Published:Updated:

தேர்தலுக்கு பிறகு கமல் அரசியலில் தொடர்வது சந்தேகம்! - வானதி சீனிவாசன் ஆரூடம்

வானதி சீனிவாசன்
பிரீமியம் ஸ்டோரி
வானதி சீனிவாசன்

தேர்தல் வியூகத்தை வெளியில் சொல்ல முடியாது. திரைப்பிரபலம் என்பதால் மக்கள் ரசிப்பார்கள்.

தேர்தலுக்கு பிறகு கமல் அரசியலில் தொடர்வது சந்தேகம்! - வானதி சீனிவாசன் ஆரூடம்

தேர்தல் வியூகத்தை வெளியில் சொல்ல முடியாது. திரைப்பிரபலம் என்பதால் மக்கள் ரசிப்பார்கள்.

Published:Updated:
வானதி சீனிவாசன்
பிரீமியம் ஸ்டோரி
வானதி சீனிவாசன்

மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் ஆகியோர் போட்டியிடுவதால், கோவை தெற்குத் தொகுதி தேர்தல் களத்தில் அனல் பறக்கிறது. கமல் மீது காரசாரமான விமர்சனத்தை முன்வைத்து, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறார் வானதி சீனிவாசன். பிரசாரத்தின் நடுவே கிடைத்த இடைவெளியில் வானதியைச் சந்தித்துப் பேசினோம்...

‘‘அ.தி.மு.க கூட்டணியில் அதிக ‘டிமாண்ட்’ இருந்த கோவை தெற்குத் தொகுதியைப் போராடி வாங்கியிருக்கிறீர்கள். தெற்குத் தொகுதிமீது அப்படி என்ன பாசம்?’’

‘‘2016 சட்டமன்றத் தேர்தலில், இதே தொகுதியில் 23 சதவிகித வாக்குகள் பெற்றேன். கடந்த 2016-ம் ஆண்டிலிருந்து இந்தத் தொகுதியில் பணியாற்றி வருகிறேன். எளிதில் ஜெயிக்கக்கூடிய வாய்ப்பிருப்பதால், கூட்டணியில் இயல்பாகவே இது எங்கள் முதல் சாய்ஸாக இருந்தது.’’

‘‘உங்கள் கட்சி நிர்வாகிகளே, ‘கோவை தெற்குத் தொகுதி பாதுகாப்பானது இல்லை. வடக்குத் தொகுதியைத் தேர்வுசெய்திருக்கலாம்’ என்று சொல்கிறார்களே..!’’

‘‘அப்படி இல்லை. வாக்கு சதவிகிதத்தின் அடிப்படையில்தான் இதைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம்.’’

தேர்தலுக்கு பிறகு கமல் அரசியலில் தொடர்வது சந்தேகம்! - வானதி சீனிவாசன் ஆரூடம்

‘‘மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் வருகையால், உங்கள் வெற்றியில் பாதிப்பு ஏற்படும் என நினைக்கிறீர்களா?’’

‘‘நிச்சயமாக இல்லை. தொகுதி மக்களுக்குப் பல்வேறு விஷயங்களைச் செய்திருப்பதால், அவர்கள் கைவிட்டுவிட மாட்டார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. கமல்ஹாசன் வருகையை நாங்கள் எதிர்க்கவில்லை. ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் தேர்தலில் நிற்கலாம். ஆனால், இந்தத் தொகுதி குறித்தோ, அரசியல் குறித்தோ முழுமையான புரிதல் அவரிடம் இருக்கிறதா எனத் தெரியவில்லை. ‘நான் ஊழலை எதிர்ப்பதற்காக இங்கு வந்திருக்கிறேன்’ என்றால், தமிழகத்தில் வேறு எங்கும் ஊழல் நடக்கவில்லை என அவர் நினைக்கிறாரா? ஒருவேளை இத்தொகுதியில் ஊழல் நடந்திருந்தால், அது என்ன ஊழல்... எவ்வளவு தொகை போன்ற விவரங்களைப் பேசியிருக்கிறாரா?

என்ன கஷ்டம் வந்தாலும் மக்களுக்காக நின்று போராடும் குணம் அரசியல்வாதிக்கு வேண்டும். கடந்த காலத்தில் ஒரு படத்துக்கு சிக்கல் வந்தபோதே, `நாட்டைவிட்டுப் போகிறேன்’ என்று சொன்னவர், தேர்தல் தோல்வியைத் தாங்கிக்கொண்டு அரசியலில் தொடர்வாரா? சந்தேகம்தான். நான் கடந்தமுறை தோற்ற பிறகும், இத்தொகுதியில் ஐந்து ஆண்டுகளாகச் செய்துவரும் வேலைகளில் ஐந்து சதவிகிதமாவது அவர் செய்திருப்பதாகச் சொல்லட்டும். அப்புறம் அவர் வெற்றிவாய்ப்பு பற்றிப் பேசலாம்.’’

‘‘ ‘தொகுதியை பா.ஜ.க-வுக்குக் கொடுக்கக் கூடாது’ எனப் போராடிய அ.தி.மு.க-வினர், உங்களுக்கு எப்படி ஒத்துழைப்பு கொடுப்பார்கள். அது உங்களுக்குப் பின்னடைவுதானே?’’

‘‘இல்லை. தொகுதி மாறுவதால் சிட்டிங் எம்.எல்.ஏ-வுக்கு வருத்தம் இருந்திருக்கலாம். தேர்தல் பணிகளில் அ.தி.மு.க-வினர் முழுமையாக ஈடுபட்டுள்ளனர். கடுமையாக உழைக்கின்றனர்.’’

‘‘இந்தத் தொகுதிக்குள் சிறுபான்மை மக்களின் வாக்குகள் கணிசமான இருக்கின்றன. அந்த வாக்குகள் உங்களுக்கு வரும் என நம்புகிறீர்களா?”

“நிச்சயமாக வரும். கடந்தமுறை இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளில்கூட எனக்கு வாக்குகள் கிடைத்தன. அந்த மக்களுக்கும் சேர்த்துத்தான் நான் தொடர்ந்து வேலை செய்துகொண்டிருக்கிறேன்.’’

‘‘கமல்ஹாசனை விமர்சிக்கும் அளவுக்கு, காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் மீது நீங்கள் விமர்சனம் வைப்பதில்லையே?’’

‘‘ஊடகங்கள் அதற்கு முக்கியத்துவம் கொடுத்துக் கேட்பதால்தான் பதில் சொல்கிறேன். மற்றபடி, ஊழலின் ஊற்றுக் கண்களாக இருக்கும் தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தில் வரக் கூடாது என்றுதான் நினைக்கிறோம்.’’

‘‘நட்சத்திர பிம்பத்தை எப்படி எதிர்கொள்ளப்போகிறீர்கள்?’’

‘‘தேர்தல் வியூகத்தை வெளியில் சொல்ல முடியாது. திரைப்பிரபலம் என்பதால் மக்கள் ரசிப்பார்கள். கமல்ஹாசன் இங்கு தேர்தலில் நிற்கிறார்; நடக்கிறார்; ஓடுகிறார்; சிலம்பம் சுற்றுகிறார்; ஆட்டோவில் செல்கிறார். இது ஏதோ ஷூட்டிங் லொகேஷன்போல அவருக்குத் தெரிந்திருக்கலாம். நாங்கள் இதைச் சேவையாக நினைத்துப் பணியாற்றிக்கொண்டிருக்கிறோம். மக்கள் அவரை ரசிப்பார்கள். அதேநேரத்தில், தங்கள் பிரதிநிதியாக யாரைத் தேர்வுசெய்ய வேண்டும் என்ற தெளிவும் மக்களுக்கு இருக்கிறது.’’

‘‘திரையில் வந்துவிட்டால் மட்டும் போதாது என கமலைச் சாடுகிறீர்கள். உங்கள் கட்சியிலும் குஷ்பு, கெளதமி, காயத்திரி ரகுராம், கலா மாஸ்டர், செந்தில் என நடிகர் கூட்டமே இருக்கிறது. அவர்களைப் பிரசாரத்துக்கும் அழைத்து வருகிறீர்கள். பா.ஜ.க-வும் நடிகர்களைத்தானே நம்புகிறது?’’

‘‘நாங்கள் நடிகர்களை நம்பியில்லை. நடிகர்கள் கட்சிக்கு வரும்போது அவர்களின் பிரபலத்தைக் கட்சி பயன்படுத்திக்கொள்கிறது. அவர்களும் ஆர்வத்துடன் பணியாற்றுகிறார்கள். அவர்களைவிட்டால், எங்களுக்கு ஆளில்லை என்று சொல்லக் கூடாது.’’

‘‘கோவையின் மத நல்லிணக்கத்துக்கு இங்கிருக்கும் கட்சிகள் தீங்கு விளைவிப்பதாக கமல் சொல்கிறாரே?’’

‘‘நாட்டில் எந்த இடத்திலும் மதக்கலவரம் நடக்கவில்லை. கோவையும் அமைதியாக, நல்லிணக்கத்தோடுதான் இருக்கிறது. இவர் ஏதாவது பிளான் வைத்திருக்கிறாரா எனத் தெரியவில்லை. நாங்கள் எந்த மதத்தையும் பிரித்துப் பார்க்கவில்லை. இரண்டு சமுதாயத் தினருக்கிடையே பிரச்னையுள்ள எத்தனையோ இடங்கள் இருக்கின்றன. அங்கெல்லாம் அவர் சென்றிருக்கிறாரா... அந்த மக்களுக்காக ஏதாவது பேசியிருக்கிறாரா? பழைய படத்தில் அவர் பேசிய வசனத்தை இப்போது திருப்பிப் பேசுகிறார்போல!’’

‘‘கமலுக்கு ஒரு மெசேஜ் சொல்லுங்கள்!’’

‘‘நீங்க நல்லா நடிக்கறீங்க...’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism