Published:Updated:

தோல்விகளைப் பற்றி தோனியிடம் கற்றுக்கொள்ளுங்கள் Mr.ராகுல் காந்தி!

தோனி ( விகடன் )

ஒரு நூற்றாண்டு இயக்கத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகுவது என்பது துணிச்சலான முடிவுதான். இந்த முடிவு அவர் விரும்பி எடுத்தாகவேகூட இருக்கலாம். ஆனாலும், இவை எதிர்மறையாக வினையாற்றவும் வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன.

தோல்விகளைப் பற்றி தோனியிடம் கற்றுக்கொள்ளுங்கள் Mr.ராகுல் காந்தி!

ஒரு நூற்றாண்டு இயக்கத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகுவது என்பது துணிச்சலான முடிவுதான். இந்த முடிவு அவர் விரும்பி எடுத்தாகவேகூட இருக்கலாம். ஆனாலும், இவை எதிர்மறையாக வினையாற்றவும் வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன.

Published:Updated:
தோனி ( விகடன் )

இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மறக்க முடியாத ஆண்டுகளின் வரிசையில் 1983-ம் 2011-ம் என்றும் நிச்சயம் இடம்பிடித்திருக்கும். அதேபோல், 2019-ம் ஆண்டும் எப்படியாவது இடம்பெற்றுவிடும் என்ற பெரும் நம்பிக்கையில், இந்தியா - நியூசிலாந்து ஆடிய அரையிறுதி ஆட்டத்தின் ஸ்கோரை உற்றுநோக்கியபடியே இருந்தனர். ஆம், வெற்றிக்கான பெரும் சாத்தியக்கூறுகளைத்தான் இந்த உலகக் கோப்பையில் இந்திய அணி வெளிப்படுத்தியது.

தோனி
தோனி

இந்தியா - நியூசிலாந்துக்கு இடையேயான உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே நடந்துமுடிந்தது. தொடக்க ஆட்டக்காரர்களும், நடுநிலை ஆட்டக்காரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க... தோனி மீதான நம்பிக்கையில் எப்படியும் கடைசி ஓவர் வரை நின்று சிக்ஸர் அடித்து இந்தியாவை வெற்றிக் கோட்டைத் தாண்ட வைத்துவிடுவார் எனக் காத்திருந்தார்கள் ரசிகர்கள். ஆனால், க்ரீஸ் கோட்டைத் தொட முடியாமல் தோனி ரன் அவுட் ஆனதுதான் இந்தியக் கிரிக்கெட் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆனால், தோனியிடம் மட்டும் எந்த மாற்றமும் இல்லை. வழக்கம்போல, தன்னுடைய உணர்வுகளைச் சிந்திவிடாமல் மைதானத்தைவிட்டு வெளியேறினார். ‘தோல்விக்கு தோனிதான் காரணம்’ என்ற விமர்சனங்களும் அதிகம் எழுந்தன. இது, தோனிமீது சுமத்தப்பட்ட பழிச்சொல் அல்ல... ஒருவகையில், தோனியின் மீதான பெரும் நம்பிக்கையும்கூட. ஆம், 2011 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கையை எதிர்கொண்டது இந்தியா.

தோனி
தோனி

கடைசியாக உலகக்கோப்பையைக் கைப்பற்றி 28 ஆண்டுகள் ஆன நிலையில், மீண்டும் 2011-ம் ஆண்டு உலகக் கோப்பை கனவுகளோடு விளையாடத் தொடங்கியது இந்தியா. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில், 275 ரன்கள் என்பது பிரமாண்டமான ஸ்கோர்தான் என இலங்கை பேட்டிங்கைப் பார்த்துவிட்டு கருத்து சொன்னார்கள் கிரிக்கெட் விமர்சகர்கள். அப்போது இலங்கை, கஜாவைவிடப் பயங்கரமான சுழன்றடிக்கும் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனையும், ஓவரின் ஆறு பந்துகளையும் யார்க்கராக வீசக்கூடிய வல்லமைபெற்ற மலிங்காவையும் ஒருசேரக் களத்தில் வைத்திருந்த காலம். கனவுகளோடு காத்திருந்த இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியைத்தான் அளித்தன முதல் பாதி ஆட்டங்கள். சேவாக், சச்சின் என கிரிக்கெட் ஜாம்பவான்கள் அடுத்தடுத்து வெளியேற, கம்பீர் மட்டும் நிலைத்து நிற்க, கடைசியில் நிதானத்தோடு ஆடி இந்தியாவின் 28 ஆண்டுக்கால கனவை மீண்டும் நிறைவேற்றிக் காட்டினார் தோனி.

உணர்வுகளையும் நிதானத்தையும் எப்போதும் சிந்தவிடாமல் பார்த்துக்கொள்வதுதான் தோனியின் பெரும் பலம். அது தோல்வியானாலும் வெற்றியானாலும் சரி. காரணம், நிதானமின்மை தவறான முடிவுகளுக்கு வழிவகுக்கும். இந்தியாவில் பலருக்கும் தோனி எனும் கிரிக்கெட்டரைத் தாண்டி, தோனி எனும் கேப்டனைத்தான் அதிகம் பிடிக்கும். இந்தியா மிக மோசமான தோல்விகளைச் சந்தித்து, அணியின்மீது விமர்சன மழை பொழிந்தபோதெல்லாம் அவை அனைத்தையும் தனதாக்கிக் கொண்டு புன்னகையை மட்டும் பதிலாக வெளிக்காட்ட தெரிந்தவர் தோனி.

தோனி
தோனி

ஒருமுறை தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தோனியைப் பற்றிப் பேசிய அஸ்வின், “நாங்கள் சில வெற்றிபெற வேண்டிய ஆட்டங்களில் தோல்வியடைந்து வருத்தத்தில் அமர்ந்திருப்போம். அப்போதெல்லாம் தோனியிடமிருந்து விளையாட்டில் தோல்வி சகஜமானது என்ற வார்த்தைகள்தான் பதிலாக வரும்” என்றார். ஆம், வெற்றி தோல்வி என இரண்டும் விளையாட்டில் சகஜமானதுதான். ஆனால், களத்தில் நின்று எதிரிகள் பயப்படும்வரை சண்டை செய்வதுதான் முக்கியம். தோனி களத்தில் இருக்கும்வரை எப்போதும் எதிரணியிடம் அந்தப் பயம் இருக்கும்.

எது எப்படியோ, ஒருவழியாக நியூசிலாந்துக்கு எதிரான தோல்வியின் மூலம் இறுதிப்போட்டிக்குச் செல்லும் வாய்ப்பை இழந்தது இந்தியா. இந்தச் சூழலில் மான்செஸ்டரில் செய்தியாளர்களைச் சந்தித்தார் கேப்டன் விராட் கோலி. அவரிடம் முன்வைக்கப்பட்ட முக்கியமான கேள்வி, ”தோனி உலகக் கோப்பையோடு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவாரா” என்பதுதான். அதற்கு கோலி, “தெரியவில்லை. இதுகுறித்து தோனி எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை” என்றார். சரி, இதற்கும் அரசியலுக்கும் ராஜினாமா செய்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? நிச்சயம் நிறைய தொடர்பிருக்கிறது.

தோனி
தோனி

24, அக்பர் ரோட்டின் அடுத்த இளவரசன் என்ற அங்கீகாரத்தோடு காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக, கடந்த 2017 டிசம்பர் 16-ம் தேதி பதவியேற்றார் ராகுல் காந்தி. மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி போன்றவர்கள் தலைமைப் பதவிக்கு வந்தபோது இருந்த எதிர்ப்புகள்கூட, ராகுல் காந்தி தலைமை பதவியேற்றபோது இல்லை. காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளில் தொடங்கி, கட்சியில் புதிதாகச் சேர்ந்த உறுப்பினர்கள் வரை அனைவருமே ராகுல் தலைவர் பதவிக்கு வருவதை ஆதரிக்கத்தான் செய்தனர்.

ஆனால், இந்த முறை ராகுலின் கையில் அதிகாரத்தை வழங்கிய காலம், வெற்றியை மட்டும் வழங்கவில்லை. ராகுலின் தலைமையில் காங்கிரஸ் முதல்முறையாகப் பொதுத் தேர்தலைச் சந்தித்தது. கூடுதல் பலமாக உத்தரப்பிரதேசத்தின் வெற்றிக்காக இதுவரை முழுநேர அரசியலில் ஈடுபடாத அவரின் சகோதரியுமான பிரியங்கா காந்தியும் களம் இறக்கப்பட்டார். ஆனாலும், முடிவுகள் என்பது ராகுலுக்கு எதிராகவே வந்து சேர்ந்தன. கடந்த தேர்தலைப்போலவே இந்த முறையும் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்த்தைக்கூடப் பெறமுடியாத நிலைதான் காங்கிரஸுக்குக் கிடைத்தது. ஆனால், கடந்த முறை கட்சியை மட்டும் பாதித்த காங்கிரஸின் தோல்வி இந்த முறை ராகுலின் அரசியலையுமே கேள்விக்குறியாக்கியுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், தோல்விக்குப் பொறுப்பேற்று தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். ராகுல் அந்த முடிவைக் கைவிட வேண்டும் எனப் பலரும் வேண்டுகோள் விடுத்தனர். சிலர், ராகுலைச் சமரசம் செய்தனர்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவ், “ராகுல் காந்தி பதவி விலகுவது குறித்தான முடிவு, காங்கிரஸ் கட்சிக்கான பிரச்னை மட்டுமல்ல. பி.ஜே.பி-க்கு எதிராகத் திரண்டுள்ள மொத்த எதிர்க்கட்சிகளுக்குமான பேராபத்தாகும்” என்றார். ஆனால், தன்னுடைய முடிவில் தெளிவாக இருந்தார், ராகுல். இதையடுத்து, 200-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகளும் தாங்கள் வகித்து வந்த பதவிகளிலிருந்து விலகினர்.

குறிப்பாக, மத்தியப் பிரதேச காங்கிரஸ் வெற்றிக்கு உழைத்தவரும், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான ஜோதிராதித்யா சிந்தியா, தாம் வகித்துவந்த பதவியை ராஜினாமா செய்தார். மூத்த தலைவர்கள் பலரும் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்துவந்த நிலையில், தற்போது இளந்தலைவர்களும் தங்களின் பொறுப்புகளிலிருந்து விலக ஆரம்பித்துள்ளனர்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று பதவி விலகுவதென்பது தன்னை வருத்திக்கொள்வதாகத் தோன்றலாம். ஆனால் உண்மையில், அது கட்சியின் எதிர்காலத்துக்குத்தான் பேராபத்தாக அமையும். ஏற்கெனவே, மாநிலங்கள் அளவில் காங்கிரஸ் தங்களுடைய செல்வாக்கை இழந்துவருகிறது. இந்த நிலையில், மேலும் பல மாநிலங்களின் காங்கிரஸ் தலைவர்கள் பதவி விலகினால், அவை கட்சிக்கே பலவீனம்.

கடந்த ஒரு மாத காலம் ராகுலே தலைவராகத் தொடர வேண்டும் எனப் பல தலைவர்களும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், இப்போது நிலைமை மாறியிருக்கிறது. புதிய தலைவர் உடனடியாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என சில மூத்த தலைவர்கள் கருத்து தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ஜனார்த்தன் திரிவேதி, ”காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை குறித்தானா முறைசாரா கலந்துரையாடல்களைவிட, அதிகாரபூர்வமான அறிவிப்புகள் அவசியம். ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை முடிவுசெய்ய குழு ஒன்றை நியமித்து, கட்சியின் தலைவர்களுடனும் தொண்டர்களுடனும் உரையாடல் நடத்த வேண்டும். ஏனெனில், தொழில்நுட்ப ரீதியாக ராகுல் காந்திதான் அதிகாரபூர்வமான தலைவராக உள்ளார்” என்றார்.

ராகுல் யோசித்துப் பார்க்க வேண்டியது பல போராட்டங்களும் தோல்விகளும் நிறைந்த ஜனநாயகப் போராளி ஆங் சங் சூகியின் வாழ்வைத்தான்!

காங்கிரஸ் படிப்படியாக ராகுலை மறந்து, அடுத்த தலைவரை நோக்கி நகர ஆரம்பிக்கிறது. இதற்கான முழுமுதல் காரணம் ராகுலேதான். ஒரு நூற்றாண்டு இயக்கத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகுவது என்பது துணிச்சலான முடிவுதான். இந்த முடிவு அவர் விரும்பி எடுத்தாகவேகூட இருக்கலாம். ஆனாலும், இவை எதிர்மறையாக வினையாற்றவும் வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. ராகுலைவிட, இந்தியா அறிந்த முகத்தை உடனடியாகக் காங்கிரஸால் உருவாக்கிவிட முடியாது. ஓர் உதாரணமாக எடுத்துக்கொண்டால் சச்சின் பைலட்டும் சிந்தியாவும் சிறந்த பேச்சாளர்கள்தாம்; நல்ல திறமைசாலிகள்தாம். ஆனாலும் அவர்களின் முகம் வடக்குக்கு மட்டும் பிரசித்திப்பெற்றது. கன்னியாகுமரியில் வாழும் பல காங்கிரஸ் தொண்டர்களே சச்சின் பைலட்டை அறிந்திருக்க வாய்ப்பில்லை. இதுதான் கள யதார்த்தம்.

ராகுல் பதவி விலகுவதற்குச் சொல்லும் முழுமுதல் காரணம், தோல்வி. ஆனால், அவர் தோனியிடம் கற்க வேண்டிய பாடம் ஒன்று உள்ளது. அது, வெற்றியோ தோல்வியோ களத்தில் நிற்க வேண்டும். சண்டை செய்ய வேண்டும் என்பதுதான். ராகுலே அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுக்கக் கட்சியைப் பரிந்துரைப்பது என்பது ராகுலின் உயரத்தைக் குறைக்கும். ராகுல் ஒன்றை உணர்தல் வேண்டும். இன்று, காங்கிரஸ் தலைமையகமாக உள்ள 24, அக்பர் சாலை 1961-களில் பர்மா ஹவுஸ்ஸாக இருந்தது. அப்போது அங்கு ஆங் சன் சூகியின் தாயார் இந்தியாவுக்கான பர்மா நாட்டின் தூதராக இருந்தார். அந்தக் காலத்தில் ஆங் சன் சூகி தங்கியிருந்த அறைதான் இன்று ராகுல் காந்தியின் அறையாக உள்ளது. அந்த அறையில் அமர்ந்து ராகுல் யோசிக்க வேண்டியது நிறைய இருக்கிறது. அதில் குறிப்பாக, எண்ணற்ற போராட்டங்களையும் தோல்விகளையும் சந்தித்து சாதனை படைத்த ஜனநாயகப் போராளி ஆங் சங் சூகியின் வாழ்க்கையையும் அறிய வேண்டும்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

காலம் இருக்கிறது ராகுல். பயணிக்க வேண்டிய நேரம் இதுதான். விட்டுவிட்டால் விடியல் இல்லை... போராடுங்கள் தோனியைப்போல... போரிடுபவர்களும் தோற்றுப்போகலாம்.