Published:Updated:

அரற்றும் இம்ரான்... அமைதி மோடி... காஷ்மீர் ட்வீட் போரில் ஸ்மார்ட் யார்?

எம்.குமரேசன்

பிரதமர் மோடியின் 46 ட்வீட்டுகளில் ஜம்மு - காஷ்மீர், லடாக் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தன. பிரதமர் மோடியின் சுதந்திர தின உரையின்போதும், இம்ரான் அல்லது பாகிஸ்தான் வார்த்தைகளைப் பயன்படுத்தவே இல்லை.

Modi and Imran khan
Modi and Imran khan

ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் முக்கியத் தலைவர்கள் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் காஷ்மீரில் முகாமிட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஆகஸ்ட் முதல் வாரத்தில், காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. அப்போது அஜித் தோவால் காஷ்மீர் மாநிலத்தில் முகாமிட்டிருந்தார். சோபியான் மாவட்டத்தில் பொதுமக்களுடன் இணைந்து காஷ்மீர் மாநிலத்தின் பாரம்பர்ய உணவுகளை அருந்தினார்.

Ajit Doval
Ajit Doval

அப்போது, அவர்களிடத்தில் 370 அரசியலமைப்புச் சட்டம் நீக்கப்பட்டதற்கான காரணம்குறித்து எடுத்துரைத்தார். காஷ்மீரில் பதற்றம் நிலவினாலும், பெரிய அளவில் வன்முறை வெடிக்கவில்லை. ஆனால், அண்டை நாடான பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக உலக நாடுகளைத் திரளவைக்க முயன்று தோல்வியடைந்தது. எனினும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இன்றுவரை 'காஷ்மீர்... காஷ்மீர்' என்றே பேசிவருகிறார். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு, இம்ரானின் பேச்சில் மட்டுமல்ல, எழுத்திலும் காஷ்மீர், இந்தியா, மோடி என்கிற வார்த்தைகளையே அதிகமாகப் பயன்படுத்தி வருகிறார்.

கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி, காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. அன்றைய தினத்திலிருந்து செப்டம்பர் 1-ம் தேதி வரை இம்ரான்கான் 67 ட்வீட்டுகளை வெளியிட்டுள்ளார். அதில், 90 சதவிகித ட்வீட், இந்தியாவை கண்டிக்கும்படியானது. 49 ட்வீட்டுகளில் 'காஷ்மீரிஸ்' அல்லது 'காஷ்மீர்' என்கிற வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார். பிரதமர் மோடியின் பெயரை 17 முறை குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடியை கடுமையாகத் தாக்கியும் இம்ரான்கான் ட்வீட்டுகள் இருந்தன. காஷ்மீர் விவகாரத்துக்காக மட்டுமல்ல, அஸ்ஸாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேட்டிலிருந்து 19 லட்சம் பேர் நீக்கப்பட்டதை விமர்சித்தும் இம்ரான், பல ட்வீட்டுகளை வெளியிட்டுள்ளார். ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை, நாஜிக்களுடன் ஒப்பிட்டும், ஹிட்லருடன் ஒப்பிட்டும்கூட சில ட்வீட்டுகள் இருந்தன.

இம்ரான்கான், சுதந்திர தினத்தை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தலைநகரான முஷாஃபராபாத்தில் கொண்டாடினார். சட்டமன்றத்தில் இம்ரான் நிகழ்த்திய சுதந்திர தின உரையின்போதும், காஷ்மீர், நாஜிக்கள், இந்துக்கள் என்கிற வார்த்தைகள் அதிகமாக இடம்பெற்றிருந்தன. இதே காலகட்டத்தில் , பிரதமர் மோடி பாகிஸ்தானை தன் ட்விட்டர் பக்கத்தில் கிஞ்சித்தும் கண்டுகொள்ளவில்லை. அதாவது, ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் செப்டம்பர்1-ம் தேதிவரை தன் ட்விட்டர் பக்கத்தில், பாகிஸ்தான் அல்லது இம்ரான்கான் என்கிற வார்த்தைகளை ஒருமுறைகூட மோடி பயன்படுத்தவில்லை. பிரதமர் மோடியின் 46 ட்வீட்டுகளில் ஜம்மு - காஷ்மீர், லடாக் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தன. பிரதமர் மோடியின் சுதந்திர தின உரையின்போதும், இம்ரான் அல்லது பாகிஸ்தான் வார்த்தைகளைப் பயன்படுத்தவே இல்லை.

இப்படியாக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கொந்தளித்துத் தோல்வியடைந்துவிட்டதாகவும், பிரதமர் மோடி அமைதியாக இருந்து காரியத்தை சாதித்துக்கொண்டதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். அதாவது, 90 சதவிகித காஷ்மீர் பகுதியில், இயல்பு நிலை திரும்பிவிட்டதாகத் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடத்தில் அவர் பேசுகையில், ''காஷ்மீரில் 92.5 சதவிகித நிலப்பகுதியில் தடைகள் விலக்கப்பட்டுள்ளன. மீதியுள்ள பகுதிகளிலும் தடை விலக்கவே ஆசைப்படுகிறோம். அண்டை நாடான பாகிஸ்தானின் நடத்தையைப் பொறுத்து தடை விலக்கப்படும். பாகிஸ்தான், தன் நிலப்பகுதியில் உள்ள செல்போன் டவர்கள் வழியாக காஷ்மீரில் உள்ள தங்கள் ஆள்களுக்கு சங்கேத வார்த்தைகளை அனுப்புகிறது.

Kashmir Apple Lorries
Kashmir Apple Lorries

நாங்கள் இடைமறித்துக் கேட்டபோது, 'நிறைய ஆப்பிள் லாரிகள் சென்றுகொண்டிருக்கின்றன... அவற்றை தடுத்துநிறுத்த உங்களால் முடியவில்லையா... உங்களுக்கு வளையல்கள் அனுப்பவா?' ஆகிய சங்கேத வார்த்தைகளைக் கேட்டோம். ஆயுதங்களை காஷ்மீரில் உள்ள சகாக்களுக்கு அனுப்புவதற்காகவே பாகிஸ்தானிலிருந்து இதுபோன்ற சங்கேத வார்த்தைகள் அனுப்பப்படுகின்றன. 230 பாகிஸ்தான் தீவிரவாதிகள் கண்டறியப்பட்டுள்ளனர். சிலர், இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ளனர். சிலர் அடையாளம் காணப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் ஒரே ஆயுதம் பயங்கரவாதம் மட்டுமே. ஜம்மு - காஷ்மீரில் உள்ள 199 காவல் நிலையங்களில் 10 காவல் நிலையங்கள் உள்ள பகுதிகளில் மட்டுமே தடைகள் இன்னும் உள்ளன. காஷ்மீரில், மாநில காவல் மற்றும் மத்திய பாதுகாப்புப் படையினர் மட்டுமே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ராணுவத்தினர், தீவிரவாதிகளுடன் சண்டையிடவே உள்ளனர். காஷ்மீர் மக்கள் 370 அரசியலமைப்புச் சட்டம் நீக்கப்பட்டதை ஏற்றுக்கொண்டுள்ளனர். சிலரே, அதற்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். காஷ்மீர் மக்களைக் காக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு பெருகும், வருமானம் பெருகும், பொருளாதாரம் சிறக்கும் என்று காஷ்மீர் மக்கள் நம்புகின்றனர். பாகிஸ்தானின் தவறான பிரசாரம் மற்றும் நடத்தை மட்டுமே காஷ்மீரின் இயல்பு வாழ்க்கை பாதிக்க காரணமாக உள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.

இப்படி இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரே, காஷ்மீரில் தடை விலக்கப்படுவது பாகிஸ்தானின் கையில்தான் இருக்கிறது எனச் சொல்லியிருப்பது அரசியல் விமர்சகர்கள் மத்தியில் விமர்சனங்களையும் கிளப்பியுள்ளது.

காஷ்மீரில், பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தாக்குதல் தொடர்ந்து நடந்துகொண்டுதான் உள்ளது. சோபூர் மாவட்டத்தில், பிரபல பழ வியாபாரி ஹமிதுல்லா ராதர் என்பவர் குடும்பத்தினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில், ஹமிதுல்லா ராதரின் மகன் முகமது இர்ஷாத் மற்றும் இரண்டரை வயது மகள் உஷ்மா ஜான் ஆகியோர் படுகாயமடைந்தனர். தீவிரவாதிகள் கடைகளைத் திறக்க வேண்டாமென்று வியாபாரிகளை மிரட்டி வருகின்றனர். மீறி, கடைகளைத் திறப்பவர்கள்மீது தாக்குதல் நடத்துவதாகச் சொல்லப்படுகிறது.

இந்தச் சம்பவம்குறித்து அஜித் தோவால் கூறுகையில், ''ஹமிதுல்லா குடும்பத்தினர்மீது தாக்குதல் நடத்திய இருவருமே பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள். அவர்களைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. சர்வதேச நாடுகள் மத்தியில் காஷ்மீர் மாநிலம் இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை என்கிற எண்ணத்தை உருவாக்கவே பாகிஸ்தான் இதுபோன்ற தாக்குதல்களை நடத்திவருகிறது'' என்று குற்றம் சாட்டியுள்ளார்.