Published:Updated:

முப்பெரும் விழா: ``இனி தமிழ்நாட்டில் நிரந்தரமாக ஆட்சிசெய்யப்போவது திமுக-தான்" - முதல்வர் ஸ்டாலின்

முதல்வர்‌ மு.க.ஸ்டாலின்

``ஜி.எஸ்டி‌ சட்டம் மூலம் மாநில நிதி உரிமை பறிக்கப்பட்டுள்ளது. நீட் மூலம் கல்வி உரிமை பறிக்கப்பட்டுள்ளது. இப்படி, மத்திய அரசு கொண்டுவரும் பல்வேறு சட்டங்கள் மக்கள் விரோதச் சட்டங்களாக உள்ளன." - முதல்வர் ஸ்டாலின்.

முப்பெரும் விழா: ``இனி தமிழ்நாட்டில் நிரந்தரமாக ஆட்சிசெய்யப்போவது திமுக-தான்" - முதல்வர் ஸ்டாலின்

``ஜி.எஸ்டி‌ சட்டம் மூலம் மாநில நிதி உரிமை பறிக்கப்பட்டுள்ளது. நீட் மூலம் கல்வி உரிமை பறிக்கப்பட்டுள்ளது. இப்படி, மத்திய அரசு கொண்டுவரும் பல்வேறு சட்டங்கள் மக்கள் விரோதச் சட்டங்களாக உள்ளன." - முதல்வர் ஸ்டாலின்.

Published:Updated:
முதல்வர்‌ மு.க.ஸ்டாலின்

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா, தந்தை பெரியார் பிறந்தநாள் விழா, தி.மு.க தொடக்கநாள் விழா என தி.மு.க-வின் முப்பெரும் விழா விருதுநகர், பட்டம்புதூரில் நடைபெற்றது. இதில் தி.மு.க தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் அவர் பேசுகையில், ``வீழ்வது நாமாக இருந்தாலும், வாழ்வது தமிழாக இருக்க வேண்டும்” என உரையைத் தொடங்கினார். தொடர்ந்து, ``இது கட்சி அல்ல. குடும்பமாக நினைக்கக்கூடிய பாசக்கழகம். `உடன்பிறப்பே...’ என்ற ஒற்றைச் சொல்லுக்குள் அடங்கியிருக்கக்கூடிய கழகம். கலைஞர்‌ என்னும் ஒற்றை மனிதரின், உயிரினும் மேலான உடன்பிறப்புகள் அடங்கிய சொந்தங்கள் சேர்ந்த இடம்.

இந்த மாநாடு மேடைக்கு வரும்போது தென்தமிழக தென்றல் காற்று என்னை வரவேற்று வீச, சாலைகளில் கட்டியிருக்கக்கூடிய கழகக் கொடிகளை வச்சகண் வாங்காமல் பார்த்தேன். தமிழகக் கோட்டையில் கொடியேற்ற காரணம் இருந்தது. நம் கறுப்பு, சிவப்பு கழகக் கொடி. அதற்கு எனது முதல் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். தந்தை பெரியார்‌ சுயமரியதை மாநாட்டின், 3-வது மாநாட்டை இங்குதான் நடத்தினார். அத்தகைய பெருமைக்குரிய மண்ணில் இன்று தி.மு.க-வின் முப்பெரும் விழா நடைபெறுவதில் பெருமைகொள்கிறேன். மருது சகோதரர்கள்போல் இந்த மாவட்டத்துகாக அமைச்சர்கள் கே‌‌.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் பாடுபடுகின்றனர். தொடர்ந்து மக்களின் முன்னேற்றத்துக்காக உழைக்கிறார்கள்.

பரிசு
பரிசு

தமிழ்நாட்டை எல்லா நலமும், வளமும்கொண்ட மாநிலமாக மாற்றிவருகிறோம். இலங்கைத் தமிழர் நலனுக்காகக் குடியிருப்புத் திட்டம், மதுரை நெல்பேட்டையில் காலை உணவு திட்டம் தொடங்கியது என எல்லாமே எனக்கு மறக்க முடியாத நாளாக அமைந்திருக்கிறது. திராவிடத் தொண்டர்களுக்கு செப்டம்பர் 15-ம் தேதி திருநாள். புத்துணர்வு பெறும் நாள். நமது கழகத்துக்கு, அண்ணா, பெரியார், கலைஞர் கருணாநிதி, அன்பழகன் உள்ளிட்டோர் முகவரியும், முகமுமாக இருப்பவர்கள். இந்த முப்பெரும் விழா நடைபெறும் வேளையில் கலைஞர் கருணாநிதி தன் தொண்டர்களுக்கு எழுதிய 4,041 கடிதங்கள் தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. அதேசமயத்தில், அடியேன் எழுதிய திராவிட மாடல் புத்தகமும் வெளியிடப்பட்டுள்ளது.

நினைவுப்பரிசு
நினைவுப்பரிசு

தி.மு.க ஆட்சி என்பது ஓர் இனத்தின் ஆட்சி. இதற்கு முன்பு, அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்., அம்மா ஆட்சி என நிறைய வந்திருக்கலாம். ஆனால், ஸ்டாலின் ஆட்சி என்பது `திராவிட மாடல் ஆட்சி’ என சொல்லப்படும். திராவிடம் என்பது இனத்தின் பெயராக, மொழியின் பெயராக இருந்தது. ஆனால் இன்று அது அரசியல் கொள்கையின் பெயராக மாறியுள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சமூகநீதி, சமத்துவம், சம உரிமை, மாநில சுயாட்சி, சுயச்சார்பு, கூட்டாட்சி, மாநில உரிமை, சமமான வளர்ச்சி, அனைத்துத் துறைகளுக்குமான‌ வளர்ச்சி என அனைத்தும்கொண்ட அம்சமாக திராவிட மாடல் ஆட்சி நடைபெற்றுவருகிறது. நாம் கட்சிக்காக ஆட்சி செய்பவர்கள் அல்ல. கொள்கைக்காக ஆட்சி செய்பவர்கள். எனவே, இந்தப் புத்தகம் எல்லோர் கைகளிலும் இருந்தால் திராவிட மாடல் அது ஆட்சிக்கு மட்டுமல்ல, தி.மு.க. கட்சிக்கே முழுப்பெரும் அடித்தளமாக இருக்கும். என்னை நம்பி இந்த இயக்கத்தையும், தமிழ்ச் சமுதாயத்தையும் ஒப்படைத்துச் சென்ற கலைஞரின் நம்பிக்கையை என்றென்றைக்கும் காப்பாற்றும்விதமாகச் செயல்பட்டுவருகிறேன்.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

இந்தியாவிலேயே அனைத்து மாநிலங்களைக்காட்டிலும் தமிழகம் எல்லாத்துறைகளிலும் முன்னணி நிலையை அடைந்துள்ளது. மற்ற மாநிலங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை ஒப்பிட்டால் மகாராஷ்டிராவுக்கு அடுத்த நிலையில் தமிழகம் உள்ளது. உலக சுகாதார அமைப்பு 1,000 பேருக்கு ஒரு மருத்துவர் இருக்க வேண்டும் எனச்சொல்கிறது. ‌ஆனால் தமிழ்நாட்டில் 205 பேருக்கு ஒரு மருத்துவர் இருக்கிறார். மற்ற மாநிலங்களைக்காட்டிலும் தமிழகத்தில்தான்‌ தனிநபர் வருமானம் அதிகம். இந்தியாவின் தலைசிறந்த பல்கலைகழகங்கள் என‌ பட்டியலிடப்பட்டுள்ளவற்றில் 21 தமிழ்நாட்டில் உள்ளன. இதுதான்‌ திராவிட மாடல் ஆட்சி‌.

தமிழையும், தமிழ்ச் சமூகத்தையும் அனைத்திலும் முன்னணியில் இருக்கச் செயய வேண்டுமென்ற தந்தை பெரியாரின் கனவு, தற்போது நம் தோள்களின் மீது இறக்கிவைக்கப்பட்டுள்ளது. இதை நான்‌ மட்டும் செய்துவிட முடியாது. தொண்டர்களின் ஒத்துழைப்புடனேதான் செய்ய முடியும். நான் என்பது தனிப்பட்ட மனிதன் கிடையாது. உடன்பிறப்புகளின் உதிரத்தால் உருவானவன் நான். தொண்டர்களில் தலைமைத் தொண்டன் நான். ஆகவே, இனி தமிழ்நாட்டில் நிரந்தரமாக ஆட்சிசெய்யப்போவது தி.மு.க-தான். தமிழகக் கோட்டையை அலங்கரிக்க தொண்டர்களால் மட்டுமே முடியும். மக்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், தொண்டர்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அதற்கு கட்சியையும் ஆட்சியையும் இரு கண்களாகப் பார்க்க வேண்டும். அத்தகைய சூழலை எப்போதும் நாம் தக்கவைக்க வேண்டும்.

திராவிட மாடல் கொள்கையை பலப்படுத்தும்போது, நமக்கு இந்தியா முழுமைக்குமாகச் செய்யவேண்டிய சில கடமைகள் இருக்கின்றன. கூட்டாட்சி, சுயாட்சி, மாநில உரிமை, வளர்ச்சி, அதிகாரம், சமத்துவம், சகோதரத்துவம், சம உரிமை, மதச்சார்பின்மை உள்ளிட்ட அனைத்தும் சேர்ந்த தன்னிறைவு பெற்ற மாநிலமே திராவிட மாடலின் கொள்கை. எனவே, வலுவான மாநிலங்கள் மட்டுமே கூட்டாட்சியின் அடிப்படை. எனவே, அதற்கேற்றாற்போல் மற்ற மாநிலங்களும் தகுதி அடையச் செய்ய வேண்டும். இந்த உரிமைகள் பறிக்கப்படுமேயானால் மக்களுக்கு நாம் விரும்புகிற வளர்ச்சி நலத் திட்டங்களைச் செய்ய முடியாது. ஒற்றைத் தலைமையில், ஒற்றை மொழியென இந்தித் திணிப்பை ஏற்க முடியாது. ஜி.எஸ்.டி‌ சட்டம் மூலம் மாநில நிதி உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது. நீட் மூலம் கல்வி உரிமை பறிக்கப்பட்டிருக்கிறாது. இப்படி, மத்திய அரசு கொண்டு வரும் பல்வேறு சட்டங்கள் மக்கள் விரோதச் சட்டங்களாக இருக்கின்றன். ஆளுநரின் மூலம் இரட்டை ஆட்சி நடத்தப் பார்க்கிறார்கள். இதைத் தடுக்க நாடாளுமன்றத்தில் நமக்கு 40 உறுப்பினர்கள் இருக்கவேண்டியது அவசியம்.

முதல்வர்‌ மு.க.ஸ்டாலின்
முதல்வர்‌ மு.க.ஸ்டாலின்

கடந்தமுறை நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் வெற்றிபெற்று நாட்டின்‌ 3-வது பெரியக்கட்சி என்ற பெருமையைப் பெற்றிருக்கிறோம். இந்தப் பெருமையைத் தொடர்ந்து தக்கவைக்க தொண்டர்களான உங்களால் மட்டுமே முடியும். எனவே 2024-ல் வரவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலுக்கு இப்போதிலிருந்தே களப்பணி செய்ய வேண்டும். அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி 40/40 என 2004 ஆண்டு கலைஞர் முழங்கினார். அதன் பிறகு 2019-ல் நான் முழங்கினேன். இப்போதும் அதைத்தான் சொல்கிறேன். 40-ம் நமதே, நாடும் நமதே. 40/40 வெற்றி, அதற்குத் தொடக்கமாக இந்த மாநாடு அமையட்டும், நன்றி வணக்கம்" என்று பேசினார். இந்நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.