Published:Updated:

`கடல் பிரித்தாலும், கண்ணீர் நம்மை இணைத்தது’ - இலங்கைத் தமிழர்கள் மத்தியில் முதல்வர் ஸ்டாலின்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
குழந்தையைத் தூக்கிக் கொஞ்சிய முதலமைச்சர்
குழந்தையைத் தூக்கிக் கொஞ்சிய முதலமைச்சர்

``இலங்கைத் தமிழர்கள் அகதிகள் அல்ல. அநாதைகளும் அல்ல. அவர்களுக்கு நாம் இருக்கிறோம். `அகதிகள் முகாம்’ என்று இனி யாரும் அழைக்கக் கூடாது. `இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்’ என்றே அழைக்க வேண்டும்.’’ - முதல்வர் ஸ்டாலின்.

தமிழகத்துக்குப் புலம்பெயர்ந்துவந்த இலங்கைத் தமிழர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தரும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வேலூர் மேல்மொணவூரில் இன்று அடிக்கல் நாட்டித் தொடங்கிவைத்தார். தொடர்ந்து, நலத்திட்ட உதவிகள் வழங்கிப் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ``நம்முடைய தாய்த் தமிழ்நாட்டுக்குப் புலம்பெயர்ந்துவந்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் இலங்கைத் தமிழர்கள். ஓர் அடையாளச் சொல்லாகத்தான் இலங்கைத் தமிழர்கள் என்று அழைக்கின்றேன். மற்றபடி, தமிழர்கள் எங்கே... எந்த நாட்டில் வாழ்ந்தாலும், அவர்கள் அனைவருமே ஒருதாய் மக்கள்தான். அந்த அடிப்படையில் சொன்னால், தமிழகத் தமிழர்களும், இலங்கைத் தமிழர்களும் இனம், மொழி, பண்பாடு, நாகரிகம் என அனைத்திலும் ஒன்றுபட்டவர்கள்தான்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இன்னும் மகிழ்ச்சியாகவும் பூரிப்பாகவும் சொல்ல வேண்டுமெனில், நாம் அனைவருமே தமிழினத்தைச் சார்ந்தவர்கள். கடல்தான் நம்மைப் பிரிக்கிறது. நீங்கள் விட்ட கண்ணீர்தான் நம்மை இணைத்தது. தாயகத்தில் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்குக் குரல் கொடுத்துவரும் இயக்கம் தி.மு.க என்பதை யாராலும் மறுக்க முடியாது. 1983 முதல் ஈழத்திலிருந்து தமிழ் மக்கள் இங்கு வரத் தொடங்கினார்கள். அவர்களுக்காக முகாம்கள் அமைக்கப்பட்டன. சிலர் வெளியிலும் தங்கியிருந்தார்கள். `முகாம்களின் நிலைமை மிக மோசமாக இருக்கிறது’ என்பதை உணர்ந்து பார்த்து, 1987-ல் கலைஞர் முதலமைச்சராக இருந்த நேரத்தில், ஏராளமான திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்தினார். அதனால், ஓரளவுக்குத் தன்னிறைவு அடைந்தார்கள்.

`10 வயதில் பெற்றோரைப் பிரிந்து வந்தேன்!’ - சொந்த நாடு செல்ல விரும்பும் இலங்கைத் தமிழ் இளைஞர்

கடந்த 10 ஆண்டுக்காலத்தில் அ.தி.மு.க அரசு இலங்கைத் தமிழருக்காக எந்த நன்மையும் செய்யவில்லை. அவர்களைப் பற்றி கவலையும் படவில்லை. இந்த நிலையில், தி.மு.க அரசு பொறுப்பேற்றவுடன் இலங்கைத் தமிழர்களின் நல்வாழ்வுத் திட்டங்களை மீண்டும் தொடங்கியிருக்கிறோம். அவர்கள் அகதிகள் அல்ல. அநாதைகளும் அல்ல. அவர்களுக்கு நாம் இருக்கிறோம். 'அகதிகள் முகாம்' என்று இனி யாரும் அழைக்கக் கூடாது என்பதைச் சட்டமன்றத்தில் 110 விதியைப் பயன்படுத்தி ‘இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்’ என்ற அறிவிப்பை வெளியிட்டுச் சுட்டிக்காட்டியிருக்கிறேன். அதைச் செயல்படுத்தக்கூடிய நாள்தான் இது. அதற்காகத்தான் நான் இங்கு வந்திருக்கிறேன்.

அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கிய முதலமைச்சர்
அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கிய முதலமைச்சர்

முகாம் வாழ் பிள்ளைகளின் கல்வி மேம்படக் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணத்தை அரசே முழுமையாக ஏற்கும். கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்புகளை முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு தகுதியை மேம்படுத்திடத் திறன் மேம்பாட்டுப் பயிற்சியும் அளிக்கப்படும். முகாம்களில் இயங்கிவரும் சுயஉதவிக் குழுக்களுக்குச் சமுதாய முதலீட்டு நிதியும் வழங்கப்படும். கலைஞர்வழி நின்று இந்த அரசு சொன்னதைச் செய்யும்" என்றார்.

திட்டங்களைத் தொடங்கி வைத்த பிறகு மேல்மொணவூரிலிருக்கும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்குள்ள இலங்கைத் தமிழர் குடும்பத்தினரிடம் விவரங்களைக் கேட்டறிந்த முதலமைச்சர் ஸ்டாலின், ஒரு கைக்குழந்தையைத் தூக்கிக் கொஞ்சி மகிழ்ந்தார். பின்னர், முகாமிலிருக்கும் அங்கன்வாடி மையத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்கிருந்த குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினார். ``அதிகாரிகளே எங்கள் முகாமுக்கு வருவது கிடையாது. இன்றைக்கு முதலமைச்சரே நேரில் வந்திருக்கிறார் என்பதை நினைக்கும்போது, அழுகை வருகிறது" என்று நெகிழ்ச்சியடைந்தார்கள் இலங்கைத் தமிழர்கள். இந்த ஆய்வின்போது, அமைச்சர்கள் துரைமுருகன், ஆர்.காந்தி, செஞ்சி மஸ்தான் ஆகியோர் உடனிருந்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு