Published:Updated:

`மகன்மீது தவறு இருந்தால் ராஜினாமா செய்ய தயார்' - போலீஸ் செயலால் கொதிக்கும் கோவை அ.தி.மு.க எம்.எல்.ஏ

அருண்குமார் எம்.எல்.ஏ
அருண்குமார் எம்.எல்.ஏ

அருண்குமாரின் மகன் தீரஜ் ராம் கிருஷ்ணா, வடவள்ளி மற்றும் ரத்தினபுரி பகுதிகளில் டிப்பார்ட்மென்ட் ஸ்டோர் நடத்திவருகிறார். நேற்று இரவு கடையை பூட்டுவதில் ஏற்பட்ட பிரச்னையில், போலீஸார் அவரை ஜீப்பில் அழைத்துச்சென்றுள்ளனர்.

கோவை வடக்குத் தொகுதி எம்.எல்.ஏ-வும், அ.தி.மு.க மாநகர மாவட்டச் செயலாளராகவும் இருப்பவர், பி.ஆர்.ஜி. அருண்குமார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பைப் புறக்கணித்தவர், சாதிய மாநாட்டில் கலந்துகொண்டதற்காக, அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு கண்டனம் தெரிவித்து பரபரப்பைக் கிளப்பியவர். இப்படி அடிக்கடி பரபரப்பைக் கிளப்பி லைம்லைட்டில் இருக்கும் பி.ஆர்.ஜி.அருண்குமார், தற்போது அப்செட்டில் இருப்பதாகத் தகவல் கிடைத்தது.

தீரஜ் ராம்கிருஷ்ணா
தீரஜ் ராம்கிருஷ்ணா

அருண்குமாரின் மகன் தீரஜ் ராம் கிருஷ்ணா, வடவள்ளி மற்றும் ரத்தினபுரி பகுதிகளில் டிபார்ட்மென்ட் ஸ்டோர் நடத்திவருகிறார். நேற்று இரவு கடையைப் பூட்டுவதில் ஏற்பட்ட பிரச்னையில், போலீஸார் அவரை ஜீப்பில் அழைத்துச்சென்றதுதான், அருண்குமார் அப்செட்டாக இருக்கக் காரணம் என்கிறார்கள்.

Vikatan

இதுகுறித்து பி.ஆர்.ஜி.அருண்குமாரிடம் பேசியபோது, “மாலை 7.05 மணிக்கு என் மகன் எனக்கு போன்செய்து, போலீஸ் விசாரணை செய்வதாகக் கூறினான். நேரமாகிவிட்டதால், கடையை பூட்டச் சொல்லி போலீஸ் தரப்பில் கேட்டுள்ளனர். ‘கடையில் ஆள்கள் இருந்ததால், அவர்கள் சென்றவுடன் பூட்டிவிடுகிறேன்’ என்று மகன் கூறியிருக்கிறான். அதற்குள் போலீஸ் அவனை ஜீப்பில் ஏற்றி சென்றுவிட்டனர். கேவலமாக இருக்கிறது. ஏற்கெனவே 2 வழக்குகள் இருந்ததாகவும் போலீஸில் கூறியுள்ளனர். 7.05 மணிக்கு என் மகன் கூப்பிடுகிறான் என்றால், சம்பவம் அதற்கு முன்பே நடந்திருக்க வேண்டும்.

பி.ஆர்.ஜி அருண்குமார் எம்.எல்.ஏ
பி.ஆர்.ஜி அருண்குமார் எம்.எல்.ஏ

அதிகபட்சம் 2 நிமிடம் கூடுதலாகக் கடை திறந்திருக்க வாய்ப்புள்ளது. கடந்த வாரம் வடவள்ளி கடையில் திருட்டு நடந்தது. அந்த சம்பவத்திலும் தாமதமாகத்தான் வழக்குப்பதிவு செய்தனர். கடையை நடத்தியதைத் தவிர வேறு எந்தத் தவறும் அவன் செய்யவில்லை. என் மகன்மீது தவறு இருந்தால், அதற்கான பொறுப்பை ஏற்று நான் எனது பதவியை ராஜினாமா செய்யவும் தயாராக இருக்கிறேன்” என்றார்.

கோவை மாநகர போலீஸாரிடம் கேட்டபோது, “அந்தப் பகுதியில் உள்ள கடைகளை அடைக்கச் சொன்னோம். அப்போது, அவர்களின் கடையும் திறந்திருந்தது. அதனால், கடையை அடைக்க சொல்லி பேசும்போது, போலீஸ், மற்றும் அருண்குமார் மகனிடையே வாக்குவாதம் நடந்துள்ளது. அவ்வளவுதான். அந்தக் கடையில் பணி செய்யும் ஒருவர்மீது, லாக்டெளனில் வெளியில் சுற்றியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், அதற்கும் கடைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்றனர்.

எம்.எல்.ஏ மகனின் டிப்பார்ட்மென்ட் ஸ்டோர்
எம்.எல்.ஏ மகனின் டிப்பார்ட்மென்ட் ஸ்டோர்

விவகாரம் பெரிதாகவே, சிறிது நேரத்திலேயே போலீஸார் அருண்குமார் மகனை விடுவித்துவிட்டனர். இதுகுறித்து, தீரஜ் ராம்கிருஷ்ணாவிடம் பேச பலமுறை முயற்சிசெய்தோம். ஆனால், அவர் நம் அழைப்பை ஏற்கவில்லை.

அடுத்த கட்டுரைக்கு