2021 சட்டசபைத் தேர்தலில், கோவை மாவட்டத்திலுள்ள அனைத்துத் தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றியது. ஆனாலும் `கண்டால் வரச் சொல்லுங்கள்’ என்பதுபோலத்தான் அவர்களின் செயல்பாடு இருந்தது. கோவை மாவட்ட அரசியலும் திமுக Vs பாஜக என்பதுபோல பல பஞ்சாயத்துகள் நடக்க, ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு அதிமுக தனது வலிமையைக் காட்டும் வகையில் ஒரு போராட்டத்தை நடத்தியிருக்கிறது.

கோவையின் குண்டும் குழியுமான சாலைகள், விலைவாசி உயர்வு ஆகியவற்றுக்காக திமுக-வைக் கண்டித்து ஒரு நாள் உண்ணாவிரதம் என்று அறிவித்தனர்.
எடப்பாடி பழனிசாமிதான் உண்ணாவிரதத்தைத் தொடங்கிவைத்தார். இந்தப் போராட்டத்துக்கான ஆலோசனைக் கூட்டத்தின்போதே, `நாமதான் பெரிய கட்சி. திமுக-வை எதிர்த்து பூத்வாரியா போராட்டம் நடத்தும் ஒரே சக்தி அதிமுக-வுக்குத்தான் இருக்கு. கோவை மாவட்டத்துல மட்டுமே 40,000 நிர்வாகிகள் இருக்கீங்க. ஆளுக்கு ஒருத்தரைக்கூட அழைச்சுட்டு வந்தாலும் ஒரு லட்சம் பேரைத் திரட்ட முடியும்’ என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெரிய டார்கெட் கொடுத்திருந்தார்.

அவர்கள் இலக்கு நிர்ணயித்ததைப்போலவே மிகப்பெரிய கூட்டத்தைக் கூட்டினர். கோவை மட்டுமல்லாமல் நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம் மாவட்டங்களிலிருந்தும் மக்களை அழைத்து வந்திருந்தனர்.
மேலும், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவாதன், ஆர்.பி.உதயக்குமார், கூட்டணிக் கட்சிகளான பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோரை மேடை ஏற்றி கவனம் ஈர்த்தனர். என்னதான் எடப்பாடி பழனிசாமி வந்தாலும், மேடையில் வேலுமணி புகழ்தான் அதிகம் பாடப்பட்டது. ஆட்சி மாறி ஒன்றரை ஆண்டாகியும் ரத்தத்தின் ரத்தங்கள் பலரும், அவரின் பெயரைக் குறிப்பிடும்போது ‘நம் அமைச்சர்’ என்றே குறிப்பிட்டனர்.

உண்ணாவிரதப் போராட்டமெல்லாம் நிர்வாகிகளுக்குத்தான் என்பதுபோல, அங்கே இருந்த டீக்கடைகள், உணவகங்கள், டாஸ்மாக் என்று எல்லா கடைகளும் அதிமுக தொண்டர்களின் படையெடுப்பால் ஹவுஸ்ஃபுல் ஆகின.
கோவையின் குண்டும் குழியுமான சாலைகளைச் சீரமைக்க வேண்டும் என்றுதான் போராட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால் போராட்டத்துக்காக அதிமுக கொடிகளை நடுவதற்குச் சாலைகளில் குழிகளைத் தோண்டி கொடிகளைப் பறக்கவிட்டதெல்லாம் ‘நியாயமாரே?’ என அந்த வழியே சென்ற பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.

‘அதிமுக-வின் இந்தப் போராட்டம் என்பது 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிள்ளையார் சுழி’ என்று வேலுமணி ஏற்கெனவே அறிவித்திருந்தார். இதன் காரணமாக அதிமுக தொண்டர்களிடம் நேற்றைய கூட்டத்தில் உற்சாகம் சற்று அதிகம் தென்பட்டது.
2011 சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு, ஜெயலலிதா தலைமையில் கோவை வ.உ.சி மைதானத்தில் பிரமாண்ட ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அந்தக் கூட்டமே அதிமுக-வுக்கு திருப்புமுனையாக மாறி, அந்தத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிக்க உந்து சக்தியாக இருந்தது.

அதைப்போலவே 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக-வுக்கு மைலேஜ் கொடுப்பதற்காக இந்தக் கூட்டத்தை வேலுமணி கூட்டியிருக்கிறார். 2011 சென்டிமென்ட், 2024-ல் நடக்குமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.