Published:Updated:

பிரமாண்ட கூட்டம்... அதிரடி மாற்றம்... செந்தில் பாலாஜி அரசியலால் அலறும் கோவை உடன்பிறப்புகள்!

செந்தில் பாலாஜி

``ஒருகட்டத்தில் செந்தில் பாலாஜி இல்லையென்றால், இங்கு தி.மு.கவே இல்லை என்கிற நிலை உருவாகும். இது மிகவும் ஆபத்தானது.” - கோவை தி.மு.க நிர்வாகிகள்.

பிரமாண்ட கூட்டம்... அதிரடி மாற்றம்... செந்தில் பாலாஜி அரசியலால் அலறும் கோவை உடன்பிறப்புகள்!

``ஒருகட்டத்தில் செந்தில் பாலாஜி இல்லையென்றால், இங்கு தி.மு.கவே இல்லை என்கிற நிலை உருவாகும். இது மிகவும் ஆபத்தானது.” - கோவை தி.மு.க நிர்வாகிகள்.

Published:Updated:
செந்தில் பாலாஜி

“செந்தில் பாலாஜி ஒரு செயலலில் இறங்கினால், அது பாராட்டுக்குரியதாகத்தான் அமையும். `சரியான ஆளைத்தான் பொறுப்பாளரா போட்டுருக்கீங்க. கட்சி இப்போது கொங்கு மண்டலத்துல கம்பீரமா நிமிர்ந்து நிக்குது’ என மூத்தவர்களே பாராட்டுகின்றனர்.” பொள்ளாச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசிய வார்த்தைகள் இவை. கரூர் செந்தில் பாலாஜி, கோவை பொறுப்பாளராக மாறி, இப்போது கொங்கு மண்டலம் முழுவதையும் தன் கட்டுப்பாட்டிலெடுக்க காய்நகர்த்திவருகிறார் என்ற தகவல் உள்ளூர் உடன்பிறப்புகளை உஷ்ணமாக்கியிருக்கிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை விசிட்
முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை விசிட்

செந்தில் பாலாஜியை கோவை பொறுப்பாளராக நியமித்தது முதல், முதல்வர் ஸ்டாலினை அடிக்கடி அழைத்து, பிரமாண்ட கூட்டங்கள் நடத்தி அவரின் குட்புக்கில் நீடித்துவருகிறார். அதனடிப்படையில்தான் ஸ்டாலினின் சமீபத்திய விசிட்டும் திட்டமிடப்பட்டது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

காலை ஈச்சனாரி பகுதியில் ஒரு லட்சம் பயனாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் அரசு நிகழ்ச்சி, மாலை பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் மாற்றுக்கட்சியிலிருந்து 55,000 பேர் தி.மு.க-வில் இணையும் பிரமாண்ட பொதுக்கூட்ட விழா நடைபெற்றது.

பொள்ளாச்சி தி.மு.க கூட்டம்
பொள்ளாச்சி தி.மு.க கூட்டம்

`படையப்பா’ படத்தில், “மாப்பிள்ளை இவர்தான். ஆனா, இவர் போட்டிருக்குற சட்டை என்னோடது” என்ற வசனம்போல, கூட்டம் கோயம்புத்தூர்லதான். ஆனா, எல்லாத்தையும் பண்ணினது நாங்கதான் என்பதுபோல கரூர் டீம் அனைத்தையும் கன்ட்ரோல் எடுத்து முடித்துக் காட்டியிருக்கிறது.

இந்தக் கூட்டத்துக்காக கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், கரூர், வேலூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சுமார் 1,000-க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளை இறக்கி, காலை முதல் இரவு வரை கோவை போக்குவரத்தை ஸ்தம்பிக்கவைத்தனர். மாலை பொள்ளாச்சியில் நடந்த கூட்டத்துக்கு மட்டுமே பேருந்துக்கு 25-30 பேர் வீதம் சுமார் 20,000-க்கும் மேற்பட்டோரைத் திரட்டினர்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

கரூர் டீம் கண்ணசைவில் அனைத்து ஏற்பாடுகளும் நடந்தன. நிகழ்ச்சி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்புவரை, கரூர் டீம் மேடையில் ஏறி, “இங்க காலியா இருக்கு பாருங்க. அங்க உக்காரவைங்க. அங்க போங்க. இங்க போங்க” என்று உத்தரவுகளைப் போட்டுக்கொண்டேயிருந்தனர். இதை உடன்பிறப்புகள் ரசிக்கவில்லை.

இது குறித்து கோவை தி.மு.க நிர்வாகிகள் கூறுகையில், “பொதுவாக ஓர் அரசியல் கட்சிக்கு தேர்தல் முடிவுகள் முக்கியம்தான். அதைவிட கொள்கையும், கட்சியின் நீண்டகால வளர்ச்சியும் முக்கியம். உள்ளாட்சித் தேர்தல் பணிகளுக்காக வந்த கரூர்க்காரர்களில் வார்டுக்கு 2-4 பேர் வரை இங்கேயே தொழிலைத் தொடங்கிவிட்டனர்.

பொள்ளாச்சி திமுக கூட்டம்
பொள்ளாச்சி திமுக கூட்டம்

வருவாயை அதிக அளவு பெருக்கிக்கொண்டு, அதற்கேற்றாற்போலச் செலவும் செய்கின்றனர். கட்சியின் வளர்ச்சிக்காக அவர் சொல்வதை நாங்கள் கேட்கத் தயாராகவே இருக்கிறோம். ஆனால், தனக்கு இணையாக யாரும் வளர்ந்துவிடக் கூடாது என்பதற்காகக் கட்சியை கம்பெனிபோல நடத்துகிறார்.

முதல்வர் வருகிறார் என்றால், விமான நிலையத்தில் அவரை வரவேற்பது, அரசு விருந்தினர் மாளிகையில் அவரைப் பார்ப்பது என்று எதற்கும் மற்றவர்களை இவர் அனுமதிப்பதில்லை. `சதுரங்க வேட்டை’ படத்தைப்போல 1 லட்சம் பயனாளிகள், 50,000 பேர் கட்சியில் இணைகிறார்கள் என்று எண்ணிக்கையை அதிகமாகச் சொல்லி ஆசையைத் தூண்டுகின்றனர். தனது பிரமாண்ட கூட்டம், தேர்தல் ரிசல்ட் இவற்றையெல்லாம் முதலீடாகக் காண்பித்து செந்தில் பாலாஜி அடுத்ததாக நாடாளுமன்றத் தேர்தலை மையமாகவைத்து திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் கால்பதிக்க திட்டமிட்டுவருகிறார்.

முதல்வர் ஸ்டாலினுடன் செந்தில் பாலாஜி
முதல்வர் ஸ்டாலினுடன் செந்தில் பாலாஜி

மேலும் கோவை மாவட்டத்திலுள்ள ஐந்து மாவட்டப் பொறுப்பாளர்களையும் கழற்றிவிட முடிவுசெய்திருக்கிறார். தற்போதுள்ள ஐந்து மாவட்டங்களை மூன்றாக மாற்ற திட்டமிட்டுள்ளனர். அந்த இடத்தில், தான் கிழித்த கோட்டைத் தாண்டாதவர்களை அமர்த்தவிருக்கிறார். ஏற்கெனவே அவர் நியமித்த கோவை மாநகராட்சி மேயர், கட்சி மற்றும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரைவிட, செந்தில் பாலாஜிமீதுதான் அதிக விசுவாசமாக இருக்கிறார். அதேநிலையைத்தான் கோவை மாவட்டம் முழுவதும் செயல்படுத்தவிருக்கிறார்.

ஒருகட்டத்தில் செந்தில் பாலாஜி இல்லையென்றால், இங்கு தி.மு.க-வே இல்லை என்கிற நிலை உருவாகும். இது மிகவும் ஆபத்தானது. அவர் ஏற்கெனவே பல கட்சிகளைத் தாவிவிட்டார். கடைசிவரை தி.மு.க-வில் இருப்பார் என்று எந்த உத்தரவாதமும் இல்லை.

தி.மு.க கூட்டம்
தி.மு.க கூட்டம்

பிற்காலத்தில் கட்சிக்கு ஏதாவது பிரச்னை ஏற்படுகிறது என்றால், அந்தச் சூழலில் இது போன்ற விஷயங்கள் பாதிப்பை அதிகப்படுத்தும். தனிப்பட்ட நபர்களின் வளர்ச்சி, தேர்தல் முடிவுகளைவிட, கட்சி நீண்டகாலம் நிலைத்திருப்பதே அவசியம். அதைத் தலைமை உணர வேண்டும்” என்றனர்.