Published:Updated:

தேசிய அந்தஸ்தை இழந்துவிடுமா கம்யூனிஸ்ட் கட்சிகள்?! - தேர்தல் ஆணைய சஸ்பென்ஸ்

இ.லோகேஷ்வரி

இந்திய கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தேசிய அந்தஸ்தை ரத்துசெய்வது குறித்து தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

Communist Party of India
Communist Party of India

ஓர் அரசியல் கட்சி, மக்களவை அல்லது சட்டப் பேரவைத் தேர்தலில், நான்கு மாநிலங்களிலாவது ஆறு சதவிகித வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும். அதேபோல், அக்கட்சிக்கு 4 மக்களவை உறுப்பினர்கள் இருக்க வேண்டும். குறைந்தது 4 மாநிலங்களில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருக்க வேண்டும். அப்போதுதான் அக்கட்சி தேசியக் கட்சியாக, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படும்.

Election Commission of India
Election Commission of India

தேர்தல் சின்னம் ஒதுக்கீட்டுச் சட்டம் 1968ல், இதுகுறித்த சட்டத் திருத்தங்கள் விரிவாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. காங்கிரஸ், பா.ஜ.க, பகுஜன் சமாஜ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் ஆகியவையே தேசியக் கட்சிகளாகத் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

இவற்றுள், கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில், தேசியவாத காங்கிரஸ் 1.4 சதவிகித வாக்குகளையும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 0.6 சதவிகித வாக்குகளையும் பெற்றிருந்தன. 2019 நாடாளுமன்றத் தேர்தலில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டு இடங்களில் வெற்றிபெற்றது. அதேபோல், தேசியவாத காங்கிரஸ் ஐந்து இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது.

Trinamool Congress
Trinamool Congress

பகுஜன் சமாஜ் கட்சி 10 மக்களவைத் தொகுதிகளையும், சில சட்டப்பேரவைத் தொகுதிகளையும் கைப்பற்றியது. கடந்த இரண்டு மக்களவைத் தேர்தலில், திரிணாமுல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு மக்களிடையே போதிய ஆதரவு கிடைக்காமல் போனதையடுத்து, அவற்றின் தேசியக் கட்சி அந்தஸ்தை ஏன் ரத்துசெய்யக்கூடாது என்று கேட்டு அக்கட்சிகளுக்குத் தேர்தல் ஆணையம் சமீபத்தில் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

மக்கள் தங்களுக்குத் தரும் ஆதரவையும் அங்கீகாரத்தையும் மேம்படுத்திக்கொள்ள மீண்டும் தங்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று அவை தேர்தல் ஆணையத்திடம் கோரின. பழைமையான கட்சிகளாக இருப்பதாலும், தேசிய தேர்தலில் முக்கியப் பங்கு வகித்திருப்பதாலும் சமீபத்திய தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் மட்டும் தங்களுக்கான தேசிய அங்கீகாரத்தை ரத்து செய்யக்கூடாது என்று இக்கட்சிகளின் பிரதிநிதிகள் தேர்தல் ஆணையத்தை சந்தித்து தங்களது கருத்துகளை எடுத்துரைத்தனர்.

Nationalist Congress Party
Nationalist Congress Party

"திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு கடந்த 2014-ம் ஆண்டில்தான் தேசியக் கட்சி அந்தஸ்து அளிக்கப்பட்டது. குறைந்தபட்சம் 2024-ம் ஆண்டு வரையாவது அது நீடிக்க அனுமதிக்கப்பட வேண்டும்'' என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

''மகாராஷ்டிரத்தில் 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளோம். தொடங்கப்பட்ட காலத்திலேயே தேசியக் கட்சிக்கான தகுதிகளைத் தேசியவாத காங்கிரஸ் கொண்டிருந்தது. கடந்த 2014 பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்ததற்காகத் தேசியக் கட்சி அந்தஸ்தை இழக்க இயலாது. வரும் பேரவைத் தேர்தலில் மீண்டு வருவோம். தேசியக் கட்சி அந்தஸ்தைத் தக்கவைக்க எங்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்'' என்று தேசியவாத காங்கிரஸ் விளக்கக் கடிதம் கொடுத்துள்ளது.

Communist Party of India
Communist Party of India

2014 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வந்ததுமே, குறைவான ஆதரவைப்பெற்ற கட்சிகளின் தேசியக் கட்சி அந்தஸ்து கேள்விக்குள்ளானது. ஆனால், தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளின் அந்தஸ்தை 5 ஆண்டுகளுக்குப் பதிலாக 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கடந்த 2016-ல் தேர்தல் ஆணையம், விதிகளில் சில திருத்தங்களைக் கொண்டுவந்தது.

இதனால் அந்தக் கட்சிகள், தேசிய அங்கீகாரத்தை இழக்கும் நெருக்கடியிலிருந்து அப்போது தப்பின. ஆனால், தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்தக் கட்சிகள் குறைவான வாக்கு சதவிகிதத்தைப் பெற்றிருப்பதால், பகுஜன் சமாஜ் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், அதன் தேசிய அந்தஸ்தை இழக்க நேரிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

BJP symbol
BJP symbol

ஆனால், நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், பி.ஜே.பி மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. அதுவும் 300-க்கும் அதிகமான இடங்களைப் பிடித்து பெரும்பான்மையோடு ஆட்சியமைத்திருக்கிறது. காங்கிரஸ் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

உள்ளாட்சித்தேர்தல் நடக்குமா நடக்காதா? என்ன சொல்கிறது மாநில தேர்தல் ஆணையம்?

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் இதுகுறித்துக் கூறுகையில், ''இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மிகப்பெரிய பாரம்பர்யம்கொண்டது. ஒரு மாநிலத்தில் ஆட்சியில் இருக்கிறது. பல மாநிலங்களில் ஆட்சியில் இருந்திருக்கிறது. மத்தியிலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்திருக்கிறது. ஒரு தேர்தலைவைத்து மட்டும், தேர்தல் ஆணையம் இதை கணக்கில் எடுக்கக்கூடாது.

 R. Mutharasan
R. Mutharasan

இந்த நிலை மாறும். பா.ஜ.க-வுக்கும் நாளை இந்த நிலை ஏற்படும். எங்களுடைய கருத்துகளைத் தெளிவாகத் தேர்தல் ஆணையத்திடம் எடுத்துரைத்துள்ளோம். அதை உரிய முறையில் பாரபட்சமில்லாமல் பரிசீலிக்கப்படவேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. அதைத் தேர்தல் ஆணையம் செய்யும் என்று நம்புகிறோம்'' என்றார்.