
சி.மகேந்திரன் நேர்காணல்

பொதுவுடைமைக் கருத்துகளை கலை, இலக்கியம் வழியே சாமானியர்களிடம் எளிதாக எடுத்துச் செல்ல முடியும் என்பதை நிரூபித்தவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். ஆரம்பக்காலங் களில் தமிழகத்திலும் கலை, இலக்கியம் வழியே தீவிரமாகச் செயல்பட்டார்கள் கம்யூனிஸ்ட்டுகள். ஆனால், இன்று நிலைமை அவ்வாறு இல்லை. அதேசமயம் கேரளத்திலும் மேற்குவங்கத்திலும் அவர்களின் கலை, இலக்கியச் செயல்பாடுகளின் வீரியம் குறையவில்லை. இதுகுறித்தெல்லாம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி.மகேந்திரனிடம் உரையாடினோம்.
‘‘வரலாற்றில் கம்யூனிஸ்ட்டுகளுக்கும் கலை, இலக்கியத்துக்குமான நெருக்கம் எப்படி இருக்கிறது?’’
‘‘மனிதர்கள் சமமாக வாழவேண்டும் என்ற லட்சியத்தையும் நோக்கத்தையும் கொண்டதுதான் கம்யூனிசம். கலையும் இலக்கியமும் ‘மனிதர்கள் சமத்துவத்துடன் வாழவேண்டும்’ என்ற அடிப்படையைத்தான் கொண்டிருக்கின்றன. எனவே, வேறெந்தத் தத்துவத்தைவிடவும் கம்யூனிசத்துக்கும் கலை, இலக்கியத்துக்கும் கூடுதல் நெருக்கம் உண்டு. 17, 18, 19-ம் நூற்றாண்டுகளில் உலகெங்கும் வாழ்ந்துவந்த இலக்கியவாதிகள் மற்றும் திரைத் துறையினர் கம்யூனிச ஆதரவாளர்களாகத்தான் இருந்தனர். முதன்முதலில் சலனப்படத்தை உருவாக்கிய லூமியர் சகோதரர்கள், கம்யூனிச ஆதரவாளர்களே. இவர்கள்தான் பிரெஞ்சு நாட்டில் உள்ள ஏழைகளின் நிலையைப் படம்பிடித்து, ஒவ்வோர் ஊராக அந்தப் படங்களைத் திரையிட்டுக் காட்டினர். இடதுசாரி சிந்தனைகொண்ட சார்லி சாப்ளின், ஹிட்லரையே எதிர்த்து நின்றார்.’’
‘‘தமிழ் திரைத்துறை, பொதுவுடைமைக் கருத்துகளைப் பேச ஆரம்பித்தது எப்போது?’’
‘‘புராணக் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்கள் வந்துகொண்டிருந்த 1950 காலகட்டத்திலேயே, தொழிலாளர்கள் மற்றும் சாதாரண மக்களின் வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டு ‘பாதை தெரியுது பார்’ என்ற படத்தை இரண்டு கம்யூனிஸ்ட்டுகள் சேர்ந்து உருவாக்கினர். ஒருவர், படத்தின் இயக்குநரான நிமாய் கோஷ்; மற்றொருவர், இசையமைப்பாளர் எம்.பி.சீனிவாசன். திருச்சி ரயில்வேயில் பணிசெய்துகொண்டிருந்த கம்யூனிசத் தொழிலாளர்கள் மற்றும் ஆதரவாளர் களிடம் பங்குகள் திரட்டி கிடைக்கப்பெற்ற முதலீட்டைக் கொண்டுதான் இந்தப் படமே தயாரிக்கப்பட்டது.’’
‘‘திராவிடக் கருத்துகளைப் பேசும் படங்களுடன் கம்யூனிசச் சித்தாந்தப் படங்கள் போட்டியிட முடிய வில்லையா?’’
‘‘ஹீரோயிசத்தை முன்னிறுத்தி படங்கள் வந்துகொண்டிருந்த காலகட்டத்திலேயே எழுத்தாளர் ஜெயகாந்தன், சமத்துவத்தையும் மனிதநேயத்தையும் வலியுறுத்தும் படங்களை எடுத்தார். ஆனால், இந்தப் புது முயற்சியை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்ல இங்கு உள்ள கம்யூனிஸ்ட்டுகளால் முடியவில்லை. ஆனால், அதே காலகட்டத்தில் திராவிட இயக்கங்கள் கதாநாயகர்களை மையப்படுத்தி, கம்யூனிசக் கருத்துகள்கொண்ட திரைப்படங்களை உருவாக்கி, புதியதோர் அரசியல் வட்டத்தை உருவாக்கிவிட்டனர். இந்தப் படங்கள் கம்யூனிசக் கருத்துகளைப் பேசினவே தவிர, கம்யூனிசச் சித்தாந்தத்தை மக்களிடம் சேர்க்கவில்லை. இதையெல்லாம் கம்யூனிஸ்ட்டுகள்தான் செய்திருக்க வேண்டும். ஆனால், செய்யத் தவறிவிட்டார்கள்.’’
‘‘திரைப்படங்களில் கருத்து பரப்புவதைவிடவும் போராட்டங்கள் வழியே மக்களைச் சென்றடைய முடியும் எனக் கருதிவிட்டார்களா கம்யூனிஸ்ட்டுகள்?’’
‘‘கம்யூனிஸ்ட்டுகளோ திறமை சார்ந்தவர்களோ திரைத்துறைக்குள் வராத வகையில், திரைப்படம் என்பதே பணம் சார்ந்த முதலாளிகளின் துறையாக இங்கே மாற்றப்பட்டுவிட்டது. அடுத்ததாக கம்யூனிசக் கருத்துப் பிரசாரம் என்பதைவிடவும், மக்களுக்கான நல்ல சினிமாக்களைக் கொண்டு வருவதில் இங்கே உள்ள கம்யூனிஸ்ட்டுகள் ஆர்வம்காட்டவில்லை என்பதையும் சொல்லியாக வேண்டும். இதில் ஆழமாக நின்று போராடிப் பார்த்தவரென்றால், அது தோழர் ப.ஜீவா மட்டுமே.’’
‘‘கலை, இலக்கியத்தில் தோழர் ஜீவாவின் பங்களிப்புகள் தமிழகத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தின?’’
‘‘1960-ல் ஜீவா தொடங்கிய தமிழ்நாடு கலை, இலக்கியப் பெருமன்றத்தின் வீச்சு, ஒரு புதிய பார்வையைக் கொடுத்தது. திராவிட இயக்கங் களின் கருத்தாக்கங்களுக்கு எதிராக, பெரியதொரு கேள்வியை ஏற்படுத்தியது. உதாரணமாக, கம்ப ராமாயணத்தை ‘காமரசம்’ என்று அறிஞர் அண்ணா எழுதினார். ஆனால், அதே கம்ப ராமாயணத்தில் உள்ள இலக்கியச்சுவை குறித்துப் பேசுவதற்காகவே கம்பன் விழாவில் தொடர்ந்து பேச ஆரம்பித்தார் ப.ஜீவா. இதன் பிறகுதான் ‘காமரசம்’ என்று விமர்சித்த தி.மு.க-வினரே கூட, வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்ததும் கம்பருக்கு சிலை அமைக்க நேரிட்டது.

இதேபோல், உழைக்கும் மக்களுக்கான சமத்துவத்தையும் உரிமையையும் பற்றிப் பேசியது மகாகவி பாரதியின் பாடல்கள்தான் என்ற புதிய கண்ணோட்டத்தை மக்களிடையே முன்வைத்ததும் ஜீவாதான். அதுவரையிலும் `விடுதலைப் போராட்டத்துக்கான கவிதைகளை எழுதியவர்’ என்ற கண்ணோட்டம்தான் பாரதிமீது இருந்தது. `சமூக மாற்றத்துக்கான கவிஞன் பாரதி’ என்ற உண்மையை, உலகுக்கு உரக்கச் சொன்னார் ஜீவா.’’
‘‘கலை, இலக்கியத்தை கட்சியின் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக்கொள்ளும் உத்தியை தமிழக கம்யூனிஸ்ட்டுகள் உணர்ந்திருக்கவில்லையா?’’
‘‘ரஷ்யாவில், கம்யூனிஸ்ட்டுகள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததுமே முதல் வேலையாக நாட்டுப்புறப் பாடல்கள், திரைத்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளையுமே கையில் எடுத்துக் கொண்டு முக்கியத்துவம் அளித்தார்கள். இன்றைக்கும் திரைப்படம் பற்றிய அடிப்படைத் தேவைகளுக்கான சிறந்த நூல்கள் என்றால், அது கம்யூனிச நாடாக ரஷ்யா இருந்தபோது எழுதப் பட்ட நூல்கள்தான்.
இந்தியாவிலேயேகூட, கம்யூனிஸ்ட்டுகள் ஆட்சிசெய்துவந்த கேரளம், மேற்குவங்கம் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் கலை, இலக்கியத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்தார்கள். தமிழ்நாட்டிலும் இப்படியான முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என, பெருமுயற்சி களை ஜீவா செய்தார். ஆனாலும், அவரின் பங்களிப்பை இங்கே உள்ள கம்யூனிஸ்ட்டுகள் முழுமையாக ஏற்றுக்கொள்ள வில்லை. புரட்சி அல்லது மாற்றத்துக்கு கலை, இலக்கியம் வழியான பிரசாரப் பங்களிப்பைக் குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள்.’’
‘‘ஆனாலும் இங்கே பொதுவுடைமைத் தத்துவத்தைப் பேசும் படங்கள் தொடர்ந்து வெற்றி பெறுகின்றனதானே?’’

‘‘உலகமயமாக்கல் பாதிப்பு, நீர், நில ஆதிக்கத்தால் ஏற்படும் பாதிப்பு, ஊழல், லஞ்சம் என அனைத்து பாதிப்புகளையும் எதிர்த்து நிற்கக்கூடிய ஒரு கருத்தைச் சொல்லவேண்டும் என்றால், அது கம்யூனிசக் கருத்துகளாகத்தான் இருக்கின்றன. எனவே, மாற்றுக் கருத்துகளை முன்வைக்கக்கூடிய திரைப்பட கதாநாயகர்கள் எல்லோருமே ஏதோ ஒருவிதத்தில் கம்யூனிஸ்ட்டு களின் கருத்தைத்தான் வசனமாகப் பேசுகிறார்கள். உதாரணமாக `ஜோக்கர்’, `கத்தி’, `காலா’, `அறம்’, `அருவி’, `சர்கார்’, `அசுரன்’ உள்ளிட்ட படங்களைச் சொல்லலாம். இயக்குநர் ஜனநாதன், ராஜுமுருகன் உள்ளிட்டோர் இதில் முக்கியமானவர்கள். குறிப்பாக, ராஜுமுருகன் கம்யூனிச ஐகானாகவே தனித்துத் தெரிகிறார்.’’
“கலைத்துறையை விடுங்கள்... இலக்கிய உலகை இன்றைக்கும் கம்யூனிஸ்ட்டுகள்தானே ஆள்கிறார்கள்?’’காடு, நிலம், நீர் என இயற்கையைப் பாதுகாக்கவேண்டும் என்ற அக்கறை இளைஞர்களிடையே எழுந்திருக்கிறது.
‘‘உண்மை. இலக்கிய உலகில், இதுவரை சாகித்திய அகாடமி விருது பெற்றவர்களில் கம்யூனிச எழுத்தாளர்கள்தான் அதிகம். இந்திய அளவிலேயே இதுதான் உண்மை. தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில், தி.க.சிவசங்கரன், பொன்னீலன், தொ.மு.சி.ரகுநாதன்,
சு.வெங்கடேசன் வரை எல்லோருமே கம்யூனிசச் சிந்தனை கொண்டவர்கள்தாம். உண்மையான இலக்கிய மாறுதல்களை கம்யூனிஸ்ட்டுகள் தான் செய்துவருகிறார்கள் என்பது இதன்மூலம் தெளிவாகிறது. இனிவரும் காலங்களில் இலக்கிய உலகிலும் கம்யூனிஸ்ட்டுகளின் ஆதிக்கம் தொடரும்.’’
காடு, நிலம், நீர் என இயற்கையைப் பாதுகாக்கவேண்டும் என்ற அக்கறை இளைஞர்களிடையே எழுந்திருக்கிறது.
‘‘கலை, இலக்கியம் வழியே கம்யூனிசத்தை வளர்த்தெடுக்க இங்கு உள்ள கம்யூனிஸ்டுகள் செய்ய வேண்டியது என்ன?’’
‘‘உலகப்பார்வையை, உலக சினிமாவை தமிழக கம்யூனிஸ்ட்டுகள் முழுமையாக உள்வாங்கவில்லை. முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்க் களத்தில் மிகப்பெரும் எழுத்தாளர் களேகூட பங்கு பெற்றிருக் கிறார்கள். இந்தப் பங்களிப்பு களையெல்லாம் இங்கே உள்ளவர்கள் புரிந்துகொள்ள வில்லை. இனிமேலாவது புரிந்துகொள்ள வேண்டும். கருத்துரீதியான கம்யூனிசத்தை அநேகமாக எல்லோருமே ஏற்றுக்கொள்கிறார்கள். எனவே, கருத்துரீதியாக ஒன்றிணைந் திருக்கும் இந்த மக்களை எப்படி ஒன்றுதிரட்டுவது என்ற பார்வை யில்தான் கம்யூனிஸ்ட்டுகள் செயல்பட வேண்டும்.
உலகமயமாக்கல் தாக்கத்தால், இன்றைக்கு போராட்டங்களின் வடிவங்கள் மாறிப்போய்விட்டன. அதேசமயம் காடு, நிலம், நீர் என இயற்கையைப் பாதுகாக்கவேண்டும் என்ற அக்கறை இளைஞர்களிடையே எழுந்திருக்கிறது. ஜல்லிக்கட்டுப் போராட்டம் அதற்கு சிறந்த உதாரணம். எனவே, வரவிருக்கும் காலங்களில் இளைஞர்கள் முன்வைக்கக்கூடிய மாற்றுத்திட்டங்களை ஏற்றுக்கொள்வதுடன், அவர்களுடன் இணைந்து வேலை செய்யக் கூடிய மனப்பாங்கை கம்யூனிஸ்ட்டுகள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.’’