கோவை வெள்ளலூர் பகுதியில், ரூ.168 கோடி மதிப்பில், ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று அ.தி.மு.க ஆட்சியில் 2019-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் பணிகள் தொடங்கின. சில மாதங்களிலேயே பணிகள் தொய்வடைய, ஆட்சி மாறியது.

தி.மு.க ஆட்சியில் பணிகள் மேலும் தொய்வடைந்தன. கிட்டத்தட்ட 40 சதவிகிதப் பணிகள் முடிந்த நிலையில், பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்ய முடிவுசெய்திருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியாகியிருந்தது.
மேலிடத்துக்கு வேண்டப்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு சாதகமாக இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அரசியல் பஞ்சாயத்து வெடித்தது. இதையடுத்து, “பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்ய எந்த முடிவும் எடுக்கப்படவில்லை” என்று கோவை மாநகராட்சி நிர்வாகம் விளக்கம் அளித்திருந்தது.

இந்த நிலையில் வெள்ளலூர் பேருந்து நிலையப் பணிகள் நிறுத்தப்பட்டிருப்பதாகவும், அங்குள்ள கட்டுமானங்கள் வேறு பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் என்றும் மாநகராட்சியின் பொறியாளர் கூறியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
தி.மு.க பிரமுகரான ரேஸ்கோர்ஸ் ரகுநாத் என்பவர், இந்தப் பேருந்து நிலையத்தைச் சுற்றி அ.தி.மு.க பிரமுகர்களுக்கு நிலம் இருக்கிறது. இதில் ரூ.100 கோடிக்கு முறைகேடு நடந்திருக்க முகாந்திரம் இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள மாநகராட்சி பொறியாளர், “பேருந்து கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன.

அங்கு ஏற்கெனவே கட்டப்பட்டிருக்கிற கட்டுமானங்கள் வேறு பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தப்படும்” என்று கூறியிருந்தார். இதன் மூலம் வெள்ளலூர் பேருந்து நிலையம் திட்டம் கைவிடப்பட்டதாகத் தகவல் வெளியானது.
இது குறித்து கோவை மாநகராட்சி பொறியாளர் இளங்கோவனிடம் விளக்கம் கேட்டபோது, “நடவடிக்கையில் இருக்கிறது என்றுதான் சொல்ல வந்தேன். அது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது.

அரசு என்ன முடிவு எடுக்கிறதோ அதுதான் இறுதி என ஆணையர் அதற்கு விளக்கமளித்துவிட்டார். அவரது விளக்கம்தான் இறுதியானது” என்று கூறியிருக்கிறார்.
இது குறித்து மாநகராட்சி ஆணையர் பிரதாப்பிடம் கேட்டபோது, “வெள்ளலூர் பேருந்து நிலையம் திட்டத்தைக் கைவிடுவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. RITES என்கின்ற பொதுத்துறை நிறுவனம் இது குறித்து ஆய்வுசெய்து சில பரிந்துரைகளை வழங்கியிருக்கிறது.

அந்த அறிக்கை வருகின்ற மாமன்ற கூட்டத்தொடரில் முன்வைக்கப்படும். மாமன்றத்தில் எடுக்கும் முடிவு அரசுக்கு அனுப்பப்படும். அரசுதான் இறுதி முடிவை எடுக்கும்” என்று கூறியிருக்கிறார்.