Published:Updated:

`அது அண்ணா தி.மு.க இல்லை, வேலுமணி தி.மு.க' - கொதிக்கும் கோவை முன்னாள் மேயர் ராஜ்குமார்

கணபதி ராஜ்குமார்
கணபதி ராஜ்குமார்

கோவை மாநகராட்சி முன்னாள் மேயரும், கோவை அ.தி.மு.க முன்னாள் மாவட்டச் செயலாளருமான கணபதி ராஜ்குமார் தி.மு.க-வில் இணைந்தார்.

கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத முதல் சட்டசபைத் தேர்தலை சந்திக்கவிருக்கின்றன கழகங்கள். தி.மு.க., அ.தி.மு.க இரண்டு கட்சிகளும் பரப்புரையைத் தொடங்கிவிட்ட நிலையில், கட்சித் தால்கள் நடந்துவருகின்றன. அந்த வகையில், கோவை மாநகராட்சி முன்னாள் மேயரும், கோவை அ.தி.மு.க முன்னாள் மாவட்டச் செயலாளருமான கணபதி ராஜ்குமார் தி.மு.க-வில் இணைந்திருக்கிறார்.

தி.மு.க-வில் கணபதி ராஜ்குமார்
தி.மு.க-வில் கணபதி ராஜ்குமார்
தி.மு.க vs அ.தி.மு.க: வாக்கு வங்கி!

சமீபகாலமாக அ.தி.மு.க-வில் ஓரங்கப்பட்டுவந்த ராஜ்குமாரின் வருகை, கோவையில் தி.மு.க-வுக்கு பலம் சேர்க்கும் என்று உடன்பிறப்புகள் நம்புகின்றனர். கணபதி ராஜ்குமாரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

"கால் நூற்றாண்டு காலம் அ.தி.மு.க-வில் இருந்தீர்கள். அந்தக் கட்சியிலிருந்து திடீரென்று வெளியேறக் காரணம் என்ன?"

கணபதி ராஜ்குமார்
கணபதி ராஜ்குமார்

``எங்களைப் போன்றவர்கள் கட்சியில் புறக்கணிக்கப்படுகின்றனர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, கட்சி ஒரு சிலரின் ஆதிக்கத்துக்குள் சென்றுவிட்டது. அ.தி.மு.க-வுக்கு புதுப் புது முகங்களைப் படைக்கின்றனர். அதனால், நாங்கள் இருப்பது அவர்களுக்கு இடைஞ்சலாக இருந்திருக்கும்.’’

``தி.மு.க-வில் இணைந்ததற்குக் காரணம் என்ன?’’

கணபதி ராஜ்குமார்
கணபதி ராஜ்குமார்

``எனக்குக் கட்சி மாறிய உணர்வெல்லாம் இல்லை. தி.மு.க என் தாய்க் கழகம்தான். ஆரம்பத்திலிருந்து திராவிட சித்தாந்தத்தில் வளர்ந்தவன் நான். மத்திய அரசாங்கத்தின் பல திட்டங்கள், தமிழகத்துக்கு எதிராக உள்ளன. அதற்கு எதிராகக் குரல் கொடுத்துப் போராடும் கட்சி தி.மு.க. அதனால்தான் மக்கள் தி.மு.க தீர்வைக் கொடுக்கும் என்று நம்பி, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தி.மு.க-வை மாபெரும் வெற்றிபெற வைத்தனர்.’’

``ஜெ., மறைவுக்கு முன்பு, ஜெ., மறைவுக்கு பின்பு அ.தி.மு.க எப்படியிருக்கிறது?’’

ஜெயலலிதா, கணபதி ராஜ்குமார்
ஜெயலலிதா, கணபதி ராஜ்குமார்

``ஜெயலிலதா இருக்கும்போது, கட்சி ராணுவக் கட்டுப்பாட்டில் இருந்தது. எல்லோரும் அவரவர் பணியைச் சரியாகச் செய்துகொண்டிருந்தனர். எப்போது வேண்டுமானாலும் எளிய தொண்டனுக்கு பெரிய வாய்ப்பு கிடைக்கும். இப்போது கட்டுப்பாடுகள் இல்லை. அந்தந்த மாவட்ட அமைச்சர்கள்தான், மாவட்டங்களில் கோலோச்சிவருகின்றனர். அவர்களெல்லாம் அந்த மாவட்டத்துக்கு முதலமைச்சராக இருக்கின்றனர். யாரைப் பற்றியும், எங்கேயும் புகார் கொடுக்க முடியாது. நீதிபதியே தவறு செய்தால் எங்கே செல்ல முடியும்? அப்படி ஒரு சூழ்நிலைதான் அங்கு நிலவுகிறது. கட்சி ஒரு தலைவரின் கட்டுப்பாட்டுக்குள் கிடையாது.’’

``தர்மயுத்த காலக்கட்டத்தில் நீங்கள் ஓ.பி.எஸ் அணியில் இருந்தீர்கள். அதனால்தான் உங்களைப் புறக்கணித்தார்களா?’’

``கோவையிலிருந்து ஓ.பி.எஸ் அணிக்கு முதலில் சென்றது நான்தான். நான் புறக்கணிக்கப்படுவதற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.’’

``மக்கள் சேவை செய்யத் தடையாக இருப்பதால் தி.மு.க-வில் இணைந்ததாகக் கூறியிருந்தீர்கள். ஆனால், `நான் விவசாயி மகன். அ.தி.மு.க-வில் எளியவர்களும் உழைத்தால் முதல்வராகலாம் என்பதற்கு நான்தான் உதாரணம்’ என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகிறாரே..?’’

கணபதி ராஜ்குமார்
கணபதி ராஜ்குமார்

``நானும் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன்தான். எனக்கும் அந்த உணர்வு தெரியும். எட்டுவழிச் சாலையால் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு, ஏராளமான மக்கள் வாழ்வாதாரத்தை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு, அவ்வளவு போராட்டங்கள் நடந்தன. ஆனால், இவ்வளவு நடந்தும் அந்தத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று சொல்கிறார். அந்தத் திட்டத்துக்கு அவ்வளவு அவசியம் இல்லை என வல்லுநர்கள் கூறுகின்றனர். அதேபோல, வேளாண் சட்டங்களால் ஏற்படும் விளைவுகள் குறித்து யோசிக்காமல், அது சிறந்த சட்டம் என்று கூறுகிறார். மத்திய அரசாங்கம் எந்தச் சட்டம் கொண்டுவந்தாலும் சிறந்த சட்டமாகத்தான் எடுத்துக்கொள்கிறார். அந்த வகையில் விவசாயிகளின் வலியைப் புரிந்துகொண்டு, அவர்களின் நம்பிக்கையைக் காப்பாற்ற அவர் தவறிவிட்டார். மக்கள் பணி செய்வதற்கு அதிமுக்கியமானது உள்ளாட்சிதான். ஏன் உள்ளாட்சித் தேர்தல் நடத்தவில்லை?.’’

``நீங்கள் மேயராக இருந்தீர்கள். இப்போது உள்ளாட்சித்துறைச் செயல்பாடுகள் எப்படியிருக்கின்றன?’’

``தேர்தல் நடக்காததால், பெரும்பாலான நிதிகள் கிடைப்பதில்லை. இவையெல்லாம் மக்களுக்குப் பாதகம்தான். வார்டு உறுப்பினர்கள் இருந்தவரை, அவர்கள் மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பெற்றுக் கொடுத்துக்கொண்டிருந்தனர். கிளைச் செயலாளருக்கு உச்சக்கட்ட பதவியே, மாமன்ற உறுப்பினர்தான். அதைக்கூட அடையாமல் அவர்கள் எப்படி மக்கள் பணியைச் செய்ய முடியும்?. இப்போது அதிகாரம் ஓரிடத்தில் குவிக்கப்படுகிறது. மாநகராட்சிப் பணிகள் படுமந்தமாக இருக்கின்றன. கேட்பார் இல்லாமல் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அனைத்து மாநகராட்சிகளும் கடனில் தள்ளாடிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலைமையைச் சரிசெய்யவே நான்கு ஆண்டுகளாகும்.’’

``கோவையில் 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை ஐந்து ஆண்டுகளில் கொண்டு வந்திருப்பதாக அ.தி.மு.க சொல்கிறதே..?"

கோவை
கோவை

``அது விளம்பரத்துக்கு நன்றாக இருக்கும். ஆனால், அவர்கள் சொல்லும் அளவுக்கு இங்கு எந்தப் பணியும் நடக்கவில்லை. பல இடங்களில் சாலைகள் போட வேண்டியிருக்கிறது. பாதாளச் சாக்கடைப் பணிகள் முடியவில்லை. அடிப்படை வசதிகள்கூட செய்து தராமல் ஸ்மார்ட்சிட்டியில் குளக்கரைகளை அழகுபடுத்துகின்றனர். ரேஸ்கோர்ஸ் பகுதியை மேம்படுத்த ரூ.40 கோடி ஒதுக்கியிருக்கிறார்கள். காலை நேரத்தில் மக்கள் உடற்பயிற்சி செய்யப் பயன்படுகிறதுதான். அதற்கு இவ்வளவு பெரிய தொகையை ஒதுக்க வேண்டிய அவசியம் இல்லை. யாருடைய ஆசையை நிறைவேற்றுவதற்காக அங்கு அவ்வளவு பணத்தைக் கொட்டுக்கிறார்கள் எனத் தெரியவில்லை. இந்த ஐந்து ஆண்டுகளில், 50 ஆண்டு வளர்ச்சியைப் பெற்றது ஒரு சில வி.வி.ஐ.பி குடும்பங்கள்தான். அவர்கள் யாரென்று உங்களுக்கும் தெரியும். மக்கள் இதனால், நிச்சயம் மக்கள் பயனடையப் போவதில்லை.’’

``கட்சிக்குள் அமைச்சர் வேலுமணியின் செயல்பாடுகள் எப்படியிருக்கின்றன?’’

வேலுமணி
வேலுமணி

``கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களுக்கு அவர்தான் பொறுப்பாளர். அவர்தான் தேர்தலுக்கு வேட்பாளர்களைத் தேர்வு செய்கிறார். இங்கு அவர் வைத்ததுதான் சட்டம். அவரை மீறி இங்கு யாரும், எதுவும் செய்ய முடியாது. அவருக்குத் தகுந்த ஆட்களைத்தான் எல்லாப் பதவிகளிலும் அமரவைப்பார். அவருக்குப் போட்டியாக வந்துவிடுவார்கள் என்று நினைப்பவர்களை, நேரடியாக நீக்காமல், படிப்படியாக அவர்களுக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்காமல், அப்படியே மறைத்துவிடுவார். ஒட்டுமொத்தமாகவே கட்சிக்குள் அவரது ஆதிக்கம் அதிகரித்துவிட்டது. எளிதில் புரிய வேண்டுமென்றால் இப்போது, இது அண்ணா தி.மு.க இல்லை. வேலுமணி தி.மு.க. அவரது ஆதிக்கத்தால், என்னைப்போல பலரும் கட்சி மாறுவது குறித்து யோசித்துக்கொண்டிருக்கின்றனர்.’’

``நீங்கள் தேர்தல் நேரத்தில், கட்சி மாறியது சந்தர்ப்பவாத அரசியல் என்று அ.தி.மு.க-வினர் கூறுகின்றனரே?’’

மு.க.ஸ்டாலின், கணபதி ராஜ்குமார்
மு.க.ஸ்டாலின், கணபதி ராஜ்குமார்

``நான் பதவிக்காகவோ, பணத்தைக் காப்பாற்றிக்கொள்ளவோ தி.மு.க-வுக்குச் செல்லவில்லை. மக்கள் பணிக்காக மட்டுமே கட்சி மாறியிருக்கிறேன். மக்கள் பணிக்கு எந்த வாய்ப்பும் இல்லாதபோது, அதற்கு வாய்ப்பு தரக்கூடிய இடத்துக்கு செல்லத்தானே செய்வோம்?.’’

``சட்டசபைத் தேர்தலில் கொங்குமண்டலத்தில் என்ன மாதிரியான தாக்கம் இருக்கும்?’’

``கோவை உட்பட கொங்கு மண்டலம் முழுவதும் தி.மு.க மாபெரும் வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலைப்போலவே, இந்த முறையும். தி.மு.க கூட்டணிக்குப் பெரிய வெற்றி கிடைக்கும்.’’

அடுத்த கட்டுரைக்கு