Published:Updated:

திருவாரூர்: வழக்கறிஞர்மீது சாணிப்பால்; கம்யூனிஸ்ட் நிர்வாகி கைது; கொதிக்கும் அதிமுக! - நடந்தது என்ன?

``தனிப்பட்ட இரு நபர்களுக்கு இடையே நடக்கும் பிரச்னையை, அரசியல் பிரச்னையாக மாற்றுவது நியாயமல்ல. அதேசமயம், சாணியைக் கரைத்து ஊற்றுவதென்பது, அதை யார் செய்தாலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அனுமதிக்காது’’ என்கிறார் முத்தரசன்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

1960, 70-களில் கீழத்தஞ்சை மாவட்டத்தில் விவசாயத் தொழிலாளர்கள்மீது, பண்ணையார்கள் நடத்திய சாணிப்பால், சவுக்கடிக்கு எதிராகப் போராடியவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். ஆனால் இன்று இதே கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சிலர், அதிமுகர் பிரமுகர் மீது சாணிப்பாலை ஊற்றி அவமானப்படுத்தியதாகவும், இது மனிதத் தன்மையற்ற, அநாகரிகச் செயல் எனவும் அதிமுக-வினர் கொந்தளிக்கிறார்கள்.

காவல் நிலையத்தை முற்றுகையிட்ட அதிமுக-வினர்
காவல் நிலையத்தை முற்றுகையிட்ட அதிமுக-வினர்

என்ன நடந்தது?

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள பள்ளங்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் சுரேஷ்குமார். அதிமுக வழக்கறிஞர் அணியின் திருவாரூர் மாவட்ட இணைச் செயலாளராகப் பதவி வகித்துவரும் இவர், 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் திருத்துறைப்பூண்டி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இவர்மீது, இதே பகுதியைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சிப் பிரமுகர் தயாளன் உள்ளிட்ட ஆறு பேர் சாணத்தைக் கரைத்து ஊற்றியதாக காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தும், குற்றம் இழைத்தவர்கள் மீது காவல்துறையினர் விரைவாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திருத்துறைப்பூண்டி வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டார்கள். 50-க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள், திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தை முற்றுகையிட்டதோடு, முன்னாள் அமைச்சர் காமராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும் ஆயத்தமானார்கள், இந்தநிலையில்தான் தயாளனைக் கைதுசெய்து காவல்துறையினர் சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

நம்மிடம் பேசிய அதிமுக பிரமுகர் வழக்கறிஞர் சுரேஷ்குமார் ‘``எனக்கு நேர்ந்த அவமானத்தை வெளியில சொல்லவே வேதனையா இருக்கு. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய நிர்வாகக்குழு உறுப்பினராக இருக்குற தயாளன், இவரோட மனைவி, தம்பி உட்பட இவங்க குடும்பத்துல உள்ளவங்க எல்லாருமே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில இந்தப் பகுதியில முக்கியமான பொறுப்புல இருக்காங்க. அரசு புறம்போக்கு நிலத்துல சட்டவிரோதமாக போர்வெல் அமைச்சு, கடந்த பல வருஷமா தயாளன் குடும்பத்தினர் டேங்கர் லாரியில தண்ணீர் விற்பனை செஞ்சுக்கிட்டு இருக்காங்க. இதனால், இந்தப் பகுதியில் நிலத்தடிநீர் குறைஞ்சசுபோனதால, விவசாயத்துக்குத் தண்ணீர் கிடைக்கலை. ஊராட்சித் தலைவர், ஒன்றிக்குழுத் தலைவர் எல்லாருமே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர். இவங்க அதைக் கண்டிக்கவே இல்லை. மாவட்ட ஆட்சியர்கிட்ட புகார் தெரிவிச்சேன். அதிகாரிகள் ஆய்வு பண்ணி, தடை விதிச்சாங்க. அடுத்த சில நாள்கள் தண்ணீர் எடுக்காமல் இருந்த தயாளன், மறுபடியும் தண்ணீர் விற்பனையை ஆரம்பிச்சார்.

வழக்கறிஞர் சுரேஷ்குமார்
வழக்கறிஞர் சுரேஷ்குமார்

தண்ணீர் லாரியை மடக்கி, சட்டபூர்வ நடவடிக்கைகள்ல இறங்கினேன். இதனால் தயாளனுக்கு என் மேல் கோபம் அதிகமாகிடுச்சு. காலையில நான் வயலுக்கு கார்ல போய்க்கிட்டு இந்தப்போ, தயாளன் குடும்பத்தினர் என்னை வழிமறிச்சாங்க. கார் கண்ணாடியை இறக்கினேன். பாத்திரத்துல கரைச்சுவெச்சிருந்த சாணத்தை என் மேல ஊத்தினாங்க. அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்குதல் நடத்தவும் முயற்சி செஞ்சாங்க. உடனே நான் போக்குவரத்து இருக்குற இடத்துக்கு காரை ஓட்டிக்கிட்டு போயி, நடு ரோட்டுல உட்கார்ந்து கூச்சல் எழுப்பினதுனால, கூட்டம் சேர்ந்துடுச்சு. உயிர் பிழைச்சேன். இந்த அவமானத்தை நினைச்சு, ஒவ்வொரு நிமிஷமும் புழுங்கிக்கிட்டு இருக்கேன்.

`திமுக Vs இந்திய கம்யூனிஸ்ட்’ - இது திருவாரூர் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவி கலாட்டா

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சாணியைக் கரைச்சு ஊத்துறதுங்கறது, மிகவும் இழிவான செயல். அதுவும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவங்கவங்களே இப்படி அநாகரிகமாக நடந்துக்கிட்டது அதிர்ச்சியா இருக்கு. விவசாயத் தொழிலாளர்கள் மீது பண்ணையார்கள் சாணத்தைக் கரைச்சு ஊத்தி அவமானப்படுத்தியபோது, இது மனிதத்தன்மையற்ற செயல்னு கம்யூனிஸ்ட்டுங்க ,கொந்தளிச்சுப் போராட்டம் நடத்தினாங்க. ஆனா இப்போ, இந்த அநாகரிகச் செயல்ல ஈடுபட்டவங்க மேல, அவங்க கட்சித் தலைமை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கலை. காவல்துறையினரிடம் பிடிபடாமல் இருக்க, இந்தப் பகுதியிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகிகள்தான் இவங்களுக்கு அடைக்கலம் கொடுத்திருக்காங்க. இந்தச் சம்பவத்துக்கு கம்யூனிஸ்ட் கட்சித் தலைமை ஒரு கண்டன அறிக்கைகூட வெளியிடலை’’ என ஆதங்கப்பட்டார்.

கைதுசெய்யப்பட்ட தயாளன்
கைதுசெய்யப்பட்ட தயாளன்

தயாளன் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருப்பதால், அவர் சார்பில் நம்மிடம் பேசிய வழக்கறிஞர் ரஜினி, ``தயாளன் சட்டவிரோதமாக போர்வெல் அமைத்து தண்ணீர் விற்பனை செய்வதாகச் சொல்வது உண்மையல்ல. ஒரு கான்ட்ராக்டர்கிட்ட வேலை பார்த்துக்கிட்டு இருக்கார். தயாளனின் தம்பி மனைவி குளிப்பதை, சுரேஷ்குமாரின் மகன் செல்போன்ல வீடியோ எடுத்ததுனால கோபமாகி, கூச்சல் எழுப்பி கடுமையாகத் திட்டியிருக்கிறார், அந்த நேரத்தில் சுரேஷ்குமார், தயாளனின் வீட்டுக்குள் வந்து, தயாளனின் தம்பியைத் தாக்க முயன்றார். கணவரைக் காப்பாற்ற, சுரேஷ்குமார் மீது உமா சாணத்தை ஊற்றியிருக்கிறார். இதில் தயாளனுக்குச் சம்பந்தமில்லை’’ எனத் தெரிவித்தார்.

திருத்துறைப்பூண்டி நகர காவல்துறை துணை கண்காணிப்பாளர் சோமசுந்தரத்திடம் இது தொடர்பாகப் பேசியபோது, ‘``தயாளனின் தூண்டுதலின் பேரில், அவரது குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள், சுரேஷ்குமாரின் மீது சாணத்தை ஊற்றியிருக்கிறார்கள். சம்பவ இடத்தில் தயாளனும் இருந்திருக்கிறார். அவரைக் கைதுசெய்துள்ளோம். சட்டப்படியான நடவடிக்கைகள் நேர்மையாக நடைபெற்றுவருகின்றன. தயாளனின் தம்பி மனைவி குளிப்பதை, சுரேஷ்குமாரின் மகன் வீடியோ எடுத்ததாகக் குற்றம்சாட்டியதால், அவரது செல்போனை ஆய்வு செய்தோம். அது போன்ற வீடியோக்கள் எதுவும் இல்லை. தண்ணீர் எடுக்கும் வீடியோதான் இருக்கிறது’’ என்றார்.

முத்தரசன்
முத்தரசன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தயாளனுக்கு ஆதரவாக இருக்கிறதா ? இந்தக் கட்சியின் வழக்கறிஞரும், திருத்துறைப்பூண்டி வழக்கறிஞர் சங்கத் தலைவருமான அருள்செல்வன், ``இது மனிதகுலத்துக்கு எதிரான செயல். இந்தச் சம்பவத்தில் தயாளனுக்கு ஆதரவாக எங்கள் கட்சி செயல்படவில்லை. இதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாகக் கண்டிக்கிறது. அவர்மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க நாங்களும் வலியுறுத்தியிருக்கிறோம். சட்டவிரோதச் செயல்களுக்கு எங்கள் கட்சி எப்போதுமே ஆதரவாக இருக்காது’’ என்றார்.

இந்தக் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், ‘``தனிப்பட்ட இரு நபர்களுக்கு இடையே நடக்கும் பிரச்னையை, அரசியல் பிரச்னையாக மாற்றுவது நியாயமல்ல. அதேசமயம், சாணியைக் கரைத்து ஊற்றுவதென்பது, அதை யார் செய்தாலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அனுமதிக்காது’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு