Election bannerElection banner
Published:Updated:

கோவை ஆட்சியர், காவல்துறை ஆணையர் திடீர் இடமாற்றம் - தேர்தல் ஆணையம் உத்தரவு!

ராஜாமணி ஐ.ஏ.எஸ்
ராஜாமணி ஐ.ஏ.எஸ்

கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல் அதிகாரியை பணியிடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

தமிழகத்தில் ஒரேகட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் செய்துவருகின்றனர். இந்தநிலையில், கோவையில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான ராஜாமணி, மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் ஆகியோரை இடமாற்றம் செய்வதாக தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்து சுற்றறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், ``தேர்தல் ஆணையத்துக்கு வந்த பல தகவல்கள் அடிப்படையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது” எனத் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டிருக்கிறது.

பணி மாற்றம் உத்தரவு
பணி மாற்றம் உத்தரவு

கோவை மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக நாகராஜன் ஐ.ஏ.எஸ் மாற்றியும், மாநகர காவல் ஆணையராக டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோரை நியமித்தும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது. மேலும், ராஜாமணி, சுமித் சரண் ஆகியோரை தேர்தல் அல்லாத பணிக்கு மாற்றுவதாகக் கூறப்பட்டிருப்பது கவனிக்க வேண்டிய விஷயம். தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சியினர் சார்பாகச் செயல்படும் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். தேர்தல் நெருங்கியுள்ள சூழலில், தேர்தல் அல்லாத பணிகளுக்கு இரண்டு அதிகாரிகளும் மாற்றப்பட்டிருப்பதன் பின்னணி என்ன என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது மதுரை மாவட்ட ஆட்சியரை மாற்றக் கோரி மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தொடர்ந்த வழக்கில், நாகராஜன் ஐ.ஏ.எஸ்-ஐ மதுரை மாவட்ட ஆட்சியராக நீதிமன்றம் நியமித்திருந்தது குறிப்பிடத்தக்கது. டேவிட்சன் தேவாசீர்வாதம் தற்போது தமிழ்நாடு காவல்துறை பயிற்சி அகாடமியின் இயக்குநராகப் பதவி வகித்துவருகிறார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு