Published:Updated:

“மண்ணுக்கான மார்க்சியமே வெற்றிக்கான வழி!”

தோழர் தா.பாண்டியன்
பிரீமியம் ஸ்டோரி
தோழர் தா.பாண்டியன்

தோழர் தா.பாண்டியன் உறுதி

“மண்ணுக்கான மார்க்சியமே வெற்றிக்கான வழி!”

தோழர் தா.பாண்டியன் உறுதி

Published:Updated:
தோழர் தா.பாண்டியன்
பிரீமியம் ஸ்டோரி
தோழர் தா.பாண்டியன்

இந்திய கம்யூனிஸ்ட் பேரியக்கம் நூற்றாண்டைத் தொட்டிருக்கும் வேளையில், 88 வயது இளைஞனாக கட்சிப் பணியாற்றிவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் தோழர் தா.பாண்டியனைச் சந்தித்தோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘‘பொதுவுடைமைச் சித்தாந்தத்தின்மீது ஈர்ப்பு ஏற்பட்டது எப்போது?’’

‘‘1947-ம் ஆண்டில் உசிலம்பட்டி போர்டு உயர்நிலைப் பள்ளியில் இறுதி வகுப்பு படித்தபோது, என் மூத்த அண்ணன் செல்லப்பா, அமெரிக்கன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந் தார். அவரின் நெருங்கிய நண்பர்கள் மூவர் சனி, ஞாயிறு விடுமுறையில் எங்கள் வீட்டுக்கு வந்துவிடுவார்கள்.

“மண்ணுக்கான மார்க்சியமே வெற்றிக்கான வழி!”

‘சோஷலிசம் - கம்யூனிசம் என்றால் என்ன, காந்தி - நேரு ஆகியோர் எந்தப் பாதையைக் கடைப்பிடிக்கிறார்கள், நேதாஜி எந்தப் பாதைக்குப் போய்விட்டார்...’ என்றெல்லாம் தொடர்ந்து மணிக்கணக்கில் காரசாரமாக விவாதிப்பார்கள். அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதெல்லாம் எனக்குப் புரியாது. ஆனால், அவர்கள் உச்சரிக்கும் ரூஸ்வெல்ட், ஸ்டாலின், ஏங்கெல்ஸ், மார்க்ஸ் போன்ற பெயர்களெல்லாம் அதுவரை நான் கேட்டேயிராத பெயர்கள் என்பதால், என்னையும் அறியாமல் அந்தப் பேச்சுமீது எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. அதுபற்றி மேலும் விவரங்களைத் தெரிந்து கொள்வதற்கான புத்தகங்கள் எனக்கு அப்போது கிடைக்கவில்லை. வெகுநாட்களுக்குப் பிறகு, சாமிநாத சர்மா எழுதிய புத்தகங்களை யெல்லாம் படித்த பிறகு, மாணவர்களாகிய நாங்களே 20 பேராக ஒன்றிணைந்து எங்களை நாங்களே ‘கம்யூனிஸ்ட்டுகள்’ என்று அறிவித்துக்கொண்டோம்.’’

‘‘தோழர் ஜீவாவுடன் எப்போது அறிமுகம் ஏற்பட்டது?’’

‘‘கல்லூரி வாழ்க்கையில் தோழர் ராமமூர்த்தி, மணலி கந்தசாமி, கல்யாண சுந்தரம், ஜீவா என இயக்கத் தலைவர்களைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருந்தோம். 1952-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ ஆன தோழர் ஜீவா, காரைக்குடி கம்பன் விழாவில் பேச வந்திருந்தார். அப்போதுதான் அவரை முதன்முதலாக நேரில் பார்த்தேன். தோழமை உணர்வோடு என்னுடன் விவாதிக்கத் தொடங்கினார். எனக்கும் இலக்கியத்தில் ஈடுபாடு இருந்ததால், கம்பன் விழா, பாரதி விழா, பாரதிதாசன் விழா என தோழர் ஜீவாவோடு சேர்ந்து பயணிக்க ஆரம்பித்தேன். பட்டுக்கோட்டையார் பாடல்களை, மக்களிடையே பரவலாக எடுத்துச் சென்றோம். 1952-ல் தொடங்கிய எங்கள் நட்பு, அவர் மறைவு வரையிலும் நெருக்கமாகத் தொடர்ந்தது.’’

‘`மக்களிடையே பேரெழுச்சி பெற்றிருந்த கம்யூனிஸ்ட் கட்சி, அதன் பிறகு தோன்றிய தி.மு.க-வைவிட வலிமை குன்றிப்போனது ஏன்?’’

‘‘1948-ம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சி அடக்குமுறைக்குள்ளானபோது, கட்சிக்கு மக்களிடையே பெரும்செல்வாக்கு கிடைத்தது. அதன் வெளிப்பாடாக, 1952-ம் ஆண்டு தேர்தலில் பெரும்வெற்றியும் கிடைத்தது. அதன் பிறகு தொடர்ந்து சரிவுப்பாதையிலேயே பயணித்துவிட்டோம். காரணம், கம்யூனிஸ்ட் கட்சி பெரும்மக்கள் கட்சியாக மாறாமல், விவசாயச் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம் என்று தொழிலாளர்கள் நலன் சார்ந்து சிறு பகுதிக்கான கட்சியாக மட்டுமே இருந்தது. மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என்று யாருமே கம்யூனிஸ்ட் கட்சிக்குள் வருவதில்லை. தொழிற்சங்கங் களிலும்கூட, ‘அரசியல் பேசாதே’ என்றார்கள். இதுமட்டுமல்ல, ‘இவர்கள் ஆட்சிக்கு வந்தால் தங்கள் கடையைப் பறித்து விடுவார்கள்; நிலத்தைப் பறித்துவிடுவார்கள்’ என்ற செய்திகளும் அப்போது மக்களிடையே பரவியிருந்தன. இவை முழுக்க மாற்றப்பட்டிருக்க வேண்டும்.

தோழர் தா.பாண்டியன்
தோழர் தா.பாண்டியன்

`இந்தியாவில் ஜனநாயகம் வென்றுவிட்டது. நாமும் ஜனநாயகப் பாதைக்கு மாறுவோம்’ என்று அமிர்தசரஸ் மாநாட்டிலேயே கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானமும் நிறைவேற்றி விட்டது. ஆனாலும், அதற்கேற்ப மக்கள் மனங்களை வென்றெடுக்காமல், தேர்தல் காலத்தில் மட்டும் கிராமங்களுக்குச் சென்று ‘கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாக்களியுங்கள்’ என்று கேட்கிறோம். அப்போதுதான் மக்களுக்கும் கட்சிக்குமான அறிமுகமே நடக்கிறது என்கிறபோது, நாங்கள் தோற்றுவிடுகிறோம். தோழமைக் கட்சிகளோடு சேர்ந்து போட்டியிடும்போதுதான் வெற்றி வாய்ப்பே கிடைக்கிறது.

1949-ல் தி.மு.க தொடங்கப்பட்டு பிரசாரம் செய்கிறபோதே, ‘எங்கள் லட்சியமும் பொதுவுடைமைதான். ஆனால், பாதை வேறு’ என்று அறிஞர் அண்ணா அறிவித்தார். இப்படி கம்யூனிசக் கொள்கைகளைச் சொல்லி, அதேசமயம் எங்கள் நடைமுறையை மட்டும் ஒப்புக் கொள்ளாமல் அரசியல் செய்துவந்த தி.மு.க-வை, அன்றைக்கு கம்யூனிஸ்ட் கட்சியினர் முதல் எதிரியாகப் பார்த்தனர். ‘இது தவறான பார்வை’ என்று அப்போதே ஜீவா, ராமமூர்த்தி என தோழர்கள் அனைவரிடமும் விவாதித்திருக்கிறேன்.

1957, 1962 என ஒவ்வொரு தேர்தலிலும் தி.மு.க ஏறுமுக வெற்றியைப் பெற்றுவந்தது. தி.மு.க கூட்டங்களில் அண்ணாவின் பேச்சுக்கு லட்சம் பேர் கூடுகிறார்கள். நெடுஞ்செழியன், அன்பழகன், கருணாநிதி என அடுத்தடுத்த தலைவர்கள் வந்தார்கள். ஆனால், தி.மு.க-வுக்கும் முன்பே மாபெரும் புரட்சியாளர்களாகவும் பேச்சாளர்களாகவும் திகழ்ந்த ஜீவா, ராமமூர்த்தி போன்ற தோழர்களைக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சியில், அடுத்தடுத்த தலைவர்கள் என யாரும் வரவில்லை. ரஷ்யா, சீனா என்று நமக்கு சம்பந்தமே இல்லாத நாடுகளைத்தான் மக்களுக்கு உதாரணம் காட்டிக் கொண்டிருந்தோம். அதனாலேயே கட்சியும் தொடர்ந்து சரிவைச் சந்தித்துவந்தது.’’

‘‘கட்சிக்குள் நீங்கள் தொடர்ந்து கலகக்குரல் எழுப்பிவந்தபோதெல்லாம், உங்களுக்குத் தரப்பட்ட பதில்தான் என்ன?’’

‘‘கலகக்குரல் எழுப்பியபோதும் ‘இவன் இந்தக் கட்சிக்குத் தேவை’ என்பதை எல்லோருமே ஏற்றுக்கொண்டார்கள். யாரும் என்னை ஒதுக்கி வைக்கவில்லை. திராவிட இயக்கக் கொள்கை களுக்கும் திட்டங்களுக்கும் ஆதரவாக நான் கட்சிக்குள் பேசியபோதெல்லாம், ‘அவர்கள் வர்க்கப்போராட்டங்களை ஏற்பதில்லை. முதலாளித்துவம் மற்றும் நிலப்பிரபுத்துவத்தையும் எதிர்க்கவில்லை’ என்பதுதான் எனக்கு பதிலாகத் தரப்பட்டது. ஆனால், நில உச்சவரம்புச் சட்டத்தைத் திருத்தியது, உபரி நிலத்தை எடுத்து விநியோகம் செய்யத் தொடங்கியது, குடிசைகளில் வசிப்போருக்கு வீடு, சீர்திருத்தத் திருமணம் எனப் பல்வேறு திட்டங்களையும் கொண்டுவந்தது தி.மு.க-தான். என்னதான், பொதுவுடைமைச் சித்தாந்தத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்காக கம்யூனிஸ்ட்டுகள் பல போராட்டங்களை நடத்தியிருந்தாலும்கூட, அவற்றையெல்லாம் வெற்றிகரமாகச் செயல்படுத்தியது தி.மு.க என்பதையும் சொல்லியாக வேண்டுமல்லவா!’’

‘‘திராவிட இயக்கங்கள் எழுச்சி பெற்றுவந்த நேரத்தில், உங்களுக்கும் அந்த இயக்கங்கள்மீது ஈர்ப்பு ஏற்பட்டதா?’’

‘‘நிச்சயமாக. அதனால்தான் திராவிடர் கழகத்தோடு அதிக நெருக்கமாக இருந்தேன். பெரியாரைச் சந்தித்தேன். கூட்டங்களில் அவரின் உரைகளை தவறாது கேட்டுவந்தேன். அவர் எழுதிய புத்தகங்களை வாசித்தேன். எனக்குள் ஏற்றிக்கொண்ட இந்தக் கருத்துகளையெல்லாம் எங்கள் கட்சிக்குள்ளேயும் நான் பேசியபோது, அதற்கு கட்சிக்குள்ளேயே எதிர்ப்புகள் இருப்பதையும் கண்டுபிடித்தேன்.’’

‘‘நூற்றாண்டைக் கொண்டாடிவரும் இந்த நேரத்தில், பொதுவுடைமைத் தத்துவத்தை வளர்த்தெடுக்க என்னென்ன மாற்றங்களை கம்யூனிஸ்ட்டுகள் செய்யவேண்டும் என நினைக்கிறீர்கள்?’’

“மண்ணுக்கான மார்க்சியமே வெற்றிக்கான வழி!”

‘‘ ‘திராவிடக் கட்சிகளை எதிரிகளாகப் பார்க்காமல், அவர்களோடு இணைந்து செல்லவேண்டும்’ என்ற கோரிக்கையை 30 ஆண்டுகளுக்கு முன்பே நான் சொன்னேன். இப்போதும் அதுதான் நிரூபிக்கப்பட்டிருக் கிறது. இந்தியா முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சிகள் எந்த அணியுடனும் சேர முடியாது திண்டாடியபோது, தமிழ்நாட்டில் மட்டும் தி.மு.க-வோடு உறவு கொண்டதால், மொத்தமாக நான்கு தொகுதிகளில் வென்று நாடாளுமன்றத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் பிரதிநிதிகளாக மிஞ்சியிருக்கிறார்கள்.

மண்ணுக்கேற்ற மார்க்சியமே வெற்றிக்கான வழி. பொதுவுடைமைத் தத்துவத்தை வளர்த்தெடுக்க வேண்டும்; கட்சியை வளர்க்க வேண்டுமென்றால், கம்யூனிஸ்ட்டுகள் முதலில் இந்தியாவைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் தனி அதிகாரமும் உரிமைகளும்கொண்ட கட்சிகளாக கம்யூனிஸ்ட் கட்சிகள் இருக்கவேண்டும். அவரவர்களே தனித்து முடிவெடுத்து இயங்க வேண்டும். இப்படியான மாற்றங்களைக் கொண்டுவந்தால்தான், கட்சியை வளர்க்க முடியும்.’’