Published:Updated:

மு.க.ஸ்டாலினைச் சீண்டிய போஸ்டர்... கோவை தி.மு.க - அ.தி.மு.க மல்லுக்கட்டு

கோவை போஸ்டர்
கோவை போஸ்டர்

கோவை மாநகரில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினைச் சீண்டும் வகையில் போஸ்டர் ஒட்டியதால், அ.தி.மு.க - தி.மு.க இடையே மோதல் போக்கு நிலவுகிறது.

சட்டசபைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், கட்சிகளுக்கிடையே மல்லுக்கட்டு தொடங்கிவிட்டது. சமூக வலைதளங்களில் சண்டைபோட்டுக்கொண்டிருந்த தி.மு.க., அ.தி.மு.க-வினர் போஸ்டர் சண்டையைத் தொடங்கியிருக்கிறார்கள். `தன்னம்பிக்கைமிக்க தலைமையா... துண்டுச்சீட்டு தலைமையா..?’, `உழைப்பை நம்பலாமா... பிறப்பை நம்பலாமா..?’ என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை விமர்சித்து, கோவை மாநகரம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

கோவை போஸ்டர்
கோவை போஸ்டர்
``ஆட்சியைப் பிடிப்போமா, தலைவரே?!" - ஸ்டாலினைத் திகைக்கவைத்த தி.மு.க நிர்வாகி

அ.தி.மு.க-வின் இந்த போஸ்டர் அரசியலால் கடுப்பான, தி.மு.க-வினர் அந்த போஸ்டர்களைத் தேடித் தேடிக் கிழித்தனர். இதை போட்டோ எடுத்து, அ.தி.மு.க-வினர் சமூக வலைதளங்களில் தி.மு.க-வினரை, `கழுதை’ என கலாய்த்துக்கொண்டிருக்கின்றனர்.

இதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி போஸ்டர்களை கிழித்தவர்களைக் கைது செய்ய வேண்டும் என அ.தி.மு.க-வினர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இதைத் தொடர்ந்து, தி.மு.க இளைஞரணி நிர்வாகிகள் ஏழு பேர் போலீஸாரால் கைதுசெய்யப்பட்டனர். காவல் நிலையங்களில் குவிந்த தி.மு.க-வினர், ``கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும், போஸ்டர் ஒட்டியவர்களைக் கைதுசெய்ய வேண்டும்” என்று கோஷங்களை எழுப்பினர்.

போஸ்டரை கிழிக்கும் தி.மு.க-வினர்
போஸ்டரை கிழிக்கும் தி.மு.க-வினர்

கைதுசெய்யப்பட்ட தி.மு.க-வினர் காவல் நிலைய பெயிலில் ரிலீஸாகிவிட்டனர். இந்தச் சம்பவத்தை கண்டிக்கும்விதமாக, கோவையில் நாளை உதயநிதி ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடத்த தி.மு.க-வினர் திட்டமிட்டிருக்கிறார்கள்.

இது குறித்து தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ``கழகத்தை அவதூறு செய்யும் நோக்கில் அடிமைகள் ஒட்டிய சுவரொட்டிகளை கிழித்தெறிந்த கோவை இளைஞரணியினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மோடி காலை பிடிப்பவர் எடப்பாடி. அவரின் காலைத் தொழுபவர் வேலுமணி.

காவல்நிலையத்தில் தி.மு.க-வினர்
காவல்நிலையத்தில் தி.மு.க-வினர்

அவர் சொல்வதைக் கேட்டு கரைவேட்டி கட்டாத அ.தி.மு.க-வாகச் செயல்படும் கோவை காவல்துறையைக் கண்டிக்கிறோம்” என்று விமர்சித்திருக்கிறார். இந்த விவகாரம் தொடர்பாக, சமூக வலைதளங்களில் தி.மு.க., அ.தி.மு.க- வினர் பரஸ்பரம் விமர்சித்துவருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு