Published:Updated:

சட்டப்பேரவையில் ஸ்டாலின்: `வழக்குகள் வாபஸ் முதல் கோயில்களைச் சீரமைக்க ரூ.100 கோடி வரை!’-முழு விவரம்

ஸ்டாலின்
ஸ்டாலின்

``தி.மு.க யாருக்கும் அடங்கிய யானை இல்லை; யாராலும் அடக்க முடியாத யானை. அடக்கப்பட்ட யானைக்குத்தான் மணி கட்டுவார்கள். தி.மு.க அடக்க முடியாத யானை” - சட்டப்பேரவையில் ஸ்டாலின்.

ஸ்டாலின் தலைமையில் புதிய அரசு பதவியேற்ற பின்னர், கடந்த திங்கட்கிழமை அன்று ஆளுநர் உரையுடன் தொடங்கிய தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின், இறுதிநாளான இன்று, முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலுரை வழங்கினார். அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், ``தி.மு.க அரசு கொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறது. மருத்துவமனைகளில் படுக்கை இல்லை என்கிற நிலையை இந்த அரசு மாற்றியிருக்கிறது. தி.மு.க பதவி ஏற்றபோது தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சத்தில் இருந்தது. இன்று அரசு எடுத்த நடவடிக்கைகளால் தினசரி பாதிப்பு 7,000-க்கும் கீழ் குறைந்துள்ளது. அதனால் கொரோனாவைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சொன்ன கருத்தை ஏற்க முடியாது. கடந்த ஆட்சியிடம் கொரோனா தொற்று குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டச் சொன்னேன். ஏற்கவில்லை. ஆட்சிக்கு வரப்போவதில்லை என அலட்சியமாக இருந்ததால்தான் கொரோனா தொற்று அதிகரித்தது” என்றார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

தொடர்ந்து பேசியவர், ``கடந்த அ.தி.மு.க ஆட்சியில் பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும். கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் போடப்பட்ட வழக்குகளை தமிழக அரசு திரும்பப் பெறும்” என்று அறிவித்தார். தொடர்ந்து, எட்டுவழிச் சாலைக்கு எதிரான போராட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படுவதாக அறிவித்தார். ``மீத்தேன், நியூட்ரினோ, சேலம் - சென்னை எட்டுவழிச் சாலை, வேளாண் சட்டம், குடியுரிமைச் சட்டம், கூடங்குளம் ஆகியவற்றுக்கு எதிராகப் போராட்ட வழக்குகள், பண்ருட்டி வேல்முருகன் தொடர்பான வழக்குகள் அதன் தன்மையைப் பொறுத்து வாபஸ் பெற நடவடிக்கை எடுக்கப்படும். அ.தி.மு.க ஆட்சியில் நியாயமற்ற முறையில் போடப்பட்ட எந்த வழக்காக இருந்தாலும் அது ஆய்வுசெய்து வாபஸ் பெறப்படும்” என்றார்.

மேலும், ``வடமாவட்ட வளர்ச்சியைப் பெருக்கிட, செய்யாறு திண்டிவனத்தில் 22,000 பேருக்கு வேலைவாய்ப்பு தரும் வகையில் இரண்டு தொழிற்சாலைகள் நிறுவப்படும்” என்றார்.

``தமிழகத்திலுள்ள சமத்துவபுரங்கள் சீரமைக்கப்படும். புதிதாக சமத்துவபுரங்கள் அமைக்கப்படும்” என்றும் முதல்வர் ஸ்டாலின் தனது உரையில் குறிப்பிட்டார். முதன்மையான நூறு கோயில்களைப் புனரமைக்க ரூபாய் 100 கோடி ஒதுக்கீடு செய்த முதல்வர், திருக்கோயில்களில் திருக்குளங்களைச் சீரமைத்து திருவிழாக்கள் நடத்த இந்த நிதி ஒதுக்கீடு செய்வதாகப் பேரவையில் தெரிவித்திருக்கிறார். கொரோனாவுக்குப் பிறகான பாதிப்புக்கு சிகிச்சை பெற அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை மையம் ஏற்படுத்தப்படும் என அறிவித்தார் முதல்வர்.

எடப்பாடி பழனிசாமி - ஸ்டாலின்
எடப்பாடி பழனிசாமி - ஸ்டாலின்

``தி.மு.க யாருக்கும் அடங்கிய யானை இல்லை; யாராலும் அடக்க முடியாத யானை. அடக்கப்பட்ட யானைக்குத்தான் மணி கட்டுவார்கள். தி.மு.க அடக்க முடியாத யானை. யானையின் நான்கு கால்களைப் போன்றது சமூகநீதி, மொழிப்பற்று, சுயமரியாதை, மாநில உரிமை” என்று `யானையும் இல்லை மணியோசையும் இல்லை’ என்று ஆளுநர் உரையை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்ததற்கு பதிலளித்துள்ளார் ஸ்டாலின்.

மேலும் `நான் அண்ணாவின் அரசியல் வாரிசு, கலைஞரின் கொள்கை வாரிசு’ என்றும் பேசினார்.

அடுத்த கட்டுரைக்கு