Published:Updated:

கோவைச் சம்பவம்... எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் அளிப்பாரா முதல்வர் ஸ்டாலின்?!

காரில் சிலிண்டர் வெடிப்பு

கோவையில் கார் ஒன்றில் சிலிண்டர் வெடித்த சம்பவம் குறித்து தமிழக அரசியல் வட்டாரத்தில் தீவிர விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன.

கோவைச் சம்பவம்... எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் அளிப்பாரா முதல்வர் ஸ்டாலின்?!

கோவையில் கார் ஒன்றில் சிலிண்டர் வெடித்த சம்பவம் குறித்து தமிழக அரசியல் வட்டாரத்தில் தீவிர விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன.

Published:Updated:
காரில் சிலிண்டர் வெடிப்பு

தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாள் கோவையில் கார் ஒன்றில் சிலிண்டர் வெடித்த சம்பவம் தமிழகத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே இரண்டு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் உள்ளிட்ட பொருள்களை ஏற்றிக்கொண்டு ஒரு கார் சென்றிருக்கிறது.

சைலேந்திர பாபு
சைலேந்திர பாபு

அந்த கார் அதிகாலை 4 மணியளவில் வெடித்துச் சிதறியது. அந்த காரை ஓட்டிச் சென்ற கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அந்தச் சம்பவம் குறித்து உக்கடம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவுசெய்து தீவிர விசாரணை நடைபெற்றது. சம்பவ இடத்தை டி.ஜி.பி சைலேந்திர பாபு, ஏ.டி.ஜி.பி தாமரைக்கண்ணன், கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், “அந்த கார் 10 பேரிடம் கைமாறி வந்தது என்பது விசாரணையில் தெரியவந்தது. அவர்களிடமும் விசாரணை நடத்தி கார் எங்கிருந்து வந்தது என்பதும், இறந்தவரின் விவரங்களும் 12 மணி நேரத்துக்குள் கண்டறியப்பட்டன. இறந்த ஜமேசா முபின் வீட்டில் நீதிமன்றத்தின் அனுமதியுடன் சோதனை நடத்தப்பட்டது. அதில் பொட்டாசியம் நைட்ரேட், சார்கோல், அலுமினியம் பவுடர், சல்பர் உட்பட 75 கிலோ வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மாநகர காவல் ஆணையர், துணை ஆணையர் மேற்பார்வையில் உதவி ஆணையர் தலைமையில் ஆறு இன்ஸ்பெக்டர்கள் கொண்ட தனிப்படை அமைத்து சந்தேகத்தின் அடிப்படையில் 22 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

பாலகிருஷ்ணன்
பாலகிருஷ்ணன்

இந்தச் சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. விசாரணையில், ஒருசிலர் கேரளா சிறைக்குச் சென்றுவந்தது தெரியவருகிறது. அவர்கள் எதற்காக கேரளா சிறைக்குச் சென்று, யாரை சந்தித்தார்கள் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்திவருகிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்

ஏற்கெனவே தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிதான் கோயம்புத்தூர். 1998-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் நான்கு நாள்களில் சுமார் 18 இடங்களில் குண்டுகள் வெடித்தன. அதில், 58 பேர் கொல்லப்பட்டனர். 252 பேர் காயமடைந்தனர். பல கோடி ரூபாய் மதிப்புடைய பொருள்கள் சேதடைந்தன. தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தால், கோயம்புத்தூரின் தொழில் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது காரில் இருந்த சிலிண்டர் வெடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

அண்ணாமலை
அண்ணாமலை

இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் யார்... எந்த அமைப்பாவது இதன் பின்னால் இருக்கிறதா என்பது போன்ற கோணங்களில் விசாரித்து உண்மையைக் கண்டறிவது முக்கியம். அந்த வகையில், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அறிக்கைகள் வெளியிட்டிருக்கிறார்கள்.

இந்த விவகாரம் குறித்து பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்வைத்திருக்கும் கருத்துகள் ஆளும் தி.மு.க-வை சூடாக்கியிருக்கிறது. “கோவை சம்பவத்தைப் பொறுத்தவரையில் உயிரிழந்த ஜமேசா முபின் வீட்டிலிருந்து 55 கிலோ அம்மோனியம் நைட்ரேட், பொட்டாசியம், சோடியம், பியூஸ் வயர், பேட்டரி போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன. இதை வெளிப்படையாகச் சொல்ல காவல்துறையினர் தயக்கம் காட்டுகின்றனர்.

சம்பவம் நடந்து 24 மணி நேரம் வரை எந்தத் தகவலையும் தெரிவிக்காத தமிழக காவல்துறையினர், அதற்கு பின்பு காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததாகக் கூறியுள்ளனர். இதைச் சொல்வதற்கு ஏன் 24 மணி நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தச் சம்பவம் பயங்கரவாத கும்பலின் சதி. அடுத்தகட்ட நடவடிக்கையை தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

 ஸ்டாலின்
ஸ்டாலின்
ம.அரவிந்த்

மேலும், “ஐந்து பேரைக் கைதுசெய்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆனால், அவர்களை எந்தெந்த சட்டப்பிரிவுகளில், எதற்காகக் கைதுசெய்திருக்கிறோம் என்பதை காவல்துறை தெரிவிக்கவில்லை. இது மிகுந்த வேடிக்கையாகவும், விசித்திரமாகவும் இருக்கிறது. தமிழக காவல்துறை யாரைக் காப்பாற்ற இந்தச் சம்பவத்தை மூடி மறைக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

ஒருவேளை தற்கொலைப் படைத் தாக்குதல் நடந்திருந்தால் கோவையின் நிலை என்னவாயிருக்கும்... அப்படி ஒரு சம்பவம் அரங்கேறியிருந்தால் தமிழக அரசு கலைக்கப்பட்டிருக்கும். கோவைச் சம்பவத்தை பொறுத்தமட்டில் தமிழக உளவுத்துறை தோற்றுவிட்டது. தமிழகத்தில் இன்னும் குண்டு வெடிக்க வேண்டுமா... இன்னும் ஒருவர் இறந்தால்தான் உளவுத்துறை தோற்றுவிட்டது என்பதை முதலமைச்சர் ஒப்புக்கொள்வாரா... என்.ஐ.ஏ விசாரணை தேவை. இந்த விவகாரத்தில் உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டிய பொறுப்பு பா.ஜ.க-வுக்கு இருக்கிறது” என்றும் அண்ணாமலை கூறியிருக்கிறார்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

அண்ணாமலை தன் ட்விட்டர் பக்கத்தில், "கோவையில் குண்டுவெடிப்பு நடந்து 36 மணி நேரம் கடந்துவிட்டது. ஆனால் இப்போது வரை முதல்வர் மக்களைச் சந்தித்து இதைப் பற்றிப் பேசத் தயங்குவது ஏன்... இதுவரை தமிழகம் கண்டிராத தற்கொலைப்படைத் தாக்குதல் இந்தத் திறனற்ற தி.மு.க ஆட்சியில் நடந்துவிட்டது. உயிர்ச் சேதம் ஏற்படும் வரை காத்திருப்பீர்களா?” என்று கேட்டிருக்கிறார்.

இதற்கு பதிலடியாக ட்வீட் செய்திருக்கும் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி, “தமிழ்நாட்டில் மதக் கலவரங்களை ஏற்படுத்திவிட முடியாதா, அதனால் மக்கள் அடித்துக்கொள்ள மாட்டார்களா, அதன் மூலம் அரசியல் ஆதாயம் கிடைத்துவிடாதா என ஆடு வேடமணிந்து திரியும் குள்ளநரிகளின் எண்ணம், சமத்துவம் மிளிரும் தமிழ் மண்ணில் ஒருபோதும் நிறைவேறாது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், ``காவல்துறையைத் தனது கட்டிப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர், கோவை அச்சுறுத்தலுக்குள்ளாகியிருக்கும் நிலையில் இடத்தைப் பார்க்க வராதது கண்டனத்துக்குரியது. கோவையை இன்னும் பழிவாங்கும் நோக்குடன் முதல்வர் இருக்கிறாரா என்ற கேள்வி எழுகிறது. மைனாரிட்டி மக்கள் ஓட்டுக்காக மற்ற மக்கள் உயிரை பலி கொடுக்கும் முடிவுக்கு முதல்வர் வருகிறாரா... பத்திரிகை அறிக்கைகூடக் கொடுக்க முடியாத அளவுக்கு மைனாரிட்டி ஓட்டு, முதல்வர் கைகளைக் கட்டிப்போட்டிருக்கிறது. எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் உயிரைவிட மைனாரிட்டி ஓட்டு உங்களுக்குப் பெரிதாக இருக்கிறதா?” எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

மேலும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் முதல்வருக்கும் தமிழக அரசுக்கும் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறார்கள்.

கோவைச் சம்பவம் குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியதுடன், இது பற்றி முதல்வர் பேசத் தயங்குவது ஏன் என்று அண்ணாமலை உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கேட்டும், இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் பதில் சொல்லவில்லை. மாறாக, கோவைச் சம்பவம் குறித்து தலைமைச் செயலாளர், டி.ஜி.பி உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர், கோவைச் சம்பவ வழக்கு விசாரணையை என்.ஐ.ஏ-வுக்கு மாற்றுவதற்குப் பரிந்துரை செய்திருக்கிறார்!