அலசல்
அரசியல்
கார்ட்டூன்
Published:Updated:

“கம்யூனிஸ்ட்கள்தான் பழங்குடிகளின் பாதுகாவலர்கள்...”

பெ.சண்முகம்
பிரீமியம் ஸ்டோரி
News
பெ.சண்முகம்

“ ஆனால், பழங்குடிகளின் செல்வாக்கு பெற்ற கட்சி அ.தி.மு.க!” - யதார்த்தத்தை விளக்குகிறார் தோழர் பெ.சண்முகம்

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே பழங்குடி மக்களுக்காகப் போராடியவர்கள் கம்யூனிஸ்ட்கள். 1945-47 காலகட்டத்தில் மகாராஷ்டிர மாநிலத்தில் வார்லி பழங்குடிகளின் உரிமைகளுக்காக வீரம்செறிந்த போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தியவர், கோதாவரி பருலேகர். கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இவர், `பழங்குடிகளின் தாய்’ எனப் போற்றப்பட்டார். தமிழகத்தில், வாச்சாத்திப் போராட்டம் ஓர் உதாரணம். அதில் வெற்றியும் பெற்றனர் கம்யூனிஸ்ட்கள். அந்தப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்தவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத் தலைவருமான பெ.சண்முகம். அவருடன் உரையாடியதிலிருந்து...

“தமிழகத்தில் பழங்குடி மக்கள் பிரச்னைகளுக்காக கம்யூனிஸ்ட்கள் தலையிட ஆரம்பித்தது எப்போது?”

“கம்யூனிஸ்ட்கள்தான் பழங்குடிகளின் பாதுகாவலர்கள்...”

“1952-ம் ஆண்டு, கொல்லிமலையைச் சேர்ந்த பழங்குடி ஒருவர் கந்துவட்டிக்கு ஐந்து ரூபாய் கடன் வாங்கினார். அவரால் அசலைத் திருப்பிச் செலுத்த இயலவில்லை. அதனால், ‘உன் மனைவியை அனுப்பி வை’ என்று கடன் கொடுத்தவர் கூறினார். உடனே அந்தப் பழங்குடி, சேலம் காவல்நிலையத்தில் புகார் செய்தார். அவரிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு, ‘அந்தப் பயலைப் பிடித்து உள்ளே போடுறேன்’ என்று போலீஸ் தரப்பில் கூறினர். மறுநாள், கந்துவட்டி ஆசாமியிடமும் லஞ்சம் வாங்கிக்கொண்டு, ‘கடன் கொடுத்த மகராசன்மீதே புகார் கொடுக்கிறாயா...’ என்று அந்தப் பழங்குடியை சிறையில் அடைத்தனர். உடனே அவரின் மனைவி, சேலத்தில் இருந்த அர்த்தநாரி என்ற கம்யூனிஸ்ட் தலைவரிடம் முறையிட்டார். அப்போதுதான், முதன்முதலாக கொல்லிமலையில் செங்கொடி ஏறியது.”

“அந்தக் காலகட்டத்தில் மலைவாழ் மக்கள் என்ன மாதிரியான பிரச்னைகளைச் சந்தித்தனர்?”

“பழங்குடிகளை என்ன செய்தாலும் தட்டிக்கேட்க ஆள் இல்லை என்ற நிலை இருந்தது. மலைகளில் விளைவித்த பொருள்களை கீழே கொண்டுவந்து விற்பனை செய்வர். ஒரு மூட்டை பரங்கிக்காய் ஒரு ரூபாய், ஒரு வாழைத்தார் இரண்டு ரூபாய் என வியாபாரிகள் என்ன விலை கேட்கிறார்களோ, அந்த விலைக்கு இவர்கள் கொடுத்துவிட வேண்டும். மலையிலிருந்து கொண்டு வந்த பொருள்களை மீண்டும் மலைக்கே கொண்டுசெல்ல முடியாது என்ற சூழலைப் பயன்படுத்தி, வியாபாரிகள் வைத்ததுதான் விலை என்ற நிலை இருந்தது.

பெ.சண்முகம்
பெ.சண்முகம்

1972-ம் ஆண்டு, இந்தப் பிரச்னையில் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தலையிட்டது. ‘கொல்லிமலையிலேயே சந்தையைக் கூட்டுவோம்’ என்று பழங்குடி மக்களிடம் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூறினர். அதையடுத்து, கொல்லிமலையில் உள்ள சோளக்காட்டில் சந்தை கூடியது. வியாபாரிகள் எவரும் வரவில்லை. பொருள்கள் அழுகின. அதற்கான இழப்பீட்டை விவசாயிகள் சங்கமே வழங்கியது. இரண்டாவது வாரமும் சந்தை கூடியது. வியாபாரிகள் வரவில்லை. பொருள்கள் அழுகின. விவசாயிகள் சங்கமே இழப்பீடு வழங்கியது. மூன்றாவது வாரம் நிலைமை மாறியது. அந்தப் பொருள்கள்தான் வியாபாரிகளுக்கும் வாழ்வாதாரம் என்பதால் அவர்கள் மலையேறி வந்தனர். அப்போது, விவசாயிகளே தங்கள் விளைபொருள்களுக்கு விலையைச் சொன்னார்கள். விலையை நிர்ணயிக்கும் உரிமையை இப்படித்தான் பழங்குடியினருக்கு கம்யூனிஸ்ட்கள் பெற்றுத் தந்தனர். பிற்காலத்தில், அந்தச் சந்தையை அரசே அங்கீகரித்தது.”

“தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தை எத்தகைய சூழலில் ஆரம்பித்தீர்கள்?”

“மலைவாழ் மக்களுக்காக எங்கள் விவசாயிகள் சங்கம் போராடிவந்த நிலையில், 1992-ம் ஆண்டு மலைவாழ் மக்களுக்கு என தனிச்சங்கம் தொடங்கினோம். அதே ஆண்டில் ஜூன் 20, 21, 22 தேதிகளில்தான் வனத்துறையினர் வாச்சாத்திக் கொடுமையை நிகழ்த்தினர்.”

“வாச்சாத்தி சம்பவம் உங்களுக்கு எப்படித் தெரியவந்தது?”

“மலைவாழ் மக்கள் சங்கத்தைத் தொடங்கிய பிறகு, தமிழகத்தின் அனைத்து மலைகளிலும் மாநாடுகள் நடத்திவந்தோம். தர்மபுரி மாவட்டம் சித்தேரி மலையில் மாநாடு நடந்தபோது, அரூர் அருகே இருக்கும் வாச்சாத்தி கிராமத்தைச் சேர்ந்த சில பெண்கள் வந்திருந்தனர். அவர்கள், தங்கள் ஊரில் வனத்துறையினர் வன்முறையில் ஈடுபட்டதாகத் தெரிவித்தனர். அந்தத் தகவலை, எங்கள் சங்கத் தலைவர்களான பாஷா ஜான், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கொல்லிமலையில் இருந்த என்னிடம் வந்து சொன்னார்கள்.

“கம்யூனிஸ்ட்கள்தான் பழங்குடிகளின் பாதுகாவலர்கள்...”

குற்றவாளிகளைக் கைதுசெய்யக் கோரி, 1992, ஆகஸ்ட் 13-ம் தேதி அரூர் தாலுகா அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். மறுநாள், எங்கள் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ-வான அண்ணாமலை உள்ளிட்ட ஏழு தோழர்கள் வாச்சாத்திக்குச் சென்றோம். ஆளரவற்ற கிராமமாக இருந்தது. இரண்டு, மூன்று மணி நேரம் அந்தப் பகுதியில் சுற்றினோம். யாருமே இல்லை. கடைசியில், சந்துக்குள் ஒரு பெண் ஒளிந்திருப் பதைக் கண்டோம். ‘தைரியமா வாங்க... உங்களுக்கு உதவி செய்யவே வந்திருக்கோம்’ என்றவுடன் அவர் வெளியே வந்தார். ‘எல்லோரும் காடுகளில் ஒளிந்திருக்கிறார்கள்’ என்று சொன்னவரிடம், எல்லோரை யும் அழைத்து வரச்சொன்னோம். சிறிது நேரத்தில் 45 பேர் வந்தனர். அவர்கள் வனத்துறையினர் நடத்திய கொடுமைகளைச் சொன்னபோது பதைபதைத்துப்போனோம்!”

“என்ன மாதிரியான கொடுமைகள்?”

“குடிநீர் கிணற்றில் மண்ணெண் ணெய் ஊற்றி விட்டார்கள். பாத்திரங்கள் உள்ளிட்ட உடைமைகளையும் வீடுகளையும் நொறுக்கி விட்டார்கள். பயிர்களை நாசப்படுத்தி விட்டார்கள். உணவுப்பொருள்களில் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டார்கள். இப்படியான பாதிப்புகள்தான் என நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில், ‘மூன்று பெண்களை வனத்துறையினர் சீரழித்து விட்டார்கள்’ என, ஒரு பெண் ரகசியமாகச் சொன்னார். அந்தப் பெண்களை, பொய்வழக்குப் போட்டு சேலம் பெண்கள் சிறையில் அடைத்திருந்தனர். சிறையில் அவர்களைச் சந்தித்தோம். அங்கு, எங்களுக்கு மேலும் ஓர் அதிர்ச்சி. வனத்துறையினரால் 18 பெண்கள் சீரழிக்கப்பட்டது, அங்கு போன பிறகே தெரியவந்தது.”

“உங்களின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருந்தது?”

“முதலில் நீதி விசாரணை கேட்டோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ-வான தம்புசாமி, சட்டமன்றத்தில் இந்தப் பிரச்னையை எழுப்பினார். எங்கள் கட்சியின் எம்.பி-யான ஏ.நல்லசிவன், நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்னையை எழுப்பினார். அன்றைய முதல்வரும் வனத்துறை அமைச்சர் செங்கோட்டையனும், அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று மறுத்தனர். அதனால் சி.பி.ஐ விசாரணை கோரி அரூரில் காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கினேன். அதற்கு, பொதுமக்களின் பேராதரவு கிடைத்தது. மாநிலம் முழுவதும் எங்கள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தினோம். பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவுப்பொருள்கள், உடைகள், பாத்திரங்கள் உள்ளிட்ட பொருள்களை மாநிலம் முழுவதும் திரட்டிக்கொடுத்தோம்.”

“வாச்சாத்தி வழக்கில் தர்மபுரி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியபோது, உங்கள் உணர்வு எப்படியிருந்தது?”

“19 ஆண்டு நீதிப் போராட்டத் துக்குப் பிறகு, 2011-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி தீர்ப்பு வந்தது. வாச்சாத்தி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 269 பேருமே குற்றவாளிகள் என்றும், அவர்களில் உயிருடன் உள்ள 215 பேருக்கும் தண்டனை மற்றும் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பு வந்தபோது வாச்சாத்தி மக்கள் நீதிமன்றத்தில் கூடியிருந்தனர். நெடிய போராட்டத்துக்குப் பிறகு கிடைத்த மிகச் சிறப்பான தீர்ப்பு அது. வனத்துறையினரை எதிர்த்துப் போராடி ஜெயிக்க முடியும் என்ற மிகப்பெரிய நம்பிக்கையை மலைவாழ் மக்களிடம் ஏற்படுத்தியது அந்தத் தீர்ப்பு.”

“பழங்குடி மக்களுக்காக இவ்வளவு போராடுகிறீர்கள். அவர்கள் எல்லோரும் கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்கிறார்களா?”

“உண்மையை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அ.தி.மு.க-தான் பழங்குடி மக்களிடம் அதிக செல்வாக்கு பெற்ற கட்சி. இரண்டாவது இடத்தில் தி.மு.க உள்ளது. அதன் பிறகுதான் கம்யூனிஸ்ட் கட்சி. அவர்களிடம் அரசியல் விழிப்புஉணர்வு குறைவாக இருப்பதுதான் இதற்குக் காரணம். அதே நேரத்தில், என்ன பிரச்னை என்றாலும் எங்களிடம்தான் அவர்கள் வருவார்கள். எங்களை மட்டும்தான் நம்புகிறார்கள். எங்கள் சங்கத்தின் மாநாடுகளுக்கும் போராட்டங்களுக்கும் குடும்பம் குடும்பமாக வந்து பங்கேற்பார்கள். இடதுசாரி அரசியலை அவர்களிடம் கொண்டுசெல்ல வேண்டிய தேவை இருக்கிறது.”