Published:Updated:

கருணாநிதி படத்திறப்பு விழா: முதல்வர் டிக் செய்த வாசகம் என்ன தெரியுமா?

தமிழ்நாடு சட்டசபை
தமிழ்நாடு சட்டசபை

சட்டசபையில் நடக்கும் விழாவில் பாதுகாப்பு போலீஸாரின் பற்றாக்குறையைச் சமாளிக்க, அமைச்சர்களுக்கான பாதுகாப்பு அதிகாரிகளில் பலரைப் பாதுகாப்பு பணிக்காக அழைத்துள்ளனர்.

தமிழக சட்டசபை நூற்றாண்டு விழாவும், முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்திறப்பு விழாவும் இன்று (02-08-2021) மாலை நடக்கிறது. விழாவை முன்னிட்டு சட்டசபை மண்டபம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலக நுழைவாயில் மற்றும் வெளியேறும் சாலைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. வாழை மரங்கள், தென்னை ஓலை அலங்காரம், மின்விளக்கு அலங்காரம் என்று சட்டசபை ஜெகஜோதியாகக் காட்சியளிக்கிறது.

சட்டசபை நூற்றாண்டு விழா
சட்டசபை நூற்றாண்டு விழா

இதில் பங்கேற்பதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று மதியம் சென்னை வந்திருக்கிறார். மாலையில் சட்டசபையில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கப்போகிறார். கடந்த எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் சட்டசபையில் ஜெயலலிதாவின் படத்தைத் திறக்க பிரதமர் மோடியை அழைத்தார்கள். அப்போது படம் திறக்கவே, எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு காட்டினர். இருந்தும், சட்டசபை சபாநாயகர் தனபால், ஜெயலலிதாவின் படத்தைத் திறந்துவைத்தார்.

சட்டசபையில் ஏற்கெனவே பல தலைவர்களின் படங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. அந்த வரிசையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி படமும் இடம்பெறவிருக்கிறது. இந்தநிலையில், படத்துக்குக் கீழே இடம்பெறவேண்டிய வாசகம் பற்றித் தீவிர ஆலோசனை நடந்ததாம். கடைசியில், `காலம் பொன் போன்றது. கடமை கண் போன்றது’ என்கிற வாசகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் டிக் செய்தாராம். இன்று மதியம் 1 மணிக்கே தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் பணியாளர்கள், அதிகாரிகள் அனைவரையும் பணியை முடித்துவிட்டு வீட்டுக்குக் கிளம்பச் சொல்லிவிட்டனர். ஒட்டுமொத்த புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தைப் பாதுகாப்பு படையினர் தங்களது கஸ்டடிக்குள் எடுத்துக்கொண்டுவிட்டனர்.

சட்டசபை நூற்றாண்டு விழா
சட்டசபை நூற்றாண்டு விழா

பாதுகாப்பு போலீஸார் பற்றாக்குறையைச் சமாளிக்க, அமைச்சர்களுக்கான பாதுகாப்பு அதிகாரிகளில் பலரை பாதுகாப்புப் பணிக்காக அழைத்துள்ளனர். சபாநாயகர் இருக்கைக்கு எதிரே அமைக்கப்பட்டுள்ள சிறு மேடையில் குடியரசுத் தலைவர், ஆளுநர், முதல்வர், சபாநாயகர், துணை சபாநாயகர் ஆகியோருக்கு இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எம்.பி., எம்.எல்.ஏ-க்கள், சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் தவிர மிகக் குறைவான பிரமுகர்களையே விழாவுக்கு அழைத்துள்ளனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவை  நூற்றாண்டு விழா: 1921 முதல் 2021 வரை..! - ஒரு நூற்றாண்டு வரலாறு

கொரோனா பரிசோதனை முடித்த பிறகே விழாவில் பங்கேற்க பாஸ் தந்துள்ளனர் அதிகாரிகள். தமிழக போலீஸின் ஐந்து அடுக்கு பாதுகாப்பு தவிர, விழா நடக்கும் ஒன்றரை மணி நேரம், குடியரசுத் தலைவருடன் வந்திருக்கும் முப்படைகளைச் சேர்ந்த பாதுகாப்புப் படையினர் கோட்டையின் முழுப் பாதுகாப்பையும் கவனிக்க ஆரம்பித்துவிட்டனர். இதற்கிடையில், ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சில அமைப்புகளைச் சேர்ந்த ஏழு நபர்கள் கறுப்புக்கொடி காட்ட ரெடியானதாகக் கேள்விப்பட்ட உளவுப் பிரிவினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களைக் கைதுசெய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்த கட்டுரைக்கு