Published:Updated:

``திராவிட இயக்கங்களால் பெண்களுக்கு துணிச்சலைத் தரமுடியவில்லை" - `பளீர்' பாலபாரதி

பாலபாரதி
பாலபாரதி

``பெண் விடுதலை, பெண் உரிமை பேசும் திராவிட இயக்கங்களில், வெறும் உறுப்பினர்களாக மட்டுமே பெண்கள் இருக்கிறார்கள். சுயமாகவோ சுதந்திரமாகவோ தாங்கள் சார்ந்திருக்கும் அமைப்புரீதியான ஒரு போராட்டத்தை அவர்களால் முன்னெடுக்க முடியாது."

கட்சிக் கூட்டங்கள், போராட்டங்கள், தொலைக்காட்சி விவாதங்கள் எனப் பரபரப்பான அரசியல் பணிகளுக்கு இடையேயும் உள்ளாட்சித் தேர்தல் வேலைகளிலும் கவனம் செலுத்திவருகிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான தோழர் பாலபாரதி. அனைத்து தோழர்களைப்போல் எப்போதும் சந்திக்கக்கூடிய எளிய பெண்மணியான அவரிடம் பேசினோம்.

``தினம் ஒரு போராட்டக்களம் என்ற வகையில், ஒரு பெண்ணாக என்னென்ன சிரமங்களைச் சந்திக்கிறீர்கள்?''

``எறும்பில் ஆரம்பித்து யானை வரை எல்லோரது வாழ்க்கையுமே போராட்டம்தான். எனவே, தனிப்பட்டப் பிரச்னைகளைப் பற்றி தோழர்களாகிய நாங்கள் அதிகம் சிந்திப்பதில்லை. இருப்பினும், நமது ஆணாதிக்கச் சமூக அமைப்பில், பெண் தோழராக வெளியூர் போய் வருவதில் நிறைய சிரமங்கள் இருக்கின்றன. கட்சிக் கூட்டங்களுக்குச் சென்று வரும் சமயங்களில், இயற்கை உபாதையைக் கழிப்பதற்கான நல்ல கழிவறைகூட நம் ஊர் பேருந்துநிலையங்களில் இருக்காது. வெளியூர்களில் இரவு 8 மணிக்குமேல் ஒரு பெண் தனியாகச் செல்லும்போது ஏற்படும் அனுபவங்கள் என்னவென்பது பெண் தோழராகிய எங்களுக்குத்தான் தெரியும். மற்ற அரசியல் கட்சியினரோ அல்லது எங்கள் இயக்க ஆண் தோழர்களோகூட இந்த அனுபவத்தைப் பெற்றிருக்க வாய்ப்பில்லை.

இரவில் கட்சிக் கூட்டங்கள் முடிந்து ஊர் திரும்புவதற்காக பஸ் ஸ்டாண்டில் வந்து காத்திருக்கும் நேரத்தில், அங்கு இருக்கும் எல்லோருடைய பார்வையும் எங்கள்மீதே பதிந்திருக்கும். வித்தியாசமான அந்தப் பார்வையை நம் பெண்கள் அனைவருமே எதிர்கொண்டிருப்பார்கள்; அவர்களில் நானும் ஒருத்தி. மிகப்பெரிய மனப்போராட்டமும் சிரமமுமாகவே அந்நேரம் கழியும். பஸ் வந்து அதில் ஏறி உட்கார்ந்து ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்த பிறகுதான் புது மனுஷியாகவே மாறுவோம்.''

* சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

``கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பெண்களின் பங்களிப்புக்கான வாய்ப்புகள் எவ்வாறு இருக்கின்றன?"

``கம்யூனிஸ்ட் இயக்கத்தில் மட்டும்தான் பெண்கள் அமைப்புரீதியாக ஒன்றுதிரள்கிறார்கள். மாதர் சங்கத்தில் இணைந்து போராடும் பெண்கள், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் உறுப்பினர் ஆகிவிடுகிறார்கள். பிறகு, கமிட்டி உறுப்பினராகத் தேர்வுசெய்யப்படுகிறார்கள். பல இடங்களில், இடைகமிட்டி செயலாளர்களாகவும் இருக்கிறார்கள். பெண்களுக்கான பாதுகாப்பு இயக்கமாகவும் கம்யூனிஸ்ட் கட்சிதான் இருக்கிறது. எந்த ஒரு பிரச்னையையும் பெண்கள் துணிச்சலாக முன்னெடுத்துக்கொண்டு போராடுவதன் பின்னணியில் அமைப்பு வலுவாக இருக்கிறது. ஆண்கள் நாற்காலியிலும் பெண்கள் தரையிலும் அமர்வது மாதிரியான சமத்துவமின்மை இங்கே கிடையாது.''

பாலபாரதி
பாலபாரதி

``திராவிடக் கட்சிகளும் ஆண் - பெண் சமத்துவம் மற்றும் பெண்கள் முன்னேற்றத்தைத்தானே முன்னெடுக்கின்றன?''

``பெண் விடுதலை, பெண் உரிமை பேசும் திராவிட இயக்கங்களில், வெறும் உறுப்பினர்களாக மட்டுமே பெண்கள் இருக்கிறார்கள். சுயமாகவோ சுதந்திரமாகவோ தாங்கள் சார்ந்திருக்கும் அமைப்புரீதியான ஒரு போராட்டத்தை அவர்களால் முன்னெடுக்க முடியாது. சிதம்பரம் - பத்மினி வழக்கு, வாச்சாத்தி பிரச்னை, நாலு மூலைக் கிணறு பிரச்னை என, சமூகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைப் பிரச்னைகளை கையில் எடுத்துப் போராடும் கட்சியாக கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே இருக்கிறது. தி.மு.க, அ.தி.மு.க அல்ல. சமத்துவம் என்பது ஒரு வார்த்தையோ அல்லது ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொள்ளும் விஷயமோ அல்ல.

பிரச்னைகளை எடுத்துப் போராடுவதற்கான துணிச்சலை திராவிட இயக்கங்களால் பெண்களுக்குக் கொடுக்க முடியவில்லை என்பதே உண்மை.

பெண்ணுரிமை பேசும் திராவிட ஆட்சிகள் நடைபெறும் தமிழ்நாட்டில், ஏன் இவ்வளவு வன்முறைகள் நடைபெறுகின்றன. காரணம், அமல்படுத்துகிற அரசியல் அமைப்புகளில் உள்ள கோளாறுதான். கட்சியில் பெண்களின் எண்ணிக்கையை வெறும் இடஒதுக்கீடாக மட்டுமே பார்க்கக் கூடாது. நடைமுறை இயக்கப் பணிகளில் அந்தப் பெண்கள் எங்கே இருக்கிறார்கள் என்றுதான் பார்க்க வேண்டும். அப்படிப் பார்க்கும்போது, திராவிடக் கட்சிகளில் பெண்களை ஒதுக்கித்தான் வைத்திருக்கிறார்கள். ஆண் தலைவர்கள்தான் அங்கே முன்னிலைப்படுத்தப்படுகிறார்கள்.''

- ஜூனியர் விகடன் இதழுக்கு பாலபாரதி அளித்த சிறப்பு நேர்காணலின் சுருக்கமான வடிவம் இது. அவரது பர்சனல் பக்கங்களை உள்ளடக்கிய முழுமையான பேட்டியை வாசிக்க > "திராவிடக் கட்சிகள், பெண்களை ஒதுக்கி வைத்திருக்கின்றன!" - `பளிச்' என உடைக்கிறார் பாலபாரதி http://bit.ly/34QhWmh

* சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

அடுத்த கட்டுரைக்கு