Published:Updated:

"நீங்களும் என்னைப் போன்று எம்.எல்.ஏ தான்!"- பசும்பொன்னில் முதல்வருக்கு நடந்த வரவேற்பில் சலசலப்பு

ஜெயலலிதா பேரவை சார்பில் தேவர் ஜயந்திக்காக அணையா ஜோதி தொடர் ஓட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

தேவர் ஜயந்தி
தேவர் ஜயந்தி ( ஈ.ஜெ.நந்தகுமார் )

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழாவில் கலந்துகொள்ள நேற்று இரவு மதுரை வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று காலை கொட்டும் மழையிலும் கோரிப்பாளையத்திலுள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு பசும்பொன்னுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
ஈ.ஜெ.நந்தகுமார்

மணப்பாறையில் சுஜித் வில்சன் வீட்டுக்குச் சென்று ஆறுதல் கூறிவிட்டு நேற்று இரவு 8 மணிக்கு சாலை வழியாக மதுரை வந்த எடப்பாடி பழனிசாமிக்கு தனிச்சியத்தில் ஜெயலலிதா பேரவை சார்பில் ஆயிரக்கணக்கான பெண்கள் மூலம் பூரண கும்பம் வைத்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பிரமாண்ட வரவேற்பை அளித்தார்.

அடுத்ததாக ஜெயலலிதா பேரவை சார்பில் தேவர் ஜயந்திக்காக அணையா ஜோதி தொடர் ஓட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து மதுரையில் தங்கியவர், காலை 7 மணிக்கு கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு மாலையிட்டு பசும்பொன் கிளம்புவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
ஈ.ஜெ.நந்தகுமார்

ஆனால், நள்ளிரவு முதல் விடாமல் மழை கொட்டியதால் முதல்வர் கிளம்புவதில் தாமதம் ஏற்பட்டது. அதன் பின் சிறிது மழை விட்டதும், 7.45-க்கு கோரிப்பாளையம் வந்து தேவர் சிலைக்கு மாலை அணிவித்தார். அவருடன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட அமைச்சர்களும் வந்தனர். பின்பு பசும்பொன்னுக்கு கிளம்பிச் சென்றனர்.

இதைப்போலவே மதுரையில் தங்கியிருக்கும் மு.க.ஸ்டாலின், வைகோ, டி.டி.வி.தினகரன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு மாலையிட்டுவிட்டு பசும்பொன் சென்றனர்.

தேவர் ஜயந்தி
தேவர் ஜயந்தி
ஈ.ஜெ.நந்தகுமார்

மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் தொடங்கிய மழையால் தேவர் ஜயந்திக்கு செல்லும் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அரசியல் கட்சித் தலைவர்களின் வருகையும் பரபரப்பில்லாமல்போனது.

இதைத்தொடர்ந்து பசும்பொன்னுக்கு வந்த முதல்வர் மற்றும் துணை முதல்வரை வரவேற்க பசும்பொன் கிராம நுழைவு வாயில் அருகே அமைச்சர்கள் காத்திருந்தனர். அவர்களுடன் முன்னாள் அமைச்சர் மணிகண்டனும் பூங்கொத்துடன் நின்று கொண்டிருந்தார். அவருக்கு முன்னதாக பரமக்குடி எம்.எல்.ஏ சதன் பிரபாகர் நிற்க முயன்றார்.

"நீங்களும் என்னைப் போன்று எம்.எல்.ஏ தான்!"- பசும்பொன்னில் முதல்வருக்கு நடந்த வரவேற்பில் சலசலப்பு

இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மணிகண்டன், "நான் முன்னாள் அமைச்சர்" எனச் சொல்ல சதன் பிரபாகரனோ "நீங்களும் என்னைப் போன்று எம்.எல்.ஏ தான்" எனச் சொல்ல இருவரும் ஒருவரைப் பார்த்து ஒருவர் கை நீட்டியபடி வாக்குவாதம் செய்தனர். இதைக்கண்ட மாவட்டச் செயலாளர் இருவரையும் சமாதானம் செய்தார். இதனால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இதன்பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ''இன்றைய தினம் மரியாதைக்குரிய பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா நடந்து வருகிறது. அரசின் சார்பில் ஒவ்வோர் ஆண்டும் மரியாதை செய்யப்படுகிறது. அதுபோல் இந்த ஆண்டும் நானும் துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களும் அஞ்சலி செலுத்தினோம். 1937-ல் நடந்த மாநிலத் தேர்தலில் ராமநாதபுரத்தில் தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். இதன் பின் 1946-ல் சென்னை மாகாண தேர்தலில் வெற்றி பெற்றார். பின்னர் 1952, 1957, 1962 நடந்த நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களிலும் வெற்றி பெற்றார்.

"நீங்களும் என்னைப் போன்று எம்.எல்.ஏ தான்!"- பசும்பொன்னில் முதல்வருக்கு நடந்த வரவேற்பில் சலசலப்பு

அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அரசு 1979-ல் விழா எடுத்தது. அதே போல் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் மாண்புமிகு அம்மா நந்தனத்தில் தேவருக்கு வெண்கல சிலை அமைத்தார். தொடர்ந்து பசும்பொன்னில் உள்ள தேவர் திருவுருவத்துக்கு 13 கிலோ எடை கொண்ட தங்க கவசத்தை 2014-ல் அணிவித்தார். தொடர்ந்து அ.தி.மு.க அரசு மறைந்த தேவர் திருமகனாரின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் மரியாதை செய்து வருகிறது. அவர் மண்ணைவிட்டு மறைந்தாலும் என்றென்றும் மக்களின் மனதில் குடிகொண்டுள்ளார். அதனால்தான் ஆயிரக்கணக்கான மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்'' என்றார்.

இதைத்தொடர்ந்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், சுப.தங்கவேலன், சத்தியமூர்த்தி, பெரியகருப்பன், மாவட்டப் பொறுப்பாளர் காதர்பாட்சா, முத்துராமலிங்கம் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ''தேவர் திருமகனார் தேசியத்தை தனது உடலாகவும் தெய்வீகத்தை தனது உயிராகவும் கொண்டு வாழ்ந்தவர். சுதந்திர போராட்ட காலத்தில் பல ஆண்டுக்காலம் சிறையில் இருந்தவர்.

பசும்பொன் என்றாலே சுத்தமான தங்கம் என அர்த்தம். அதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்த தேவருக்கு அஞ்சலி செலுத்துவதை தி.மு.க பெருமையாகக் கருதுகிறது. தி.மு.க ஆட்சி அமையும் என்ற நம்பிக்கையுடன் கேட்கிறீர்கள். உங்கள் நம்பிக்கை வீண்போகாது. உங்கள் நம்பிக்கைப்படி தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் தேவர் குருபூஜைக்கு அரசு விடுமுறை அறிவிப்பது குறித்து பரிசிலிக்கப்படும்'' என ஸ்டாலின் தெரிவித்தார்.