பாரதியார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்புவிழா இன்று நடைபெற்றது. இதில் ஆளுநர் ரவி, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, துணைவேந்தர் காளிராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதற்காக ஆளுநர், அமைச்சர் இருவரும் நேற்றே கோவைக்கு வந்துவிட்டனர்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
காலை அந்த நிகழ்வை செய்தியாக்க, ஊடகத்துறையினர் பாரதியார் பல்கலைக்கழகத்துக்குச் சென்றனர். பொதுவாக பட்டமளிப்பு விழாக்களில் ஒரு ஃபைல் கொடுக்கப்படும். அதில், பட்டமளிப்பு விழா சம்பந்தமான விவரங்கள், நோட், பேனா உள்ளிட்டவை இருக்கும்.
ஆனால், பாரதியார் பல்கலைக்கழக இன்றைய நிகழ்வில் கொடுக்கப்பட்ட ஃபைலில் பதிவாளர் பெயரில் ஒரு கவர் இருந்தது. அதைத் திறந்து பார்த்தபோது ரூ.500 வைக்கப்பட்டிருந்தது. இதைக் கண்ட செய்தியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

‘பதிவாளர் பெயரில் எதற்காக பகிரங்கமாக லஞ்சம் கொடுக்கின்றனர்?’ என்ற கேள்வி எழுந்தது. லஞ்சம் கொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, செய்தியாளர்கள் அதைத் திருப்பிக் கொடுத்துவிட்டனர். இந்த போட்டோ, வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்தச் சம்பவத்துக்கு கோவை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து துணைவேந்தர் காளிராஜிடம் கேட்டபோது, ``செய்தியாளர்களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று நானோ, பதிவாளரோ, மக்கள் தொடர்பு அதிகாரியோ இதைச் செய்யவில்லை.

பொதுவாக, எங்கள் நிகழ்ச்சியை செய்தி சேகரிக்க செய்தியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாகனம் ஏற்பாடு செய்வோம். கடந்த முறை சிறிய பத்திரிகையில் பணியாற்றும் சிலர் அந்த வாகனத்தில் வரவில்லை எனச் சொல்லி போக்குவரத்து செலவினத்துக்குக் காசு கேட்டனர்.
அந்த நினைவில் அலுவலக உதவியாளர் ஒருவர் அனைத்து ஃபைல்களிலும் கவர் வைத்துவிட்டார். இது அவரது தவறுதான். அவரை நாங்கள் கண்டித்துவிட்டோம். அவர்மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். நாங்களும் ஊழலுக்கு எதிரானவர்கள்தான்.

இதை ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம். இப்போது மட்டுமல்ல, எதிர்காலத்திலும் இது போன்ற சம்பவங்கள் நடக்காத வகையில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.