Published:Updated:

ஓ.பி.எஸ்ஸுக்கு `ஒய்'; ஸ்டாலினுக்கு இசட்! - பாதுகாப்பு படையை வாபஸ் வாங்கிய மத்திய அரசு?

டி.டி.வி.தினகரன் தரப்பினரால் ஓ.பி.எஸ் உயிருக்கு ஆபத்து இருப்பதாகப் புகார் எழுந்தது.

ஓ.பி.எஸ், ஸ்டாலின்
ஓ.பி.எஸ், ஸ்டாலின்

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அ.தி.மு.க இரண்டாகப் பிரிந்தது. ஆ.ர்.கே நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலில், இரு அணியினரின் தரப்பிலும் தனித்தனி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதில், அ.தி.மு.க அம்மா கட்சியின் வேட்பாளராக சசிகலா அணியைச் சேர்ந்த டி.டி.வி.தினகரன் தொப்பி சின்னத்திலும் அ.தி.மு.க புரட்சித் தலைவி அம்மா அணியின் வேட்பாளராக ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்த மதுசூதனன் மின் கம்பம் இரட்டை விளக்குச் சின்னத்திலும் போட்டியிடுவதாக இருந்தது. அந்தச் சமயத்தில், டி.டி.வி.தினகரன் தரப்பினரால் ஓ.பி.எஸ் உயிருக்கு ஆபத்து இருப்பதாகப் புகார் எழுந்தது.

ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்

இந்த நிலையில், தினகரன் தரப்பினரால் ஓ.பி.எஸ் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால், அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கும்படி, அவரது அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 2017-ம் ஆண்டு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இதை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கியது. அதன்படி மத்திய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த எட்டு துணை ராணுவப் படை வீரர்கள் ஓ.பி.எஸ்ஸுக்கு பாதுகாப்பு கொடுத்து வந்தனர்.

எஸ்.பி.ஜி புகார்; கம்போடியாவே கடைசி! - ராகுலின் வெளிநாடு டிரிப்புக்குக் கெடுபிடி காட்டும் மத்தியஅரசு

இவரைத் தவிர, தமிழகத்தில் மேலும் இரண்டு முக்கிய வி.ஐ.பி-க்களுக்கு இசட் பிரிவு எனப்படும் சி.ஆர்.பி.எஃப் கமாண்டோ பாதுகாப்புப் படை வழங்கப்பட்டு வருகிறது. அவர்கள் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், மற்றொருவர் பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி. இதற்கிடையே, ஓ.பி.எஸ் மற்றும் ஸ்டாலின் ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த மத்திய பாதுகாப்புப் படை திடீரென வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு நாளை முதல் அவர்களின் பாதுகாப்பு வாபஸ் பெறப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாகத் தமிழக போலீஸே இருவருக்கும் பாதுகாப்பு வழங்குவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

மத்திய பாதுகாப்புப் படை எனப்படும் கமாண்டோ படை பாதுகாப்பை தலைவர்களுக்கு மத்திய அரசுதான் கொடுக்கும். அதேபோல் அதை விலக்கும் முடிவையும் மத்திய அரசுதான் எடுக்கும். ஆனால், முடிவை மத்திய அரசு எடுக்கும் என்றாலும் அதற்கு மாநில அரசின் ஒப்புதல் தேவை. இப்படி இருக்கும்பட்சத்தில் தமிழக அரசு இருவருக்கும் அளித்துவந்த பாதுகாப்பை வாபஸ் பெற ஒப்புக்கொண்டதா என்று தெரியவில்லை. திடீரென இருவருக்கும் கொடுக்கப்பட்டு வந்த கமாண்டோ பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது பல விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

`ராகுலின் 143 பயணங்கள்!' - எஸ்.பி.ஜி பாதுகாப்புக்குச் செக் வைத்த உள்துறை அமைச்சகம்