Published:Updated:

நடிகர் அஜித் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி வீடுகட்டித் தருவதாக மோசடி! - ஆட்சியரிடம் இளம்பெண் புகார்

புகாரளித்த ராஜேஸ்வரி

நடிகர் அஜித்குமாரின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி, தன்னுடைய கணவரை சிவா என்பவர் ஏமாற்றிவிட்டதாக, இளம்பெண் ஒருவர் ஆட்சியரிடம் புகார் மனு அளித்திருக்கிறார்.

நடிகர் அஜித் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி வீடுகட்டித் தருவதாக மோசடி! - ஆட்சியரிடம் இளம்பெண் புகார்

நடிகர் அஜித்குமாரின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி, தன்னுடைய கணவரை சிவா என்பவர் ஏமாற்றிவிட்டதாக, இளம்பெண் ஒருவர் ஆட்சியரிடம் புகார் மனு அளித்திருக்கிறார்.

Published:Updated:
புகாரளித்த ராஜேஸ்வரி

நெல்லை மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன். கூலித் தொழிலாளியான இவர் குடும்பத்தை நடத்துவதற்காக கேரளாவில் வேலை செய்துவருகிறார். நடிகர் அஜித்குமார் ரசிகரான இவர், புதிய திரைப்படம் வெளியாகும்போது தியேட்டரில் பேனர் வைப்பது உள்ளிட்ட விவகாரங்களில் ஆர்வம் காட்டி வந்திருக்கிறார். அப்போது அஜித்குமார் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த சிவா என்பவருடன் இவருக்குப் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

சிவா
சிவா

நெல்லை தாழையூத்து பகுதியைச் சேர்ந்த சிவா, தன்னிடம் அறிமுகமான ஐயப்பனிடம், தனக்கு அஜித் ரசிகர் மன்றத் தலைவரின் மேலாளர் நெருக்கமானவர் என்று கூறியிருக்கிறார். மேலும், ``நடிகர் அஜித் தன்னுடைய ரசிகர்களில் கஷ்டப்படும் சிலரை மட்டும் தேர்வுசெய்து அவர்களுக்கு வீடுகட்டிக் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்'' என்று தெரிவித்திருக்கிறார். அத்துடன், ஐயப்பன் பெயரை அந்தப் பட்டியலில் சேர்க்கச் செய்து, அவருக்கு வீடு கிடைக்க உதவுவதாகக் கூறியிருக்கிறார்.

வறுமையில் வாடிய ஐயப்பன் தன்னிடம் பேசிய சிவா தெரிவித்ததை உண்மை என்று நம்பியதுடன், எப்படியாவது தனக்கு வீடு கிடைக்க உதவுமாறு தெரிவித்திருக்கிறார். அதையடுத்து வீடு கட்டுவதற்கு நடிகர் அஜித் தரப்பில் 15 லட்சம் ரூபாய் கொடுக்கப்படும் எனத் தெரிவித்த சிவா, அதற்கு முன்பாக பத்திரப்பதிவுக்காக ஒரு லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அதை நம்பிய ஐயப்பன் தனது சேமிப்பிலிருந்து ஏழு மாதங்களில் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறார்.

பண மோசடிக்கான ஆதாரம்
பண மோசடிக்கான ஆதாரம்

ஐயப்பனை நம்பவைப்பதற்காக நடிகர் அஜித் குமார் ரசிகர் மன்ற அலுவலகத்திலிருந்து பேசுவதுபோல சிலரைப் பேசவைத்து அவரிடமிருந்து பணத்தை வசூலித்திருக்கிறார். ஆனால் வீடு கிடைப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் ஐயப்பன் சந்தேகமடைந்து சிவாவிடம் கேட்டபோது நாள்களைக் கடத்தியிருக்கிறார். ஒருகட்டத்தில் பணத்தைத் திருப்பிக் கேட்ட ஐயப்பனுக்குக் கொலை மிரட்டல் விடுத்ததால் போலீஸில் புகார் அளித்திருக்கிறார்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட ஐயப்பனின் மனைவி ராஜேஸ்வரி, இன்று நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார். அதில் நடிகர் அஜித்குமாரின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி தன்னுடைய கணவரை, சிவா என்பவர் ஏமாற்றிவிட்டதாகவும் அவர் மோசடியாகப் பெற்ற பணத்தைத் திரும்பக் கிடைக்க உதவுமாறும் கண்ணீருடன் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

சிவா
சிவா

``நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திராவின் அலுவலகத்தில் பணிபுரியும் சங்கர் என்பவர் பேசுவதுபோல யாரையோ பேசவைத்து என்னுடைய கணவரை சிவா ஏமாற்றிவிட்டார். அவரை நம்பி பத்திரப்பதிவுக்காக ஒரு லட்சம் ரூபாயும், நிலத்தைப் பதிவுசெய்ய வரும் அஜித் ரசிகர் மன்ற நிர்வாகிகளின் செலவுக்காக 10,000 ரூபாயும் கொடுத்து ஏமாந்துவிட்டோம்" எனத் தன்னுடைய புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

நடிகர் அஜித்குமார் ரசிகர் மன்றத்தின் பெயரைப் பயன்படுத்தி தனது குடும்பத்தைப்போல மேலும் சில ஏழ்மையான குடும்பத்தினரையும் சிவா ஏமாற்றியிருப்பதாகவும் ராஜேஸ்வரி தெரிவித்தார். தங்கள் குடும்பத்துக்கு சிவா கொலை மிரட்டல் விடுத்திருப்பதால், உரிய பாதுகாப்பு அளிக்க போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் ஆட்சியரிடம் ராஜேஸ்வரி வலியுறுத்தியிருக்கிறார்.

ஆட்சியரிம் மனு அளித்த ராஜேஸ்வரி
ஆட்சியரிம் மனு அளித்த ராஜேஸ்வரி

இந்தப் புகார் குறித்து சிவாவிடம் கேட்டதற்கு, ``நான் ஐயப்பனிடம் பணம் வாங்கியது உண்மை. அவர் என்னுடைய நண்பர் என்ற அடிப்படையில் பணம் வாங்கினேனே தவிர, நடிகர் அஜித்குமார் ரசிகர் மன்றத்தின் பெயரைப் பயன்படுத்தி வாங்கவில்லை. அவரிடம் வாங்கிய பணத்தை ஓரிரு நாள்களில் திருப்பிக் கொடுத்துவிட்டு உங்களிடம் தெரிவிக்கிறேன்” என்றார். நடிகர் அஜித்குமார் ரசிகர் மன்றத்தின் பெயரில் மற்றொரு ரசிகரிடமே பண மோசடி நடந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.