்மீது பல்வேறு தொழிற்சங்கப் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில், சட்டமுன்வடிவின்மீதான மேல் நடவடிக்கை நிறுத்திவைக்கப்படுகிறது" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.