ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் சூடுபிடித்திருக்கிறது. ஒட்டுமொத்த அமைச்சரவையையும் இறக்கி, தி.மு.க தீவிரமாகப் பணியாற்றிவருகிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அ.தி.மு.க-வுக்கு இன்னும் பூஸ்ட் அளிக்கும்விதமாக அமைந்திருக்கிறது. இதனால் தினசரி பணம், பரிசுமழை கொட்டுவதாகப் பல்வேறு தரப்பினரும் புகார் எழுப்பிவருகின்றனர்.

ஏற்கெனவே தி.மு.க சார்பில் ரூ.3,000, அ.தி.மு.க சார்பில் ரூ.2,000 விநியோகம் செய்யப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதேபோல குக்கர், ஹாட் பாக்ஸ், கொலுசு, வேட்டி, சேலை, ஷாப்பிங் கூப்பன் முதலியவையும் வழங்கப்பட்டிருக்கின்றனவாம்.
இந்த நிலையில் தி.மு.க சார்பாக வீடு வீடாகச் சென்று ஸ்மார்ட் வாட்ச்சுகள் விநியோகம் செய்யப்பட்டிருக்கின்றன என்ற தகவல் பரபரத்துக் கிடக்கிறது. ஃபயர் போல்ட் (Fire Boltt) என்ற நிறுவனத்தின் வாட்ச்சுகள் வழங்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

வாட்ச் வழங்கப்பட்டிருக்கும் பாக்ஸில் அதன் விலை ரூ.7,999 எனக் குறிப்பிடப்பட்டிருப்பதால் வாக்காளர்கள் இன்ப அதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கின்றனராம். ஆண்கள், பெண்கள் இரு தரப்பினருக்கும் தனித்தனியாக வாட்ச் வழங்கப்படுகிறதாம்.
35 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஸ்மார்ட் வாட்ச்களும், 35 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு சொனாட்டா நிறுவனத்தின் லெதர் வாட்ச் ஒன்றும் வழங்கப்பட்டுவருகின்றனவாம். அதேபோல 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு தங்க நிற செயின் வாட்ச்சும் சர்ப்ரைஸாக வழங்கப்பட்டுவருகின்றன என்றும் சொல்கிறார்கள்.

அடுத்தடுத்து மேலும் பல்வேறு பரிசுப்பொருள்களை வழங்கவும் திட்டமிட்டிருக்கின்றனர் எனச் சொல்லப்படுகிறது. இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவிவருகிறது.