Published:Updated:

“சுதந்திரத்துக்காகப் போராடியது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு!”

என்.சங்கரய்யா
பிரீமியம் ஸ்டோரி
என்.சங்கரய்யா

சுதந்திரம் அறிவிக்கப்படுவதற்குச் சில மணி நேரத்துக்கு முன்புதான், மதுரை சதி வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த தோழர் பி.ராமமூர்த்தி, கே.டி.கே.தங்கமணி, நான் உட்பட 30-க்கும் அதிகமான தோழர்கள் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டோம்.

“சுதந்திரத்துக்காகப் போராடியது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு!”

சுதந்திரம் அறிவிக்கப்படுவதற்குச் சில மணி நேரத்துக்கு முன்புதான், மதுரை சதி வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த தோழர் பி.ராமமூர்த்தி, கே.டி.கே.தங்கமணி, நான் உட்பட 30-க்கும் அதிகமான தோழர்கள் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டோம்.

Published:Updated:
என்.சங்கரய்யா
பிரீமியம் ஸ்டோரி
என்.சங்கரய்யா

என்.சங்கரய்யா… தன்னைச் சிறைப்படுத்திக்கொண்டு நம்மை விடுதலை அடைய வைத்தவர். இன்று நாம் சுவாசித்துக்கொண்டிருக்கும் சுதந்திரக் காற்றிற்கு உயிரூட்டிய போராட்ட வீரர்களில் ஒருவர். ஆங்கிலேய அரசின் அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்கள், சிறைத் தண்டனை, சதி வழக்குகள், தலைமறைவுகள் என ஒன்பது வயதுச் சிறுவனாக நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராட ஆரம்பித்த சங்கரய்யாவுக்கு தற்போது வயது 101. நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி சங்கரய்யாவிடம் பேசினோம்...

``சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற நினைவுகள் குறித்து?’’

‘‘பகத்சிங்கின் தியாகம்தான் என்னை சுதந்திரப் போராட்டக் களத்துக்கு இழுத்து வந்தது. அப்போது, எனக்கு ஒன்பது வயதிருக்கும். 1931-ம் ஆண்டு பகத் சிங் தூக்கிலிடப்பட்டதை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. தூத்துக்குடியிலும் கண்டன ஊர்வலம் நடந்தது. ஒன்பது வயது சிறுவனாக இருந்த நானும், அந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டு கோஷம் போட்டேன். அந்நிகழ்வுதான் என்னுடைய உணர்வுகளை சுதந்திரப் போராட்டம் நோக்கி நகர வைத்தது. மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படிக்கும்போது சுதந்திரப் போராட்டத்தில் இன்னும் முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டேன். இளம் மாணவர் தலைவராக இருந்தபோது ஆங்கிலேய அரசு என்னைப் பலமுறை கைது செய்துள்ளது. பி.ஏ இறுதித்தேர்வு நடப்பதற்கு 20 நாள்களுக்கு முன்பும் கைது செய்யப்பட்டேன். `படிப்பா? நாட்டு விடுதலையா?’ என்று வந்தபோது, ‘நாங்கள் சுதந்திரத்திற்காகப் போராடுபவர்கள். வேலை தேடுபவர்கள் அல்ல’ (We are freedom fighters. We are not job hunters) என்பதே எங்களுடைய முழக்கமாக இருந்தது. சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதால் என் பி.ஏ தேர்வைக் கடைசிவரை எழுதவில்லை. அந்த வருத்தமும் மனதில் இல்லை. நாட்டின் விடுதலைக்காகப் போராடுவதே முதல் கடமையாக இருந்தது. தேசத்தின் விடுதலைக்காக எனது வாழ்க்கையைத் தொடர ஆரம்பித்தேன்.”

“சுதந்திரத்துக்காகப் போராடியது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு!”

``சுயமரியாதைக் குடும்பப் பின்புலத்தைக் கொண்ட நீங்கள் இடதுசாரி இயக்கத்தில் இணைந்தது ஏன்?’’

‘‘1920-களிலேயே சடங்குகள் ஏதுமின்றி திருமணத்தை நடத்திய சுயமரியாதைக் குடும்பம் எங்களுடையது. ஏற்கெனவே, பகத்சிங் மற்றும் அவருடைய தோழர்களின் தியாகம் மனதில் கனலாக எரிந்துகொண்டிருந்தது. முழுமையான சமூக நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றால் சமூக மாற்றம் ஏற்படவேண்டும். சமூக மாற்றமே மனித குலத்துக்கான விடுதலை. அந்த விடுதலை ஜெர்மன் தாடிக்காரனின் மார்க்சியத்தின் மூலமே நடைபெறும் என்ற புரிதலின் அடிப்படையில் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் எனது பயணம் தொடங்கியது.”

``சுதந்திரம் அறிவிக்கப்பட்டபோது உங்கள் மனநிலை எப்படி இருந்தது? இப்போது எப்படி இருக்கிறது?’’

‘‘சுதந்திரம் அறிவிக்கப்படுவதற்குச் சில மணி நேரத்துக்கு முன்புதான், மதுரை சதி வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த தோழர் பி.ராமமூர்த்தி, கே.டி.கே.தங்கமணி, நான் உட்பட 30-க்கும் அதிகமான தோழர்கள் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டோம். சிறைச்சாலை வாசலில் இருந்து ஊர்வலமாக மதுரை திலகர் திடலை அடைந்தோம். அங்கே விடிய விடிய சுதந்திரதினக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் இந்தி பண்டிட் தோழர் மணவாளன் எழுதிய ‘விடுதலைப் போரினிலே வீழ்ந்த மலரே’ பாடல் பாடப்பட்டு உணர்ச்சிமயமாக இருந்தது. எண்ணிலடங்கா தியாகிகளின் தியாகத்தாலும் வீரம் செறிந்த போராட்டத்தாலும் அன்றைக்கு சுதந்திரக் காற்றை உணர முடிந்தது.

ஆனால், இன்று வகுப்புவாத, மதவாத சக்திகளால் இந்திய ஜனநாயகத்திற்கும் இந்திய மக்களின் ஒற்றுமைக்கும் மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்திய மக்கள் அதைத் தீரத்துடன் முறியடிக்கவேண்டும். ஜனநாயகத்தைக் காக்கவும் மக்களின் ஒற்றுமைக்காகவும் மதச்சார்பின்மைக் கோட்பாட்டை உயர்த்திப் பிடிப்பார்கள் என்ற பூரண நம்பிக்கை இளைஞர்கள்மீது உள்ளது.”

``உங்கள் தலைமறைவு வாழ்க்கை குறித்து?’’

‘‘சுதந்திர இந்தியாவிலும் கம்யூனிஸ்டுகள்மீது அடக்குமுறை ஏவப்பட்டது. அந்தக் காலத்தில் பணியாற்றிய அனைத்து கம்யூனிஸ்ட் ஊழியர்களும் தலைமறைவாகியே எங்களது இயக்கப் பணிகளைச் செய்துவந்தோம். தலைமறைவு வாழ்க்கை என்பது ஓடி ஒளிவதல்ல. தலைமறைவிலேயே மக்களைத் திரட்டுவது, இயக்கத்தை பலப்படுத்துவது போன்ற அரசியல் வேலைகளைச் செய்தோம். தலைமறைவு காலத்தில் ஒரு சலவைத் தொழிலாளரின் வீட்டில் இருக்க நேர்ந்தது. அது ஒரு கடுமையான காலகட்டம். அழுக்குத் துணிகளுக்கிடையே இருக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. அதனால், தோல் நோய்களும் வந்தன. தலைமறைவு வாழ்க்கையிலேயே கட்சித் தலைமை என்னைச் சென்னைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளித்தது. இதுபோல்தான் கம்யூனிஸ்ட் தோழர்களின் போராட்ட வாழ்க்கை அமைந்தது.”

``சுதந்திரப் போராட்டக் களத்தில் நிறைய சதி வழக்குகள் போடப்பட்டன. அவற்றில் சிக்கி நிறைய பேர் தங்கள் வாழ்க்கையையும் குடும்பத்தையும் இழந்துள்ளனர். அவர்களின் போராட்டங்கள் வரலாற்றில் இடம்பெறவில்லையே?’’

‘‘இந்தியாவில் ஏராளமான சதி வழக்குகள் போடப்பட்டன. குறிப்பாக, கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மீது கான்பூர் சதி வழக்கு, மீரட் சதி வழக்கு என ஏராளமான சதி வழக்குகள் போடப்பட்டன. அத்தனை வழக்குகளையும் சந்தித்துதான் கம்யூனிஸ்ட் இயக்கமும் நாட்டின் விடுதலை இயக்கமும் வளர்ந்தன. சுதந்திரத்திற்காகப் போராடியதே எங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு. அதற்குப்பிறகு இந்திய மக்களின் நல்வாழ்வுக்காகவும் வாழ்க்கைத்தரம் உயரவும் பொதுவுடமை சமுதாயம் ஏற்படுவதற்கும் எங்கள் போராட்டம் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது.”