Published:Updated:

அமைச்சர்கள் நேரு - செந்தில் பாலாஜி பனிப்போர்... புறக்கணிக்கப்படுகிறாரா கோவை மேயர் கல்பனா?

ஆய்வுப்பணியில் ஆணையர் ராஜகோபால் சுன்கரா...
பிரீமியம் ஸ்டோரி
ஆய்வுப்பணியில் ஆணையர் ராஜகோபால் சுன்கரா...

நீங்கள் மேயர் பதவிக்குப் புதியவர். பள்ளிப் படிப்பைக்கூட தாண்டாதவர்... மாநகராட்சி நிர்வாகம் பற்றிய புரிதல் ஏற்பட, சிறிது காலம் தேவை... பொறுமையாக இருங்கள்

அமைச்சர்கள் நேரு - செந்தில் பாலாஜி பனிப்போர்... புறக்கணிக்கப்படுகிறாரா கோவை மேயர் கல்பனா?

நீங்கள் மேயர் பதவிக்குப் புதியவர். பள்ளிப் படிப்பைக்கூட தாண்டாதவர்... மாநகராட்சி நிர்வாகம் பற்றிய புரிதல் ஏற்பட, சிறிது காலம் தேவை... பொறுமையாக இருங்கள்

Published:Updated:
ஆய்வுப்பணியில் ஆணையர் ராஜகோபால் சுன்கரா...
பிரீமியம் ஸ்டோரி
ஆய்வுப்பணியில் ஆணையர் ராஜகோபால் சுன்கரா...

அ.தி.மு.க ஆட்சியில் ஊழல் விவகாரங்களில் அதிகம் அடிபட்டது கோவை மாநகராட்சிதான். கோவை மாநகராட்சியை தி.மு.க கைப்பற்றிய பிறகாவது நல்ல காலம் பிறக்கும் என்று கோவைவாசிகள் எதிர்பார்த்தார்கள். ஆனால், புதிய கவுன்சில் பதவியேற்று ஒரு மாதம்தான் முடிந்திருக்கிறது... அதற்குள் அதிகாரப்போட்டியில் திணறிக்கொண்டிருக்கிறது கோவை மாநகராட்சி. குறிப்பாக, மேயர் கல்பனா ஆனந்தகுமாரை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் புறக்கணிப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன!

தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்தே கோவை மேயர் பதவிக்கு முக்கிய நிர்வாகிகள் பலரும் போட்டி போட்டு காய்நகர்த்திய நிலையில், கல்பனா பெயரை ‘டிக்’ செய்தார் கோவையின் கட்சிப் பொறுப்பாளரான அமைச்சர் செந்தில் பாலாஜி. எளிய பின்னணியிலிருக்கும் கல்பனா தனக்கு விசுவாசமாக இருப்பார் என்று கருதியே செந்தில் பாலாஜி அவரை மேயர் ஆக்கியதாகக் கூறப்படுகிறது. அப்போது தொடங்கியது பிரச்னை...

கல்பனா
கல்பனா

இது பற்றி கோவையின் சீனியர் தி.மு.க நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். “இந்த விவகாரம் அப்படியே அமைச்சர் செந்தில் பாலாஜி Vs அமைச்சர் கே.என்.நேரு பனிப்போராக மாறியிருப்பதுதான் கோவை மாநகராட்சியின் சாபக்கேடு! சென்னைக்கு அடுத்த பெரிய மாநகராட்சி என்பதாலும், கோவையில் தி.மு.க-வுக்கு எம்.எல்.ஏ-க்கள் இல்லை என்பதாலும், கோவையைத் தனது கன்ட்ரோலில் எடுக்க தனிகவனம் செலுத்தினார் நேரு. ஆனால், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெற்ற வெற்றியால், கோவை மாநகராட்சியில் செந்தில் பாலாஜியின் ஆதிக்கமே மேலோங்கியது. சமீபத்தில் வெளியிடப்பட்ட மாநகராட்சி பட்ஜெட் புத்தகத்தில் துறை அமைச்சர் நேருவின் புகைப்படத்துக்கு இணையாக, கோவை மாநகராட்சிக்குச் சம்பந்தமே இல்லாத செந்தில் பாலாஜியின் படமும் இடம்பெற்றது. இது நேரு ஆதரவாளர்களைக் கடும் கொந்தளிப்பில் ஆழ்த்தியது. இது போதாதென்று, எரிகிற நெருப்பில் பெட்ரோலை ஊற்றியதைப்போல கோவை மேயராகப் பொறுப்பேற்ற கல்பனா, இதுவரை தனது துறை அமைச்சர் நேருவைச் சந்திக்கவில்லை. இந்த விவகாரங்களால் கடுப்பான நேரு தரப்பினர் கோவை மாநகராட்சியில் செந்தில் பாலாஜியின் ஆதிக்கத்துக்கு செக் வைக்க வேண்டும் என்பதற்காகவே, மேயரை அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ள வேண்டாம் என்று வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளனர்.

கே.என்.நேரு
கே.என்.நேரு

இதையடுத்து, துணை மேயர் வெற்றிச்செல்வன் மற்றும் கவுன்சிலர்களை ஆய்வுப்பணிகளுக்கு அழைத்துச் செல்லும் கோவை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, மேயரை முற்றிலுமாகத் தவிர்த்துவிடுகிறார். ‘மாஸ் கிளினீங்’ என்கிற தூய்மைப் பணிகளிலும் மேயரும் ஆணையரும் இணைந்து ஆய்வு செய்வதில்லை. டெண்டர் விவகாரங்களிலும் நேரு தரப்பினரின் கண்ணசைவுக்கு ஏற்ப அதிகாரிகளே முடிவு செய்கிறார்கள். சமீபத்தில் நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடர் பற்றியும் மேயருடன் அதிகாரிகள் ஆலோசிக்கவில்லை. இது பற்றி மேயர் தரப்பிலிருந்து அதிகாரிகளிடம் கேட்டால், ‘நீங்கள் மேயர் பதவிக்குப் புதியவர். பள்ளிப் படிப்பைக்கூட தாண்டாதவர்... மாநகராட்சி நிர்வாகம் பற்றிய புரிதல் ஏற்பட, சிறிது காலம் தேவை... பொறுமையாக இருங்கள்’ என்று சொல்லியே அவரைப் புறக்கணிக்கிறார்கள். மேயர் ஏதாவது சந்தேகம் கேட்டால்கூட, அதிகாரிகள் சரிவர பதில் சொல்வதில்லை... மொத்தத்தில் இந்தப் போக்கு கோவை மாநகராட்சிக்கும் மக்களுக்கும் நல்லதல்ல...” என்றார்கள் விரிவாக!

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

இந்தக் கட்டுரைக்காகத் தகவல்களை நாம் விசாரித்துக்கொண்டிருக்கும்போதே நம்மைத் தொடர்புகொண்ட மக்களுடன் தொடர்பிலுள்ள அதிகாரி ஒருவர், ‘‘ஆணையர் மிகவும் நல்லவர். ஆனால், இரண்டு அமைச்சர்களுக்கும் செட் ஆகாததால், அதற்குள் சிக்காமல் சிறப்பாக நிர்வாகம் செய்கிறார். மேயர்தான் சொல்லிக்கொள்ளும் அளவுக்குச் செயல்படுவதில்லை. மேயர் எங்கு சென்றாலும் அவரின் கணவர் ஆனந்தகுமார் உடன் வருகிறார். அவரைத் தாண்டி யாரும் மேயரை நெருங்க முடிவதில்லை. இதுதான் பிரச்னைக்குக் காரணம்’’ என்று வலிய வந்து தகவல்களைக் கூறினார்!

இது குறித்து விளக்கம் கேட்க கே.என்.நேரு, செந்தில் பாலாஜி இருவரையும் தொடர்புகொண்டபோது, அவர்களிடமிருந்து பதில் கிடைக்கப்பெறவில்லை. மேயர் கல்பனா ஆனந்தகுமாரிடம் விளக்கம் கேட்டபோது, ‘‘முதல்வர் எங்களுக்குச் சிறப்பான வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார். கடந்தகால தவறுகளால், மாநகராட்சியில் ஏராளமான பிரச்னைகள் உள்ளன. அதைச் சரிசெய்வதில் மட்டும்தான் நாங்கள் கவனம் செலுத்திவருகிறோம்’’ என்று மட்டும் சொன்னார்.

ஆய்வுப்பணியில் ஆணையர் ராஜகோபால் சுன்கரா...
ஆய்வுப்பணியில் ஆணையர் ராஜகோபால் சுன்கரா...
ஆய்வுப்பணியில் ஆணையர் ராஜகோபால் சுன்கரா...
ஆய்வுப்பணியில் ஆணையர் ராஜகோபால் சுன்கரா...

ஆணையர் ராஜகோபால் சுன்கராவிடம் இந்தப் பிரச்னை பற்றிக் கேட்டோம்... ‘‘மேயரைப் புறக்கணிக்கிறேன் என்பதில் உண்மை இல்லை. அனைத்துத் தகவல்களும் மேயருக்குச் சொல்லப்படுகின்றன. அதேபோல நான் ஆய்வுக்குச் செல்லும்போது அவருக்குத் தகவல் சொல்லிவிட்டுத்தான் செல்ல வேண்டும் என்கிற அவசியம் இல்லை. சில இடங்களில் திடீரென்று ஆய்வு செய்யும்போதுதான் உண்மை நிலவரம் தெரியவரும். மின்சாரத்துறை அமைச்சர் மற்றும் மேயருடன் ஆலோசனை செய்துவிட்டுத்தான் பட்ஜெட் தயாரித்தோம். நகராட்சி நிர்வாகத்துறை இயக்குநரகம் கீழ்தான் எங்கள் துறை வருகிறது. நிர்வாகரீதியாக துறை முதன்மைச் செயலாளர், இயக்குநர் மூலம்தான் அறிவுறுத்தல்கள் வரும். எல்லோரும் ஒருங்கிணைந்துதான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம்’’ என்றார்.

அதிகாரப் போட்டிகளைத் தள்ளிவைத்துவிட்டு, மக்களுக்கு நல்லாட்சியைக் கொடுப்பதுதான் ஆட்சியாளர்களின் கடமை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism